53 நாட்கள் சிறை... அலைக்கழிப்பு... உடல் நிலை பாதிப்பு... மருத்துவமனை... எல்லாம் தாண்டி மீண்டும் களத்திற்கு வந்துவிட்டார் திருமுருகன் காந்தி. அவரை சந்தித்தோம். பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட விதத்திலிருந்து சிறையில் அவரை நடத்திய விதம் வரை பல சர்ச்சைகள். என்ன நடந்தது, எப்படி இருந்தது என்று நக்கீரனிடம் பகிர்ந்தார்.
ஐரோப்பாவில் இருந்து பெங்களூரு வந்து இறங்கியதும் விமான நிலையத்தில் உள்ள இமிகிரேஷன் அதிகாரிகள் என்னை கைது செய்தனர். ஏன் என்னை கைது செயகிறீர்கள் என்று கேட்டதற்கு, என்ன வழக்கு என்பதெல்லாம் தங்களுக்குத் தெரியாது என்றும் என்னை கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைக்கும் படி அவர்களுக்கு உத்தரவு வந்திருக்கிறது என்றும் சொன்னார்கள். அதன் பின் கர்நாடக காவல் துறையிடம் என்னை ஒப்படைத்தனர். அவர்களும் ஒரு கட்டம்வரை என்ன வழக்கு என்று தெரியாமல்தான் இருந்தார்கள். அதன் பின் நான் கைது செய்யப்பட்டது தமிழகத்துக்குத் தெரியவந்து செய்தி பரவியத்துக்கு பிறகுதான் கர்நாடக காவல்துறைக்கு நான் 124ஏ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளேன் என்று தெரியவந்தது. அவர்கள் 124ஏ என்றதும் என்னை ஒரு தீவிரவாதி போல் நடத்தினார்கள். நான் என் தரப்பு விளக்கத்தை எடுத்துச் சொன்னப்பிறகே ஓரளவுக்கு மரியாதையோடு நடத்தினார்கள். மாலை தமிழ்நாட்டு காவல்துறை கர்நாடகாவிற்கு வந்தனர். அவர்களிடம் என்னை ஒப்படைத்தனர். அவர்கள் அங்கிருக்கும் ஒரு லோக்கல் மாஜிஸ்திரேட்டிடம் கொண்டு போனார்கள். ஆனால், அவரும் என்னை பார்க்கவில்லை, நானும் அவரை பார்க்கவில்லை. அதே போல் மருத்துவ பரிசோதனைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கேயும் நான் வாகனத்திலேதான் இருந்தேன். ஆனால், எனக்கான மருத்துவ பரிசோதனைக்கான சான்றிதழை பெற்று விட்டார்கள்.
அங்கிருந்து கிளம்பி அதிகாலை ஒரு 7.30 மணிக்கு என்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அப்போது காவல்துறை, ஐநா மன்றத்தில் அவர் பேசியதை சமூக வலைதளம் மூலமாக தமிழ்நாட்டில் ஒளிபரப்பி இங்கு கலவரத்தை உண்டு செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்றனர். நான் இதை ஒளிபரப்பவில்லை, ஐநாவே இதை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஒளிபரப்புகிறது. அதை எடுத்துதான் நான் என் சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். ஒளிபரப்பியதற்காக வழக்கு பதிய வேண்டும் என்றால் ஐநா மீதுதான் பதிய வேண்டும் என்றேன். அதன் பின்தான் அதன் அபத்தம் நீதிமன்றத்திற்குப் புரிந்தது. அதன் பின் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றேன்.
முதலில் புழல் சிறைக்கு என்னை அதிகாலை 4.30 மணிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் என்னை வேலூர் சிறைக்கு கொண்டுபோகும்படி என்னுடன் வந்திருந்த காவலர்களிடம் சொல்ல, அவர்கள் அதற்கான உத்தரவு இல்லை என்று சொல்லிவிட்டு புழலில் அடைத்தனர். பின் 10 மணிக்கு எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு அனைவரும் இருக்கும் பகுதியில் இல்லாமல் தனிமையில் யாரும் பயன்படுத்தாமல் இருந்த சிறைத் தொகுப்பில் என்னை அடைத்தனர். 200 பேர் இருக்கக் கூடிய அளவிற்கு அந்த தொகுப்பு இருக்கும். ஆனால், அது பயன்பாடின்றி இருந்தது. அதில் நான் மட்டும் தனிமையில்தான் இருந்தேன்.அந்தத் தொகுப்பு சிறையில் இருந்து நான் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது. என் அடிப்படை தேவையான உணவு அறைக்கோ நூலகத்திற்கோகூட நான் செல்ல கூடாது. எனக்கு தேவையான அனைத்தும் என் சிறைக்குக் கொண்டுவரப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துவிட்டனர்.
குறிப்பாக பொதுவான சிறைக் கைதிகளுக்கும் எனக்கும் கொடுக்கப்பட்ட உணவும் கூட வெவ்வேறுதான். அதனால் எனக்கு வயிற்றுபோக்கும்கூட ஏற்பட்டது. இதையெல்லாம் நான் நீதிமன்றத்தில் பதிவு செய்தேன். நீதிபதியும் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அது எதையுமே அந்த சிறை நிர்வாகம் முறைப்படி செய்யவில்லை. இந்த நிலையில்தான் செப் 23-ஆம் தேதி மயக்கம் அடைந்து சிறையில் விழுந்தேன். எனக்கென்று இருக்கும் காவலர் இதை பார்த்துவிட்டு உடனடியாக சிறையில் இருக்கும் மருத்துவமனைக்குள் இருக்கும் மருத்துவரை அழைத்துவந்தார். ஆனால், என் சிறையின் சாவி அவரிடம் இல்லாததால் மீண்டும் ஓடிப்போய் சாவியைக் கொண்டுவந்தார். அதன் பின் என்னை தூக்கிச் செல்ல அவர்கள் ஸ்ட்ரக்ச்சர் கொண்டுவர தாமதம் ஆனதால் அங்கிருந்த ஒரு காவலரே என்னை அவரின் தோளில் தூக்கிபோட்டுக்கொண்டு சிறையினுள் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மீண்டும் மறுநாளும் எனக்கு மயக்கம் ஏற்பட்டதும் நான் அவர்களின் தடைகளை எல்லாம் மீறி நானே சிறையில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு இருக்கும் மருத்துவர் என்னை வெளியே இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துதான் சிகிச்சை அளிக்கவேண்டும் என்றார். அதை சிறை நிர்வாகம் மறுத்தது. அப்போதுதான் நான் சிறை அதிகாரியிடம் கடுமையான முறையில், "நீங்கள் இப்படி எனக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளைக்கூட தடுத்தீர்கள் என்றால் பிறகு எனக்கு என்ன நேர்ந்தாலும் நீங்கள்தான் பொறுப்பு என்று நான் பதிவு செய்யவேண்டியது இருக்கும்" என்று சொன்னேன். இந்த விஷயத்தால் என் நிலைமை மற்ற சிறைவாசிகளுக்குத் தெரியவந்து அவர்கள் மூலமாக செய்தி வெளியே சென்று என் வழக்கறிஞர்களிடம் சென்றுள்ளது. அதன்பிறகே, அடுத்த திங்கள்கிழமை காலை என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.