நூற்றாண்டு கடந்த திராவிட அரசியல் இயக்க வரலாற்றில் முக்கால் நூற்றாண்டுகால பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர் பேராசிரியர் க.அன்பழகன். பெரியாரின் கொள்கைத் தலைமையை ஏற்ற தொண்டர். அண்ணாவின் இயக்கத்தில் அன்பிற்குரிய தம்பி. கலைஞரின் நம்பிக்கைக்குரிய தோழர் என தனது 98 வயது வரை திராவிட இயக்கப் பாதையில் தளராமல் நடைபோட்டவர். இராமையா என்கிற தனது பெயரை திராவிட இயக்கம் ஊட்டிய தமிழ்ப் பற்றின் காரணமாக, அன்பழகன் என மாற்றிக் கொண்டவர். அரை நூற்றாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தலைவராக இருந்த பெருமைக்குரியவர் கலைஞர் என்றால், அந்த 50 ஆண்டுகாலமும் கலைஞருக்குத் துணையாக இருந்து, இயக்கத்தின் தத்துவத் தலைமையாக விளங்கியவர் பேராசிரியர் அன்பழகன். அவர், கலைஞரைவிட ஒன்றரை வயது மூத்தவர். திருவாரூரில் நடந்த சிக்கந்தர் விழா எனும் இஸ்லாமிய நிகழ்வில் கலந்து கொண்ட பேரறிஞர் அண்ணா, தன்னுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவரான அன்பழகனையும் அழைத்து வந்திருந்தார். அதுதான், அவருக்கும் கலைஞருக்குமான அறிமுக நிகழ்வாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து, திருவாரூரில் கலைஞர் நடத்தி வந்த தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் ஆண்டுவிழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார் அன்பழகன். இருவருக்குமிடையிலான கொள்கை உறவு வலுப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக தன்னுடன் பயின்ற நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் உள்ளிட்டோருடன் இணைந்து திராவிட இயக்கத்தை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு, பெரியாரின் கொள்கைகளை முழங்கிய அன்பழகன், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியதால், இயக்கத்தினர் அவரைப் பேராசிரியர் என்றே அன்புடன் அழைத்தனர். திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா தொடங்கியபோது அவருடன் இணைந்து செயலாற்றத் தொடங்கினார் பேராசிரியர் அன்பழகன. பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் தமிழுணர்வையும் திராவிடக் கொள்கைகளையும் முன்வைத்து பேசிய கருத்துகளால் அண்ணாவின் அன்பிற்குரிய தம்பிகளில் ஒருவரானார்.
புதுவாழ்வு என்ற பத்திரிகையை நடத்தி அதிலும் கொள்கைகளை முழங்கினார் பேராசிரியர் அன்பழகன். 1957ல் தி.மு.க. முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு, 15 இடங்களில் வென்றது. அண்ணா, கலைஞர் வரிசையில் அந்தத் தேர்தலில் எழும்பூர் தொகுதியிலிருந்து பேராசிரியர் அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் தோல்வியடைந்த நிலையில், ஆசிரியர்களுக்கான சட்டமேலவைத் தேர்தலில் வென்று எம்.எல்.சி. ஆனார். எம்.எல்.ஏ.வாகவும் எம்.எல்.சி.யாகவும் தமிழின் உரிமைகளையும் தமிழர்களின் நலன்களையும் சட்டமன்றத்தில் வலியுறுத்தும் அழுத்தமான குரலாக பேராசிரியர் அன்பழகனின் குரல் ஒலித்தது. 1965ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போரில் சிறைப்படுத்தப்பட்டார். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் அன்பழகனின் குரல் டெல்லியில் ஒலிக்கத் தொடங்கியது. இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்தும், மாநில உரிமைகளை வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் முழங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினராக அமொரிக்கப் பயணம் மேற்கொண்ட பேராசிரியர் அன்பழகன், அங்கே புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்ற முதல்வர் அண்ணாவை சந்தித்து அவருக்கு உறுதுணையாக இருந்தார். அண்ணாவின் மறைவயைடுத்து, தி.மு.கவுக்கு கலைஞர் தலைமை தாங்கிய நிலையில், தன் சொந்த விருப்பு வெறுப்புகளைக் கடந்து, கட்சியில் மூத்தவர் என்பதையும் கடந்து, திராவிட இயக்கத்தைக் காத்திட வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் கலைஞரின் தலைமையினை ஏற்று செயல்படத் தொடங்கினார். 1971ல் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று, கலைஞரின் அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று செயலாற்றினார். தி.மு.கவில் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரைத் தொடர்ந்து பொதுச்செயலாளராக 1978ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பேராசிரியர் அன்பழகன் அந்தப் பொறுப்பில் 42 ஆண்டுகள் நீடித்தது இயக்க வரலாற்றில் சாதனையாகும்.
1977, 1980ஆம் ஆண்டுகளிலும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் தன் பணிகளை மேற்கொண்டார். 1983ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கலைஞரும், பேராசிரியரும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். 1984ல் நடந்த தேர்தலில் பூங்கா நகர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். மத்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றதால், பேராசிரியர் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேரின் பதவியைப் பறித்தார் அன்றைய அ.தி.மு.க. அரசின் சபாநாயர் பி.ஹெச்.பாண்டியன்.
பதவிகள் கிடைத்தாலும் இழந்தாலும், தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் சமநிலையில் இருப்பது பேராசிரியர் அன்பழகனின் இயல்பு. திராவிட இயக்க கொள்கைகளை முழங்குவதும், தமிழ் உணர்வை ஊட்டுவதுமே தனது இலட்சியம் என செயல்பட்டவர் அவர். 1989-91, 1996-2001 ஆகிய தி.மு.க. ஆட்சிக்காலங்களில் கல்வி அமைச்சராகவும், 2006-2011 தி.மு.க. ஆட்சியில் நிதியமைச்சராகவும் திறம்பட செயலாற்றினார் பேராசிரியர் அன்பழகன். 2001-06ஆம் ஆண்டில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தன் பணியினை மேற்கொண்டவர். அவரது நிரந்தரப் பதவி என்பது திராவிட இயக்க தத்துவப் பேராசிரியர் என்பதுதான். தி.மு.க.வின் பிரம்மாண்ட மாநாடுகளில் கூடுகின்ற இலட்சக்கணக்கான தொண்டர்களிடம் அன்றாட அரசியலைப் பேசாமல், திராவிட இயக்கத்தின் கொள்கை, அதன் நோக்கம், சமூக நீதிப் பாதையில் பெற்றிருக்கின்ற வெற்றி, ஆரிய ஆதிக்கத்தின் சவால்கள், தமிழர்களின் பண்பாட்டு பெருமை, அவற்றை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் என உணர்ச்சிப்பெருக்குடன் உரையாற்றும்போது, தத்துவப் பேராசிரியர் எளிமையாக வகுப்பெடுப்பது போலவே இருக்கும்.
பேராசிரியர் அன்பழகன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஒரு விவாதத்தில், “நீங்கள் பேராசிரியர் அல்ல. உதவிப் பேராசிரியர்தான்” என்றார். அதற்கு அன்பழகன், “ஆமாம்.. நான் உதவிப் பேராசிரியர்தான். அதுதான் நான் பார்த்த பழைய வேலை என் இயக்கத்தினர் அன்புடன் பேராசிரியர் என்கிறார்கள். நான் என் பழைய வேலையை வெளிப்படையாக சொல்ல முடியும். முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தன்னுடைய பழைய வேலையை சொல்ல முடியுமா?” என்று கேட்டார். ஜெயலலிதா உள்பட அ.தி.மு.கவினர் அதிர்ந்து வாயடைத்துப் போனார்கள். அதே ஜெயலலிதாவின் ஆட்சியில் பேராசிரியர் அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை போட்டார்கள். முறைகேடு தொடர்பாக எந்த ஆவணமும் கிடைக்கவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறையினர் புறப்பட்டபோது அவர்களிடம் பேராசிரியர் அன்பழகன், “என் புத்தக அலமாரியை சுத்தம் செய்ய வேண்டும் என ரொம்ப நாட்களாக நினைத்திருந்தான். சோதனை என்ற பெயரில் அதையெல்லாம் தூசு தட்டி வைத்ததற்கு நன்றி” என்றார்.
கட்சிக்காரர் ஒருவரின் திருமணத்திற்கு பேராசிரியர் அன்பழகனை அழைத்திருந்தார்கள். அவர் வந்தார். புரோகிதரை வைத்து மந்திரம் ஓதி திருமணம் நடந்து கொண்டிருந்தது. “அப்புறம் எதற்கு என்னை அழைத்தீர்கள்?” எனக் கோபமாக கேட்டபடி, மண்டப வாசலில்கூட கால் வைக்காமல் திரும்பிவிட்டார். கொள்கைகளிலிருந்து விலகுபவர்களும், இயக்கத்தை விட்டு வெளியேறியவர்களும் தன் சொந்தக்காரர்களாக இருந்தாலும் ரத்த பந்தங்களாக இருந்தாலும் அவர்களுடனான உறவை விரும்பமாட்டார் பேராசிரியர் அன்பழகன். தி.மு.க.வைச் சார்ந்தந்தவர்களே அவரது உடன்பிறப்புகள், சொந்த பந்தங்கள். திராவிட இயக்க கொள்கையை பரப்புவதும், தமிழர் பண்பாட்டு அடையாளங்களை தலைமுறை கடந்து விளக்குவதுமே பேராசிரியரின் வாழ்நாள் இலட்சியமாக இருந்தது. நீங்களும் பேச்சாளராகலாம், தமிழர் திருமணமும் இனமானமும், தமிழ்க்கடல் அலைஓசை, வகுப்புரிமைப் போராட்டம் உள்ளிட்ட 41 புத்தகங்களை எழுதியிருக்கிறார் பேராசிரியர் அன்பழகன்.
கட்சியில் நீண்டகாலம் இரண்டாம் இடத்திலேயே இருந்தவர் பேராசிரியர் அன்பழகன். அண்ணா காலத்தில் கலைஞருக்கு சீனியர். கலைஞர் காலத்தில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். அதன்பின்னர், மு.க.ஸ்டாலின் தலைவரான போதும் அவருக்கு தந்தையின் நிலையிலிருந்து வழிகாட்டியவர். ஓர் இயக்கத்தின் வளர்ச்சியையும் அதன் தத்துவத்தையும் மட்டுமே இலட்சியமாக கொண்டவர்கள், தன்னை முன்னிறுத்தாமல், தனக்கு கிடைத்த இடத்தைத் தக்க வைத்துக்கொண்டு, இயக்கத்தின் வெற்றிக்காகத் தலைமைக்கு கட்டுப்பட்டு, கட்சியின் மனசாட்சியாக செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் பேராசிரியர் அன்பழகன்.