சிதம்பரம் நடராஜர் கோவில் சர்ச்சை குறித்து தமிழ் சைவ பேரவை தலைவர் கலையரசி நடராஜனை சந்தித்து பல கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...
தொன்றுதொட்டு வருகிற சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை சர்ச்சையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
சிதம்பரம் கனகசபை என்பது தீட்சிதர்களுக்கு மட்டுமானது இல்லை. ஆனால், அவர்கள் தங்களுக்கு மட்டுமே உரியதானது என்பதை நிலைநாட்டும் எண்ணத்தில் பல காலமாக அடிதடி போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் தமிழர்களும் அல்ல ஆரியனும் அல்ல. இப்படிப்பட்ட இவர்களுக்கு சிவதீட்சை இருந்தால் தான் சிவனை தொட்டு அபிஷேகம் செய்ய முடியும் என்ற காரணத்தினால் தமிழகத்தை சார்ந்த சிவாச்சாரியார்கள் தான் இவர்களை உருவாக்கினார்கள். அந்த சிவாச்சாரியார்களையும் இவர்கள் வெளியே அனுப்பி விட்டார்கள். மீதமுள்ள ஒன்றிரண்டு சிவாச்சாரியார்கள் இன்னும் இவர்களோடு இருக்கிறார்கள். ஆகினும் அந்த சிவாச்சாரியார்கள் தான் தீட்சிதர்கள் என்று முன்பு அழைக்கப்பட்டு இருந்தார்கள்.
மேலும், புலிகால் முனிவருடைய தந்தையின் வழிகாட்டுதலின்படி கங்கையில் இருந்து தமிழகத்தில் உள்ள தில்லைவனம் எனும் காட்டுக்குள் சிவபெருமானை வழிபடுவதற்காக வந்தார். இங்கேயே பல காலம் இருந்து சிவபெருமானின் அருளை வேண்டி ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்தார். ஆரியர்கள் யாரும் சிவபெருமானை வணங்க மாட்டார்கள். அவர்களுக்கு கோவிலும் கிடையாது உருவ வழிபாடும் கிடையாது. அப்படிப்பட்ட ஆரிய கூட்டத்தில் புலிகால் முனிவரை தொடர்ந்து பதஞ்சலி, வசித்தர், அருந்ததி போன்ற பல ஆரியர்கள் இங்கு வந்து தில்லை வன காட்டுக்குள் பல காலம் தங்குகிறார்கள். அந்த சமயம் கூட அவர்களுக்கு கோவிலுக்கு செல்ல மாட்டார்கள். கடவுளை எப்படி வழிபாடு நடத்த வேண்டும் என்பதும் தெரியாது.
காலப்போக்கில் சிவனுக்கு கோவில் இருப்பதை தெரிந்து கொண்ட ஆரியர்களை இதற்கு முன்பே இருந்த தில்லை மூவாயிரவர்கள் என்ற தமிழ் சிவாச்சாரியார்கள் வரவேற்று வழிபாட்டு முறைகளை எல்லாம் சொல்லி தீட்சையும் கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட அவர்களையே ஆரியர்கள் இன்றைக்கு வெளியே தள்ளப் பார்க்கிறார்கள். இது காலப்போக்கில் சிவாச்சாரியார்களுக்கும் ஆரியர்களுக்கு அடிக்கடி சண்டை வரக் காரணமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஆரியர்கள் தான் விஷ்ணு பெருமானை கோவிலுக்குள் அனுமதித்து வழிபட்டார்கள். மேலும் ஆரியர்கள் எல்லோரையும் சமமாக பார்ப்பது கிடையாது. எதற்கெடுத்தாலும் நான் நீதிமன்றத்தில் பார்த்து கொள்கிறேன் என்று அவர்கள் சொல்வதற்கான காரணம் இன்றைக்கு வரைக்கும் இந்தியாவில் மனுதர்மம் தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என்ற தைரியம் தான். அந்த மனுதர்ம முறைப்படி இந்த ஆரியர்கள் என்ன தவறுகள் செய்தாலும் அவர்களைத் தண்டிக்க எந்த தண்டனையும் கிடையாது.
சிதம்பரம் கோவிலுள்ள கனகசபை என்றால் என்ன?
கனகசபை என்பது வடமொழி சொல் தான். இறைவனை நேரடியாக தரிசிக்கக் கூடிய அமைப்பில் கட்டப்பட்டுள்ள இடம் தான் கனகசபை. தமிழர்களால் கட்டப்பட்ட கோவிலில் நின்று இறைவனை வழிபடுவதற்கான இடம் தான் அது. அப்படிப்பட்ட நம்மையே அந்த கனகசபையில் இருந்து வழிபடக் கூடாது என்பதற்கான நோக்கம், நாம் அவர்களுக்கு சமமாக இருந்துவிடக் கூடாது என்ற காரணம் தான். அந்த குறிப்பிட்ட 4 நாட்களில் மட்டும் எங்களை நின்று வழிபடக் கூடாது என்று சொல்லிவிட்டு அவர்கள் மட்டும் வழிபடுவதற்காகவா தமிழர்கள் கோவில் கட்டினார்கள்.
தென்பகுதியில் இருந்து வடமாநிலங்களில் எந்த இடத்திலும் சென்று பார்த்தாலும் நடராஜர் சிலையை காண முடியாது. ஏனென்றால் நடராஜர் என்பது ஆரியர்களுக்கு எதிரான நமச்சிவாயம் என்ற வடிவ அமைப்பு. இந்த ஆரியர்கள் சிவனை அழிப்பதற்கு வேள்வி செய்த ஆயுதம் அனைத்தும் நடராஜர் சிலையில் இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த நடராஜரை வழிபடுவது தமிழ் மக்களுடைய உரிமையாகும். அந்த கனகசபையில் நின்று வழிபடுவதற்கு தீட்சிதரும் இணை ஆணையரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எதிர்ப்பு தெரிவித்த இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னால் கேள்வி கேட்க வேண்டும். இந்த நாட்டில் கீழ் சாதியினருக்கு ஒரு நீதி. பணக்காரர்களுக்கும் தீட்சிதர்களுக்கும் ஒரு நீதியா. நீதிமன்றமும் அவர்களுக்கு உடந்தையாக இருந்து செயல்படுவது தான் நாம் செய்த மிகப்பெரிய பாவம்.
சிதம்பரம் கோவிலில் சாதி பெயரை சொல்லி திட்டி அடி உதை நடக்கிறது. இதையெல்லாம் தடுக்க முடியாதா?
அந்த கோவில் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டு தேவாரமும் திருவாசகமும் படிக்கப்பட்டது. அப்படிப்பட்ட கோவிலில் சிவபெருமான் கையால் எழுதப்பட்ட தேவாரத்தையும் திருவாசகத்தையும் படிக்கக் கூடாது என்று சொல்வது மிகப்பெரிய அட்டூழியமாக இருக்கிறது.
சிதம்பரம் கோவில் இன்றளவிலும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. அந்த அளவில் சிதம்பரம் தீட்சிதர்கள் பலம் படைத்தவர்களா?
நீதியை நீதியாக நிலைநாட்டாத வரையில் சிதம்பரம் தீட்சிதர்கள் உலகத்தில் உள்ள அனைத்து அட்டகாசங்களும் செய்வார்கள். அந்த கோவில் சரியாக இல்லாமலும், நகைகள், ஓடுகள் எத்தனை களவு போனது என்ற ஒரு விவரமும் தெரியாது. பணக்காரர்களுக்கு வாடகை விடுவது போல ஆகமத்துக்கு புறம்பான அத்தனை விஷயமும் அந்த கோவிலில் செய்கிறார்கள். அந்த நான்கு பிராமணர்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டு நீதிமன்றம் இன்றைக்கு வரைக்கும் தீர்ப்பளித்து அவர்களை வாழ வைத்து கொண்டிருக்கிறது.
நடராஜர் கோவிலில் தட்சணை பிரிப்பதற்கான பிரச்சனையில் மூர்த்தி என்ற தீட்சிதர் சக பிராமணர்களால் கொல்லப்படுகிறார். இந்த கொலை எதை உணர்த்துகிறது?
ஆரிய பிராமணர்களுக்கு கொலை என்பதெல்லாம் சாதாரண விசயம். பெளத்த மதத்தை சார்ந்த அசோகனின் பேரனுக்கு படைத்தளபதியாக இருந்த சுஷ்யமித்திரன் ஒரு ஆரியன். அவன் பெளத்த மதத்தை அழிப்பதற்காக தனது மன்னனையும் 10,000 பெளத்த பிட்சுகளையும் கொலை செய்து விட்டு மன்னனாக மாறினான். அதனால் ஆரியர்கள் கொலை செய்வதற்கு அஞ்ச மாட்டார்கள். அவர்களிடம் நியாயம் பேசினால் கூட கொலை செய்வார்கள். மூர்த்தி என்பவரை கொலை செய்ததற்கு நடவடிக்கையே எடுக்கவில்லை என்றால் நீதித்துறை எதற்கு இருக்கிறது.
கோவில் நகைகளை பற்றிய விவரத்தை அறநிலையத்துறை கேட்கும் போது அவர்களிடம் சரியான பதில்களை தராமல் நாங்கள் நீதிமன்றத்தில் பார்க்கிறோம் என்று சொல்கிறார்களே?
கருவறைக்குள் மின்சாரம் வைக்கக் கூடாது என்று எந்த ஆகமத்திலும் சொல்லவில்லை. ஆரியர்கள் தான் ஒளிவிளக்கு வைக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். ஏனென்றால் அந்த இருட்டுக்குள் இருக்கும் சாமி சிலையில் இருப்பது தங்கமா? பித்தளையா என்று மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காகத் தான். இன்றளவும் நிறைய தங்கங்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகிறது. அந்த தங்கம் சாமி சிலையில் இருக்கிறதா என்று பக்தனுக்கு தெரிய வேண்டும் அல்லவா? அந்த தங்கத்தின் விவரத்தை ஒரு முறை கூட இவர்கள் வெளியிடவில்லை. அதனால், அந்த தங்கம் இருக்கிறதா, இல்லையா? என்ற கேள்விகளும் வரத்தான் செய்யும்.
இறை வழிபாடுகளில் மட்டும் யாரையும் சமமாக பார்க்காமல் பிரித்து வைத்திருக்கிறார்களே?
இறைவன் பொதுவானவர். ஆனால் தீட்சிதர் நமக்கு சமமானவர் அல்ல என்பதை நிலைநாட்டுவதற்கு தான் இவ்வளவு பலி அங்கு நடக்கிறது. இந்த இடத்தில் தெய்வம் இருக்குமா?மேலும், இவ்வளவு இழிவான அயோக்கியத்தனமிக்க நடவடிக்கை உள்ள இடத்தில் நாம் சாமி தரிசிக்க வேண்டுமா என்று மக்கள் நினைக்க வேண்டும். மக்கள் அந்த கோவிலுக்கு செல்லாமல் இருந்தால் அவர்கள் என்ன செய்ய முடியும். அதனால் மக்களும் சிந்திக்க வேண்டும்.
நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் ஏன் கொண்டு வர முடியவில்லை?
அதற்கு நீதிமன்றம் தான் காரணம். நீதிமன்றம் தெளிவான உண்மையை இன்றைக்கு வரைக்கும் கண் கொண்டு பார்க்கவில்லை. நீதிமன்றம் எப்போது அசைக்க முடியாத ஒரு தீர்ப்பை வழங்குகிறதோ, அப்போது தான் எல்லாம் சரியாக அமையும்.