"முதல்மரியாதை' திரைப்படத்தில் நடித்தவரும், எம்.ஜி.ஆரின் உறவினருமான தீபன் அவ்வப்போது அரசியல் தளத்திற்கு வந்து செல்கிறார். அ.தி.மு.க.வில் தற்போதும் உறுப்பினராக நீடிக்கும் அவரை, நக்கீரனுக்காக சந்தித்தோம். அப்போது அவர்,…""பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருப்பது எம்.ஜி.ஆர். பார்முலா என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது சரிதான். முன்பு காங்கிரஸ் ஆட்சி என்றாலும், ஜனதா ஆட்சி என்றாலும் மத்தியில் எந்த அரசு அமைந்தாலும், மாநில மக்களின் நலனுக்காக அந்த அரசுகளுடன் இணக்கமான உறவை வைத்திருப்பது எம்.ஜி.ஆரின் பார்முலா. தேர்தல் வரும்போதும் கூட்டணியில் அதை கடைப்பிடிப்பார்.
அதே எம்.ஜி.ஆர். பாணியைத்தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருப்பதிலும் அ.தி.மு.க. கடைப்பிடிக்கிறது. எம்.ஜி.ஆர். முதல்வரானபோது, கலைஞர் முதல் ஆறு மாதங்களை அவகாசமாக கொடுத்தார். ஆனால், எடப்பாடி முதல்வராக பொறுப்பேற்றதுமுதல் ஸ்டாலின் அவரை ஆட்சி நடத்தவே விடாமல் இடையூறு செய்கிறார். எடப்பாடி பதவியேற்றவுடன் ஸ்டாலின் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் அவரும் எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொடுத்திருப்பார். ஸ்டாலின் தொடர்ந்து அரசுக்கு சிக்கல் ஏற்படுத்தியதால்தான் எடப்பாடி அரசு மத்திய பா.ஜ.க. அரசுடன் கைகோர்க்க வேண்டியதாயிற்று'' என்றவர், தேர்தல் களம் பற்றிய பார்வையை வெளிப்படுத்தினார்.
"தற்போது நடைபெற்றுள்ள 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளால் தொங்கு சட்டமன்றம் அமைந்தால் குதிரைபேரத்துக்கே வழிவகுக்கும். மக்கள் நலன் சார்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும். உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் மக்கள் அடிப்படைத் தேவைகளுக்காக தவிக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், தேர்தலை நடத்தவிடாமல் நீதிமன்றம் சென்றது தி.மு.க.தான். அவர்கள் தேவைகளுக்கு தடைகேட்டு வழக்குப் போடுவதும், அவர்கள் தேவைக்கு உடனே தேர்தல் நடத்தவேண்டும் என்று கேட்பதும் நியாயமல்ல. அதேசமயம் எப்போது உள்ளாட்சித் தேர்தல் வந்தாலும் மக்கள் நல்ல பதிலை தருவார்கள்.
அ.தி.மு.க.வில் குடும்ப அரசியல் நடப்பதாக கூறுவது தவறு. அதற்கு சாட்சியாகத்தான் சாமானியரான எடப்பாடி முதல்வராகியிருக்கிறார். ஜெயக்குமாரின் மகனுக்கு ஜெயலலிதாவே பதவிகொடுத்தார். ஓ.பி.எஸ். மகனுக்கு வாய்ப்புக் கொடுத்ததும் அதன் அடிப்படையில்தான். அவரும் அ.தி.மு.க.வில்தானே இருக்கிறார். மோடிதான் அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் என்று டி.டி.வி.தினகரன் கூறுவது தவறு. அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள் அ.தி.மு.க.வை விமர்சிக்க தகுதியே இல்லாதவர்கள். இந்தத் தேர்தலில் டோக்கன் வித்தை பலிக்காது என பொறிந்தார்.
மேலும், "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க. மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கூறுவது தவறு. எம்.ஜி.ஆர். மரணத்துக்கு பிறகு கலைஞர்கூட கிண்டலடித்தார். பிறகு அ.தி.மு.க. இணைந்து வெற்றிபெறவில்லையா? அதுபோல ஸ்டாலினுக்கும் அ.தி.மு.க. பதிலடி கொடுக்கும். அ.தி.மு.க. தலைமை அலுவலகம் ஜானகி அம்மையார் பெயரில் இருந்தது. கட்சி தொடங்கியபோது அந்த கட்டிடத்தை கட்சிக்காக எழுதி வாங்கினார். அதை ஜெயலலிதா பாதுகாத்திருக்க வேண்டும். அ.தி.மு.க. அலுவலகத்தை புதுப்பிக்க வேண்டும் என்றபோது என்னிடமிருந்த பத்திரத்தை தலைமை நிலையச் செயலாளரிடம் கொடுத்துவிட்டேன். ஆனால், அதை சசிகலா என்ன செய்தார் என்பது எனக்கு தெரியாது. இந்தக் கட்டிடம் தற்போது யார் பெயரில் இருக்கிறது என்று தற்போது பொறுப்பில் இருப்பவர்கள் அறியவேண்டும்.
ஜானகி அம்மையார் உயிரோடு இருந்தபோது நான் டீன்ஏஜ் பையன். அப்போது எனக்கு அரசியல் ஆசை வரவில்லை. ஆனால், இப்போதும் நான் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராகத்தான் இருக்கிறேன். கட்சித் தலைமை அழைத்தால் பிரச்சாரத்துக்குச் செல்வேன். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் அழிந்துவிடாமல் பாதுகாக்க நிச்சயமாக பணியாற்றுவேன்''’என்றார்.