படுக்கையிலிருந்து விழிக்கும்போது, படுக்கை இரத்தத்தால் நனைந்திருப்பது போல கற்பனை செய்துகொள்ளுங்கள். பாவாடையில் படிந்த இரத்தக் கறையுடன் பள்ளி கழிவறைக்கு ஓடிச் செல்வதுபோல கற்பனை செய்துகொள்ளுங்கள். கால்களுக்கு இடையே கிழிந்த கைப்பிடித் துணியை விட கேவலமான துணியை வைத்திருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். கற்பனை செய்துபார்க்க சொன்னவற்றின் காட்சிகள் உங்கள் மன ஓட்டத்தில் ஓடினால், அருவருப்பாகக் கூட இருக்க வாய்ப்பு உண்டு. இப்படித்தான் பல சிறுமிகள், பெண்கள் இந்தியாவில் மாதவிடாய்க் காலத்தில் பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இந்தியாவில் பல பெண்களின் பருவ வயதில் இது ஒரு பகுதியாகவே இருக்கிறது.
குறிப்பாக மாதவிடாய் என்பதே புனிதமற்ற ஒன்று என்கிற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதால், மாதவிடாய்க் காலத்தில் கஷ்டப்படும் பெண்களுக்கு அழுக்குத் துணியையே இன்றும் சில கிராமப் புறங்களில் கொடுக்கும் அவலம் நடைபெறுகிறது. அழுக்கை அழுக்குத் துணியால் சுத்தப்படுத்துவதுதானே உசிதம் என்கிற மனப்பான்மையில் செய்கின்றனர். ஆனால், அதனால் ஏற்படப் போகும் விளைவுக்கு, அவர்களால் எதுவும் செய்யமுடியாது. உலகம் முழுவதும் மாதவிடாய்க் காலத்தின் சுத்தம் குறித்து பலரும் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இந்தியாவிலும் தற்போது விழிப்புணர்வு செய்கின்றனர். ஆனால், மக்கள் மனதிலிருந்து 'புனிதமற்றது' என்கிற எண்ணத்தை மாற்ற சிரமப்படுகின்றனர். இவை அனைத்தும் சேர்ந்து பெண்களுக்குக் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வர வாய்ப்பளிக்கிறது. இந்தியாவில் ஒரு நாளுக்கு இந்தப் புற்று நோயால் 200 பெண்கள் மரணமடைவதாக ஒரு சர்வே சொல்கிறது.
இந்தியாவில் பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சுகாதாரமாக இல்லாததால்தான் 70 சதவீத இனப்பெருக்க மண்டல நோய்கள் வருகிறது. ஆனால், இப்போதும் மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவது பிரச்சனையாகவே இருந்து வருகிறது. படித்தவர்கள் வீட்டிலும் கூட மாதவிடாய்ப் பற்றி பேசுவது தவறாகவே பார்க்கப்படுகிறது. மேலும் வேறொரு ஆய்வின்படி, சானிட்டரி நாப்கின் பயன்படுத்தி மாதவிடாய்க் காலத்தில் சுகாதாரமாக இருப்பவர்கள் என்று பார்த்தால் 18 சதவீதப் பெண்கள்தானாம். மீதமுள்ளவர்கள் கிடைத்ததைப் பயன்படுத்தி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். அதிலும் மிகச்சிலரே, மாதவிடாய்க் காலத்தில் சுகாதாரமாக இல்லை என்பதால்தான் இந்த நோய் நமக்கு வந்திருக்கிறது என்பதை உணர்கின்றனர்.
கடந்த பத்து ஆண்டுகளில் மாதவிடாய்ச் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வுகளைப் பலரும் ஏற்படுத்தி வருகின்றனர். சானிட்டரி நாப்கின் மீது இருந்த வரியைக் குறைக்கச் செய்துள்ளனர். இது சம்மந்தமாகப் பல விளம்பரங்கள், ஆவணப்படங்கள் என்று வரிசையாகக் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த வருட சுதந்திர தின உரையின்போது பிரதமர் மோடி, மத்திய அரசாங்கத்தின் 'சுவிதா' சானிட்டரி நாப்கினை ஒரு ரூபாய்க்கு விற்பதாக அறிவித்தார். ஆனால், இந்த நாப்கினின் மொத்தச் செலவு ரூ. 2.50 என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இந்த வருடமும் சுதந்திர தின உரையின்போது, ‘பெண்களின் மாதவிடாய் என்பது இயற்கை. மனிதன் எப்படி உறங்குகிறானோ, சாப்பிடுகிறானோ அதுபோன்ற ஒரு பயலோஜிதான் பெண்களுக்கு வரும் மாதவிடாய்’ என்று 130 கோடி இந்தியர்களுக்கும் தெரிவித்தார். பெண்களின் மாதவிடாய்க் குறித்து சுதந்திர தினத்தில் பேசிய முதல் பிரதமர் என்று பலரும் ஆச்சர்யப்பட்டனர்.
இது மட்டுமல்லாமல் இந்தியாவில் மாதவிடாய்க்குப் பயன்படுத்தப்படும் சானிட்டரி நாப்கின், ஏழை எளிய கிராமப்புறப் பெண்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று மலிவு விலை சானிட்டரி நாப்கினை கண்டுபிடித்து, இந்தத் துறையில் ஒரு புரட்சி செய்திருக்கிறார், அருணாச்சலம் முருகானந்தம் என்னும் தமிழர். அதேபோல 2011ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 10 வயது முதல் 19 வரையிலான 41 லட்சம் கிராமப்புற பெண்களுக்கும், 7 லட்சம் தாய்மார்களுக்கும், 700 பெண் சிறைக் கைதிகளுக்கும் இலவசமாக சானிட்டரி நாப்கின் கிடைத்திட ஒரு திட்டத்தை அறிவித்தார். இந்தியாவிலேயே இதுதான் சானிட்டரி நாப்கின் இலவசமாகப் பெண்களுக்குக் கிடைத்திட அரசு சார்பாக உதவப்பட்ட முதல் திட்டம். ஒருசில இடங்களில் மலிவு விலை சானிட்டரி நாப்கின்கள் கிடைக்கிறது. ஆனால், இந்தியா முழுவதும் கிடைக்கிறதா? பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும்போது, மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு இதுகுறித்து விரைவில் பல திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். முதலில் இந்தியா முழுவதும் சானிட்டரி நாப்கின் கிடைக்கச் செய்யவேண்டும், பணம் கொடுத்து வாங்க முடியாவதர்களுக்கு அரசே இலவசமாகத் தர வழி வகுக்க வேண்டும்.
ஸ்காட்லாண்ட் அரசு, பெண்களுக்கான மாதவிடாய்க் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினை, அவர்களின் உரிமையாகக் கருதி நாடு முழுவதும் இலவசம் என்று சட்டம் இயற்றி இருக்கிறது. ஒரு காலத்தில் நம்முடைய இந்திய அரசாங்கம் மக்கள் தொகையைக் குறைக்க, அரசு மருத்துவமனைகளில் காண்டம்களை இலவசமாகத் தந்தது. சானிட்டரி நாப்கினும் தேவையான ஒன்றுதான் என்பதை உணர்ந்து பெண்களுக்கான உரிமையாக இதை அனைவரும் கருதிட வேண்டும். அரசு மட்டுமல்ல ஒவ்வொரு ஆணும் இது அவர்களுக்கான உரிமை என்று பெண்களுக்காகக் குரலெழுப்ப வேண்டும்.