உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மற்றும் மக்களாட்சியில் மற்ற நாடுகளுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்துவரும் இந்தியாவில், நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் கடந்தும் 15% கூட சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றங்களில் மகளிர் பங்கேற்றதில்லை என்பதே கசப்பான உண்மை.
கடந்த பல தேர்தல்களாக பெரும்பாலான கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறும் முக்கிய அம்சமாக மகளிர் இடஒதுக்கீடு உள்ளது. ஆனால் மகளிருக்குரிய இடஒதுக்கீடு இன்னும் நடைமுறையில் வரவில்லை. இந்திய வாக்காளர்களில் கிட்டத்திட்ட சரிசமமாக பெண் வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஜு ஜனதாதளம் நாடாளுமன்ற தேர்தலில் 33% இடங்களையும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 41% இடங்களையும் பெண்களுக்கு ஒதுக்கியுள்ளன. நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு சம உரிமையை வலியுறுத்தும் வகையில் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை அறிவித்து புது முயற்சியை மேற்கொண்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு சட்டம் மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வழிவகை செய்கிறது. இதன்படி மகளிருக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் 3 பொதுத்தேர்தல்களுக்கு ஒருமுறை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் 33% மகளிர் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.
“கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் மகளிருக்கு தனியாக இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்” என 1929-ஆம் ஆண்டில் தந்தை பெரியாரால் சுயமரியாதை மாநாட்டின்போது தீர்மானம் இயற்றப்பட்டது தான் மகளிர் இடஒதுக்கீட்டு குரலுக்கான முக்கியமான துவக்கம். 1990-களில் 3 முறை மகளிர் இடஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோதும், போதிய ஆதரவு இல்லாமல் மசோதா நிறைவேற்றப்படவில்லை.
2008-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்தியது. இந்த சட்ட மசோதா 2010-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அன்றைய சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோரின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இன்றுவரை இது கிடப்பில் உள்ளது.
பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அடிப்படையில் 2019-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 193 நாடுகளில் இந்தியா 149-வது இடத்தில் உள்ளது. பெண்களை முன்னிலைப்படுத்துவதில் முதல் 10 இடங்களில் ருவாண்டா, நமீபியா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகள் உள்ளன. ஆனால் ஆசிய நாடுகள் ஒன்றுகூட இல்லை. 8 தென் ஆசிய நாடுகளில் பெண்களை பிரதிநிதித்துவப்படுதுவதில் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் சிறப்பாக செயல்படுகிறது.
ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி உலக நாடுகளில் சராசரியாக 24.3% பெண் எம்.பிக்கள் இருந்து வருகின்றனர். உலக அளவில் ருவாண்டா முதலிடம் வகிக்கிறது. அந்த நாட்டில் 80 எம்.பிக்களில் 49 பேர் பெண் எம்.பிக்கள். 1,11,000 பெண்களுக்கு ஒரு பெண் எம்.பி. என்ற விகிதத்தில் உள்ளனர்.
தற்போதைய இந்திய நாடாளுமன்றத்தின் 524 இடங்களில் 66 பெண் எம்.பிக்கள் உள்ளனர். 12.6% பெண் உறுப்பினர்கள் உள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கு முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ள மொத்த வேட்பாளர்கள் 616 பேர். இதில் 493 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 45 பெண் வேட்பாளர்கள்.
1951-52 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் 22 பெண் உறுப்பினர்கள் மட்டுமே வெற்றிபெற்று மக்களவைக்குச் சென்றனர். பின்னர் 1957-ல் நடைபெற்ற தேர்தலில் நாடு முழுவதும் 45 பெண்கள் மட்டுமே போட்டியிட்டு 22 பேர் வெற்றிபெற்றனர். 1984-ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் 171 பெண்கள் போட்டியிட்டு 43 பெண் உறுப்பினர்கள் வென்றனர்.
பெண் உறுப்பினர்களின் சதவீதம் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதன்முறையாக இரட்டை இலக்கைத் தொட்டது. அந்தத் தேர்தலில் மொத்தம் போட்டியிட்ட 556 பெண்களில் 59 பெண்கள் வென்றனர். கடைசியாக 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 62 பெண் வேட்பாளர்கள் வென்றனர். 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் அதிகமாக 668 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
உலக நாடுகளில் நாடாளுமன்றங்களில் பெண் உறுப்பினர்களின் பங்கேற்பு சராசரி 23%. இதில் பாதி அளவுகூட இந்தியா இன்னும் தொடவில்லை. அதிகபட்சமாக 2014-ஆம் ஆண்டு அமைந்த மக்களவையில் பெண் உறுப்பினர்கள் 11.42%.
தேர்தல் அறிக்கைகளில் பெண் வாக்காளர்களை கவரும் வகையில் திட்டங்களை அறிவிப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கைகளில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளன. இந்த வாக்குறுதிகள் வெற்றுக்கோஷமா அல்லது நடைமுறையா என்பது அடுத்த தேர்தலின்போது தெரியவரும்.