முன்னாள் அமைச்சர் விரட்டியடிப்பு, இ.பி.எஸ். ஃப்ளக்ஸுக்கு சாணியடிப்பு உள்ளிட்ட ஒரு சில அசம்பாவிதங்கள் தவிர்த்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை சுமூகமாக நடத்தி முடித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது பிறந்தநாள் விழாவும் 60-வது நினைவு குருபூஜை விழாவும் அக்டோபர் 30-ஆம் தேதி கொண்டாட தயாரான வேளையில், முன்னதாகவே பசும்பொன் திருக்கோவிலில் கும்பாபிஷேகத்தை துவக்கியது காந்தி மீனாள் நடராசன் தலைமையிலான நிர்வாகம். இதற்கு முன்னதாக 2014 பிப்ரவரியில் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட முத்துராமலிங்க தேவரின் தங்கக் கவசத்தை யார் பெற்று பசும்பொன்னில் சாற்றுவது? என்கிற குழப்பமிருக்க, இ.பி.எஸ். தரப்பும் ஓ.பி.எஸ். தரப்பும் ‘நாங்கள்தான் உரிமைதாரர்கள். எங்களிடம்தான் வழங்கவேண்டும்’ எனப் போட்டி போட்டு நீதிமன்றத்திற்கு சென்றனர்.
லாக்கரில் இருக்கும் தங்கக் கவசத்திற்காக அ.தி.மு.க. பொருளாளருடன் இணைந்து கையெழுத்திடும் கோவில் நிர்வாகி காந்தி மீனாள் நடராசனிடம் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென பசும்பொன்னிற்கே வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் ஆர்.பி. உதயகுமார் தலைமையிலான இ.பி.எஸ். அணியினர். இவ்வேளையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இருதரப்பிலும் தங்கக்கவசத்தை ஒப்படைக்காமல் 2017-ல் நடந்ததுபோல் வருவாய்த்துறையே தங்கக்கவசத்தை பசும்பொன்னில் சாற்ற வேண்டுமென உத்தரவிட்டது.
கும்பாபிஷேக தினத்தன்று அனைத்துக் கட்சி தரப்பிலிருந்தும் பலரும் கலந்துகொண்ட நிலையில் ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து அவருடைய மகன் பிரதீப் கலந்துகொள்ள இ.பி.எஸ். தரப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து முத்துராமலிங்க தேவர் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்த வேளையில், ‘இ.பி.எஸ். வாழ்க!’ என்கிற கோஷம் விண்ணைப் பிளக்க. "நீ அமைச்சராக இருந்திருக்கலாம். அதுக்காக இப்படி கத்துனா ஆகாது! வந்தியா... சாமிய கும்பிட்டியான்னு போய்க்கிட்டே இருக்கணும். அதவிட்டு அவன் வாழ்க இவன் வாழ்கன்னு சொன்னா இருக்கமாட்ட'' என அங்கிருந்த மக்களால் ஆவேசமாக விரட்டியடிக்கப்பட்டார் ஆர்.பி.உதயகுமார்.
இதேவேளையில், அபிராமம் பேருந்து நிலைய முச்சந்தியில் இ.பி.எஸ். தரப்பு ஆட்களால் வைக்கப்பட்டிருந்த நீண்ட ஃப்ளக்ஸில் இ.பி.எஸ். முகத்தில் சாணி வீசப்பட்டது. இதனால் அந்த ஃப்ளக்ஸ் அப்புறப்படுத்தப்பட்டு அதுபோல் புதிய ஃப்ளக்ஸ் வைக்கப்பட்டது. இதற்கு முந்தைய நாட்களில் ஓ.பி.எஸ். தரப்போ, "நாம்தான் இந்த சமூக மக்களின் பிரதிநிதி. நாம்தான் உண்மையான அ.தி.மு.க.' என்பதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும். அதற்காக ஓ.பி.எஸ்.ஸின் வருகையைக் கொண்டாட வேண்டும். ஒன்றியத்திற்கு 15 வாகனங்களாவது வரவேண்டுமென முதுகுளத்தூரில் எம்.பி. தர்மர் தலைமையில் ஆலோசனைக் கூட்டத்தினை நடத்தியது தனிக்கதை.
பசும்பொன்னில் யார் கோலோச்சுவது? என்கின்ற ரீதியில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தரப்பு மண்டையைப் பிய்க்க, முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருணாஸோ, ஒட்டு மொத்த சமூக மக்களின் பிரதிநிதியாக தன்னைக் காட்டிக் கொள்ள பசும்பொன்னில் அவர் வழக்கமாக அன்னதானம் வழங்கும் இடத்தில், புதிதாக விமான நிலைய மாடலை உருவாக்கி, அதற்கு உ.முத்துராமலிங்கத் தேவர் மதுரை விமான நிலையம் எனப் பெயரிட்டு தனியாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார்.
இவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்களே இல்லை என, மாவட்டத்தின் அமைச்சரான ராஜகண்ணப்பனும் மா.செ. காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கமும், பசும்பொன்னிலிருந்து க.விலக்கு, பார்த்திபனூர் வரை ஆளுக்குப் பத்து சுவரைப் பிடித்துக்கொண்டு வரவேற்பு எழுதினர். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அமைச்சர் ராஜகண்ணப்பன் எழுதும் சுவரில் மா.செ. பெயரும், மா.செ. எழுதும் சுவரில் அமைச்சர் பெயரும் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டு தங்களது கோஷ்டிப் பூசலை வெளிப்படுத்தினர். இது தலைமைக்கு தெரியவர, இரண்டு பேரும் இணைந்தே அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். “இன்று பொதுவாழ்க்கையிலும், அரசியலிலும் பலர் ஜொலித்துக் கொண்டிருப்பதற்கு முழு மற்றும் முதல் காரணம் தேவர் திருமகனாவார்” என்றார் அமைச்சர் துரைமுருகன்.
அதற்கடுத்து இ.பி.எஸ். தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் உள்ளிட்டோர் அமைதியாக வந்து அஞ்சலி செலுத்த, பின் அங்கு வந்த ஓ.பி.எஸ்., முத்துராமலிங்க தேவருக்கு வெள்ளிக்கவசம் வழங்கி, அதனை முக்கிய நாட்களில் அணிவிக்குமாறு வேண்டிக் கொண்டு உருத்திராட்ச மாலையை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ச்சியாக, வைகோ, பா.ஜ.க. அண்ணாமலை, அ.ம.மு.க. தினகரன், தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, சசிகலா என அஞ்சலி செலுத்திய வண்ணமிருந்தனர்.
படங்கள்: விவேக்