பிளஸ்-2 பொதுத்தேர்வில், மாணவர்களே சுயமாக சிந்தித்து எழுதும் வகையிலான வினாக்களுடன் தமிழ் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு இருந்ததாக ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நடப்பு 2019-2020ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் தலைமையிலான குழுவினர், புதிய பாடப்புத்தகங்களை எழுதினர். வழக்கமாக தேர்வுகளின்போது, பாடப்புத்தகத்தில் ஒவ்வொரு பாடத்தின் பின்பகுதியில் உள்ள மாதிரி வினாக்களில் இருந்து வினாக்கள் தேர்வு செய்யப்பட்டு, வினாத்தாள் வடிவமைக்கப்படும். சில வினாக்கள் பாடப்பகுதிக்குள்ளிருந்தும் கேட்கப்படும். தேர்வுக்கு முன்பாக மாதிரி வினாக்கள் கொண்ட வினாவங்கி உள்ளிட்ட கையேடுகளும் வழங்கப்படும்.
ஆனால், இந்த முறை அத்தகைய வழமையான நடைமுறைகள் சிலவற்றை கொஞ்சம் மாற்றியிருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை. இந்த புதிய மாற்றங்கள், திங்கள்கிழமை (மார்ச் 2) தொடங்கிய பிளஸ்-2 தமிழ் பொதுத்தேர்வு வினாத்தாளிலேயே தென்படத் தொடங்கியிருப்பது, நல்ல தொடக்கத்திற்கான அறிகுறிகள் என்கிறார்கள் ஆசிரியர்கள்.
தர்மபுரி மாவட்டம் மானியாதஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளித் தமிழ் ஆசிரியர் சிவாவிடம் பேசினோம்.
''பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழ் வினாத்தாள், பொதுவாக எளிமையாக இருந்தது. யாரும் தோல்வி அடைவதற்கு வாய்ப்புகள் இல்லை. அதேநேரம், மாணவர்கள் தானாகவே சிந்தித்து எழுதக்கூடிய வகையிலும் சில வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. சில வினாக்கள், பாடப்புத்தகத்தில் இருப்பதுபோல் அல்லாமல் சற்று சுற்றி வளைத்து கேட்கப்பட்டு இருந்தன.
பகுதி-4ல், 6 மதிப்பெண்கள் பிரிவில், 46வது வினாவாக, 'சாலை விபத்தில்லா தமிழ்நாடு - இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?' என்று கேட்கப்பட்டு உள்ளது. பிளஸ்-2 தமிழ் உரைநடை பகுதியில், சாலை விதிகள் என்ற தலைப்பில் ஒரு பாடம் இடம்பெற்றுள்ளது. சாலை விபத்துகளில் அதிகளவில் உயிரிழப்புகளைச் சந்திக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இத்தகைய சூழலில் பள்ளி மாணவர்களுக்கு சாலை விபத்துகள் குறித்த பாடம் மிகவும் அவசியம் என்பதை உணர்ந்தே சாலை விதிகளுக்காக ஒரு பாடம் வைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
சாலை விதிகள், விபத்துகளை தவிர்ப்பது குறித்து தேர்வர்களே சிந்தித்து எழுதும் வகையில், 'சாலை விபத்தில்லா தமிழ்நாடு' பற்றி வினா கேட்டிருப்பதும் வரவேற்கப்பட வேண்டியது. ஏனெனில், இந்த வினாவுக்கான பதில் புத்தகத்தில் இல்லை. ஆகையால் மாணவனே அனுபவ ரீதியில் உணர்ந்ததை, கேட்டு அறிந்ததை அல்லது அவனுடைய ஆக்கப்பூர்வமான சிந்தனையை பதிலாக எழுதலாம். மாணவன் தன் சிந்தனைக்கு உதித்த பயனுள்ள கருத்துகளை எத்தனை வரிகளில் இவ்வினாவிற்கு பதில் அளித்தாலும் அதற்கு முழு மதிப்பெண் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
பகுதி-2ல், 18வது வினாவாக, 'வயலுக்குள் யானையைத் தனித்து விடுவதால் ஏற்படும் விளைவு யாது?' என்று கேட்கப்பட்டு உள்ளது. இந்த வினா, 'காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே' என்று தொடங்கும் புறநானூறு பாடலோடு தொடர்புடையது. ஆனாலும், செய்யுளோடு தொடர்பு இல்லாமல் போனாலும், பொதுவாகவே ஒரு யானையை வயலில் தனித்து விட்டால் என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் என்ற பொதுப்புரிதலுக்கு உட்பட்டு பதில் எழுதும் வகையில் வினா கேட்கப்பட்டு உள்ளது. இந்தப்பாடலைத்தான், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2019ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது மேற்கோள் காட்டினார். ஒரு தமிழாசிரியராக நான் என் மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் மேற்கோள் காட்டிய புறநானூற்றுப் பாடலை யுடியூப் காணொலியாக காண்பித்து மாணவர்களுக்கு புரிய வைத்திருக்கிறேன்.
அதேபோல் ஒரு மதிப்பெண் பிரிவில், 'மாதவி பெற்ற பட்டம்?' என்ற வினா கேட்கப்பட்டுள்ளது. மாதவி, தலைக்கோலி என்ற பட்டம் பெற்றவள். ஆனால், புத்தகத்தில் இதற்கான பதில் இல்லை. இந்தப்பாடப்பகுதியை நடத்தும்போது ஆசிரியர்கள் கூடுதலாக தகவலாக தலைக்கோலி பட்டம் பற்றி பயிற்றுவித்திருந்தால் மட்டுமே இவ்வினாவிற்கு மாணவர்களால் பதில் அளிக்க முடியும். அதாவது, புத்தகத்தில் உள்ள வரிகளை மட்டுமே இனி ஆசிரியர்களால் போதித்துவிட்டுச் சென்றுவிட முடியாது. குறிப்பிட்ட செய்யுள், உரைநடைக்குப் பின்னால் உள்ள விரிவான தகவல்கள், அதன் தற்போதைய மாற்றங்கள் குறித்தும் ஆசிரியர்கள் அறிந்து கொண்டு, மாணவர்களுக்கு பயிற்றுவிப்பது புதிய பாடத்திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது,'' என்கிறார் தமிழாசிரியர் சிவா.
கரூர் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் தேவி கூறுகையில், ''பிளஸ்-2 பொதுத்தேர்வில், நெடுவினா பகுதியில், சாலை விபத்தில்லா தமிழ்நாடு என்ற வினா, மாணவர்களே சிந்தித்து தங்களது யோசனைகளை முன்வைக்கும் விதமாக வினா கேட்கப்பட்டு இருந்தது. இதே பகுதியில், ''நடிகர் திலகம் என்ற பட்டம் சிவாஜிக்கு என்பதை நிறுவுக'' என்ற வினாவும் கேட்கப்பட்டு இருந்தது. பிளஸ்-2வில், நடிகர் திலகம் சிவாஜி பற்றிய பாடமும் புத்தகத்தில் இருக்கிறது. ஆனாலும், புத்தகத்தில் இல்லாத, இந்த வினாவிற்கு பொருத்தமான கருத்துகளை உரிய தரவுகளுடன் எழுதினாலும் மாணவர்களுக்கு முழு மதிப்பெண் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இதுபோன்ற மாற்றங்களைத்தான் எதிர்பார்த்தோம். அது இப்போது நடந்திருக்கிறது. இத்தகைய மாற்றங்களால், ஆசிரியர்கள் என்போர், இனிமேல் புத்தகத்தில் உள்ளதை வைத்து 'கூறியது கூறல்' என்று இல்லாமல், அவர்களும் புத்தகத்திற்கு வெளியே நிறைய தகவல்களை திரட்டி, தங்களை 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் தமிழ்ப்பாட பொதுத்தேர்வு வினாத்தாள் மிக எளிமை அல்லது மிகக்கடினம் என்று இல்லாமல் எல்லா தரப்பு மாணவர்களும் எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டு இருந்தது வரவேற்புக்குரியது,'' என்றார்.
தமிழ் வினாத்தாள் வடிவமைப்பில் தொடங்கப்பட்டிருக்கும் இந்தப்புதிய உத்தி, அடுத்து வரும் ஏனைய பாடத்தேர்வுகளிலும் இடம்பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் ஆசிரியர்கள், மாணவர்களிடையே நிலவுகிறது.