நேற்று பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றுக்கொண்டார். அவர் இரண்டாவது முறையாக பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றே அமைச்சரவையில் இடம்பெறுபவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர்கூட இல்லை. கடந்த 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லாமல் அமைச்சரவை அமைந்ததே கிடையாது.
மொத்தம் 25 கேபினட் அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள், 9 தனிப்பொறுப்புகளுடன்கூடிய இணை அமைச்சர்கள் என மொத்தம் 58 அமைச்சர்கள் உள்ளனர். இதில் ஒருவர்கூட தமிழ்நாட்டில் வென்று சென்றவர்கள் இல்லை. ஏற்கனவே தமிழ்நாட்டை பாஜக அரசு பிரித்து பார்க்கிறது, தனிமைபடுத்துகிறது என தமிழக மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர். இதன் விளைவுதான் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலித்தது.
அப்போதே பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாட்டை பாஜக அரசு எப்போதும் பிரித்து பார்த்ததில்லை. இங்கு அவ்வாறு பரப்பப்படுகிறது. என்றெல்லாம் கூறினார். இங்கு அந்த நிலைதான் இருக்கிறது, அதை சமாளிக்கதான் இவ்வாறு கூறுகிறார் என்று கூறினர். ஆனால் தற்போது அதை மீண்டும் உறுதிபடுத்தும்படி நிகழ்ந்துள்ளது.
இதற்கு பாஜக மட்டும் காரணமில்லை. அதிமுகவிற்குள் நடந்த உட்கட்சி பூசல்களும்தான் காரணம். துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவரது மகனும், தேனி மக்களவை தொகுதி உறுப்பினருமான ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி கேட்டார். முதல்வர் எடப்பாடி. பழனிசாமி வைத்திலிங்கத்திற்கு அமைச்சர் பதவி கேட்டார். இது அக்கட்சியின் உட்கட்சி பூசலானது. இதில் அதிருப்தியான பாஜக யாருக்கும் பதவியில்லை எனக்கூறியது.
மேலும் தமிழக பாஜக தமிழ்நாட்டில் பாஜகவில் இருப்பவர்களுக்கு பதவி கொடுக்கவில்லையென்றால் யாருக்கும் கொடுக்கக்கூடாது என கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆகமொத்தத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பே இல்லாத ஒரு மக்களவை உருவாகியுள்ளது. தமிழ்நாடு தனிமை படுத்தப்படாது என பாஜக கூறியுள்ளது. அதை நிறைவேற்றுமா, நிறைவேற்றாதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், ரவீந்திரநாத்தும் இன்னும் டெல்லியில்தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.