Skip to main content

இந்தியாவின் 'தலை'யில் வலி - காஷ்மீர் சமீபத்திய பதற்றம்! 

Published on 09/05/2018 | Edited on 09/05/2018

இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது. அதில், ஒரு வீட்டின் மாடியில் கூட்டமாக நின்றும் அமர்ந்தும் கொண்டு கோஷம் எழுப்புகிறார்கள் மக்கள். திடீரென்று, அதில் ஒரு பெண்ணுக்குத் துப்பாக்கி கொடுக்கப்படுகிறது. அதை வாங்கி வானை நோக்கி சுடுகிறார். கூட்டம் ஓங்கி குரலெழுப்பி ஆர்ப்பரிக்கிறது. சினிமா காட்சி போல இருக்கும் இந்த வீடியோ காஷ்மீரில் சமீபத்தில் என்கவுண்டர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட சோபியன் மாவட்டத்தில் ஹெப் என்ற கிராமத்தில் எடுக்கப்பட்டது என்றும் அந்த துப்பாக்கி குண்டு மரியாதையை கொல்லப்பட்ட தன் மகன் சதார் பத்தர்க்கு கொடுப்பது அவரது தாய் எனவும் கூறப்படுகிறது. சத்தார் பதார், சமீபத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட ஹிஜ்புல் முஜாஹிதீன் இயக்க கமாண்டர்.  
 

gun shoot

 

 "தங்கள் கைகளில் துப்பாக்கியையும் கற்களையும் தூக்கியிருப்பவர்கள் அப்பாவி ஏழை இளைஞர்கள். தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை தீவிரவாதத்திலிருந்து காக்க வேண்டும். அவர்கள் 18 வயதிலும், 20 வயதிலும் தங்கள் உயிரை இழக்க அனுமதிக்கக் கூடாது. மத்திய அரசு காஷ்மீர் ரத்தம் சிந்துவதைத் தடுக்க, நடுநிலையான வழியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இந்த சம்பவங்களைத் தொடர்ந்து பேசியிருக்கிறார் பாஜக கூட்டணியோடு  ஆட்சி அமைத்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி.
 

கடந்த திங்களன்று காஷ்மீரில் ஸ்ரீநகர்-குல்மார்க் நெடுஞ்சாலையில் சோபியன் மாவட்ட என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களுக்காக போராட்டம் நடத்திக்கொண்டிருந்தவர்கள், அந்த வழி வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மீது கல்லெறிய ஆரம்பித்தனர். தொடர்ந்து கடுமையான தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த திருமணி செல்வம் என்ற 22 வயது இளைஞன் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்காக வெட்கித் தலை குனிவதாக முதல்வர் முஃப்தியும், 'நாம் நம் மாநிலத்துக்கு வந்த சுற்றுலா பயணியைக் கொன்றுவிட்டோமென்று எதிர்கட்சித் தலைவர் உமர் அப்துல்லாவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
 

modi with mufthi

இப்படி, சமீபமாக மீண்டும்  ஜம்மு காஷ்மீர் செய்திகளில் கலவரம், கல்வீச்சு, தீவிரவாதிகள் சுட்டுக்கொலை, இராணுவத்தினர்  தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர் என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு ஆரம்பப் புள்ளி 1947ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோதே, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போதே வைக்கப்பட்டது. தற்போதும் இது இந்திய அரசுகளின் பார்வையில் இந்தியாவுக்கு நீங்காத தலைவலியாக இருக்கிறது. அந்த மாநிலத்தில் பிரிவினைவாத கோட்பாடுகளைக்  கொண்டு பல இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன, அதில் ஒன்றுதான் "ஹிஜ்புல் முஜாஹிதீன்" இயக்கம். இது முஹம்மத் அசன் தார் என்ற பிரிவினைவாத எண்ணம் கொண்டவரால் நிறுவப்பட்டது. 
 

ஜம்மு காஷ்மீரில் உள்ள இளைஞர்களுக்கு இந்த இயக்கம் பிரிவினைவாதத்தையும், தீவிரவாதத்தையும் கற்றுக்கொடுக்கத்  தயாராகவே இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம் என்பதைப் போல, இவர்களுக்கும் ஒரு நியாயம் இருக்கும். அந்த நியாயங்களைப் பல சமயங்களில் அரசே வழங்குகிறது என்பது வேதனை. தீவிரவாதிகள் மீதான நடவடிக்கை என்ற பெயரில் பொது மக்கள் பல சமயங்களில் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இன்னொரு புறம் அப்பாவி இளைஞர்கள் உயிரிழப்பதும் சிறையில் இருப்பதும் நடப்பதாகக் கூறுகிறார்கள். இளைஞர்கள் கல்லூரி படிப்பைக் கூட முடிக்காமல் இதுபோன்ற இயக்கங்களில் சேர்ந்து அவர்களின் வாழ்க்கையே கேள்வி குறியாக்குகிறார்கள். அங்கிருக்கும் பொதுமக்கள் இந்திய இராணுவத்தின் அராஜகமும், இதுவரை எங்களை ஏமாற்றி வரும் இந்திய அரசாங்கமும்தான் எங்கள் இளைஞர்களின் வாழ்க்கையை இவ்வாறு மாற்றுகிறார்கள் என்று சொல்கின்றனர்.
 

stone pelting


கடந்த மே 2ஆம் தேதியில் இருந்து இந்த இயக்கத்தில் இருக்கும் சில முக்கிய புள்ளிகளை படிகாம் கிராமத்தில் இராணுவத்தினர் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை இனியும் விட்டால் ஆபத்து என்பதால் என்கவுண்டர் செய்து அவர்களைக் கொல்ல முடிவு செய்துள்ளனர். இந்த இயக்கத்தின் முக்கியமான தளபதியான சதாம் பத்தர் இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டது தான் தற்போது அங்கு நடக்கும் போராட்டங்களுக்கும் கல் வீச்சுகளுக்கும் காரணமாக இருக்கிறது. மேலும் இந்த என்கவுண்டரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த இயக்கத்தில் சேர்ந்த காஷ்மீர் பல்கலைக்கழக துணை பேராசிரியர் ஒருவரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். மொத்தமாக ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்,  ஐந்து பொது மக்களும் இதில் இறந்துள்ளனர்.
 

சதார் பத்தரின்  இறுதி சடங்குக்  காட்சிதான் இணையத்தில் வைரலான அந்த காட்சி. அவரது கிராமத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஊர்வலம் கடைசியில் வன்முறையாய் மாற, பொதுமக்கள் பலர் கல்லை எடுத்துக்கொண்டு வழக்கம்போல் இராணுவத்தையும் பொது சொத்துக்களையும் தாக்க இறங்கினர். மாணவர்கள் கல்லூரிகளையும், பள்ளிகளையும் புறக்கணிப்பதற்கு முன்பே நிர்வாகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துவிட்டனர். தொடர்ந்து மறுநாளும் ஒரு வித பதற்றத்திலேயே இருந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா சென்றிருந்த தமிழ் குடும்பம், அங்கு சாலையில் காரில் செல்லும் போது கல்வீச்சாளர்களால் சரளமாக தாக்கப்பட்டு உள்ளனர். அதில்தான் திருமணி மரணமடைந்தார். கடந்த மாதம் அமெரிக்காவின் 'கார்டியன்' இதழ் வெளியிட்டிருக்கும் செய்தி ஒன்றில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI, மக்களை கல்லெறிய தூண்டுவதற்காகவும் தொடர் போராட்டங்களுக்காகவும் 1000 கோடி ஒதுக்கியிருப்பதாக இந்திய உளவுத் துறைக்கு தகவல் வந்திருப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இது உண்மையா இல்லை, எல்லோரையும் அச்சத்திலேயே வைத்திருக்க வெளியிடப்படும் செய்தியா என்பதும் உறுதியில்லை.  
 

hizbul

ஹிஜ்புல் முஜாஹிதீன்

 

 

ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத செயல்பாடுகளில் சமீபமாக அதிகாரிகள் காணும் ஒரு வித்தியாசம், இந்த இயக்கங்களில் இருப்பதாக கைது செய்யப்படும், சுட்டுக் கொல்லப்படும் பலரும் படித்தவர்களாக, வளமான குடும்பங்களில் இருந்து வந்தவர்களாக இருப்பதும்தான். முதலமைச்சர் கூறுவது போல ஏழை இளைஞர்கள் அதிகம் வழி மாற்றப்படுகிறார்கள் என்றாலும் சமீபத்திய இந்த போக்கு வேறு பெரிய பிரச்சனைகளின் அறிகுறியே. அது போல, பாதுகாப்பு படையினருக்கு வேலை வாய்ப்பு, வறுமை மட்டுமல்ல அரசுகளின் அணுகுமுறையில் உள்ள குறையை, மெல்ல மக்கள் அரசுகள் மேல் மெல்ல நம்பிக்கையிழந்து வருவதைத்தான் இது சுட்டிக் காட்டுகிறது. சமீபத்தில் ஜம்முவின் கத்துவா சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும், அதில் காவல்துறை ஊழியர் ஒருவரே ஈடுபட்டதும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்த ஊர்வலமும் இந்த நம்பிக்கையின்மையை அதிகப்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள்.  
  

"இதற்கு முன் இருந்த அரசுகள், டெல்லியின் பிரதிநிதிகளாக இங்கு செயல்படுகிறார்களே தவிர, காஷ்மீரின் பிரதிநிதிகளாக டெல்லியில் செயல்படுவதில்லை. எங்கள் மக்களின் உணர்வுகள் அங்கு தெரிவதில்லை" என்று முன்பிருந்த அரசுகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரஷீத் கூறினார். உண்மைதான், ஆனால் இப்பொழுதும் அளவுக்கதிகமான பாதுகாப்பு படைகள், பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் இயல்பு வாழ்க்கை, கல்வி என அனைத்தும் பாதிக்கப்படுவது என்று டெல்லியின் பிரதிநிதிகளாகத்தான் அரசும்  பாதுகாப்பு அதிகாரிகளும் அங்கு செயல்படுகின்றனர். முழுமையாக, அந்த மக்களின் உணர்வுகள் இங்கு தெரியும் வரை, சரியான அணுகுமுறை நடக்கும் வரை இந்தியாவின் தலையில் வலி இருந்துகொண்டுதான் இருக்கும்.