இந்தியா முழுவதும் நடக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் வரும் முடிவுகளை பல விஷயங்கள் தீர்மானிக்கின்றன. ஆளும்கட்சி மீதான அதிருப்தி அலை, எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலம், சாதி, மதம், வேட்பாளர்களின் களப்பணி என பல காரணிகள் பல மாநிலங்களின் தேர்தல் முடிவுகளுக்கு காரணமாகின்றன. ஆனால் தமிழக தேர்தல் முடிவுகளை ஒரேயொரு காரணிதான் தீர்மானிக்கிறது, அதுதான் பணம் என்கிறார்கள் இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பண விநியோகத்தால் நிறுத்தப்பட்டது. ஒரு வருடம் கழித்து அங்கு தேர்தல் நடந்தபோதும் ஆளும் அ.தி.மு.க. மீது 408 பண விநியோக புகார்கள் குவிந்திருந்தது. அதை கணக்கில் எடுத்தால் ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்த முடியாது என்றாலும் தேர்தலை நடத்தியது தேர்தல் ஆணையம். ஆர்.கே.நகரில் நடைபெற்ற பண விநியோகத்தை எதிர்த்து தேர்தல் கமிஷன் மற்றும் வருமான வரித்துறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றளவும் நிலுவையில் உள்ளது. இந்தியாவிலேயே தேர்தலில் நடைபெற்ற பண விநியோகத்திற்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இதுதான்.
இதைப்பற்றி எல்லாம் விவாதிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஒரு கூட்டத்தை டெல்லியில் நடத்தியது. அதில் பேசிய தமிழகத்தை சேர்ந்த முக்கிய தேர்தல் பார்வையாளர், தமிழகத்தில் தான் சந்தித்த மிக மோசமான அனுபவத்தை வெளிப்படுத்தினார். "நான் கடந்த வாரம் பா.ம.க. சார்பில் டாக்டர் அன்புமணி போட்டியிடும் தர்மபுரி பாராளுமன்றத் தொகுதிக்கு சென்றிருந்தேன். அங்கிருக்கும் தி.மு.க., பா.ம.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சி பிரமுகர்களிடம் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன்.
தேர்தலில் எதையெல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக்கூடாது என விளக்கினேன். குறிப்பாக "பண விநியோகத்தில் ஈடுபடக் கூடாது. பண விநியோகம் நடைபெற்றால் அதை வருமான வரித்துறை கண்டுபிடிக்கும். அப்படி கண்டுபிடித்தால் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ரத்தானது போல ரத்தாகும்' என சொன்னபோது "பண விநியோகம் நடந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்' என பா.ம.க.வைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் கேள்வி கேட்டார்.
"நாங்கள் வருமான வரித்துறைக்கு தகவல் கொடுப்போம். அவர்களும் அமலாக்கத்துறையும் சி.பி.ஐ.யும் வழக்குப் பதிவு செய்வார்கள்' என பதில் சொன்னேன். "நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் நாங்கள் எந்தவித தடங்கலும் இல்லாமல் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கலாம் இல்லையா?' என கேட்டார். நான் அதற்கு பதில் சொல்லவில்லை. கூட்டத்தை முடித்துவிட்டு நான் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பி விட்டேன். கூட்டத்தில் என்னிடம் கேள்வி கேட்ட பா.ம.க. பிரமுகர் என்னை பார்க்க வந்தார். அவர் கையில் ஒரு பெரிய சூட்கேஸ். "இதில் 2 கோடி ரூபாய் இருக்கிறது. இதை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் பண விநியோகம் செய்கிறோம். நீங்கள் கண்டுகொள்ளக் கூடாது' என்றார்.
நான் அவரை மிகக் கடுமையாக எச்சரித்து அனுப்பினேன். இதுதான் தமிழகத்தில் தேர்தல் களத்தில் உள்ள நிலைமை. பண விநியோகத்திற்கு எதிராக எவ்வளவு பெரிய சட்டங்களை போட்டாலும் அதையெல்லாம் மீறி பண விநியோகம் தமிழகம் முழுவதும் நடக்கிறது. அதை தேர்தல் கமிஷனால் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. தமிழகத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது, யார் அதிக பணம் கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும். ஜனநாயகமும் இந்திய அரசியல் சாசனம் தேர்தல் கமிஷனுக்கு நியாயமான தேர்தல் நடத்த வழங்கிய அதிகாரங்களும் தமிழகத்தில் செல்லு படியாகவில்லை'' என அந்த தேர்தல் ஆணையத்தின் முக்கிய அதிகாரி வருத்தத்துடன் பதிவு செய்தார். உடனே தமிழக தேர்தல் களத்தில் விளையாடும் பணத்தை எப்படி கட்டுப்படுத்துவது என சீரியசாக விவாதித்தார்கள் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள். தமிழகத்தின் தலைமை போலீஸ் அதிகாரி மற்றும் உளவு அதிகாரி ஆகியோர் தலைமையில்தான் பண விநியோகம் நடக்கிறது.
முதலமைச்சர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோர் செல்லும் கான்வாய்களில் பணம் கொண்டு செல்லும் வாகனம் செல்கிறது. போதாக்குறைக்கு அவர்களது கான்வாயில் செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் அவர்களுக்கு ஆதரவான மீடியாக்களின் வண்டிகள் பணம் கொண்டு செல்லும் வண்டிகளாக மாற்றப்படு கின்றன. எனவே அந்த இரு போலீஸ் அதிகாரிகளையும் மாற்றாமல் பண விநியோகத்தை தடுக்க முடியாது' என்றார்கள். அவர்களை மாற்ற வேண்டுமென்றால் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு ஒரு அறிக்கை தாக்கல் அளிக்க வேண்டும். அவர் ஏற்கனவே தேர்தல் கமிஷனராக இருந்த ராஜேஷ் லக்கானியை விட அதிகமாக அ.தி.மு.க.வை ஆதரிக்கிறார். என்ன செய்வது என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கவலைப்பட்டனர்.
அதனால் களத்தில் இருக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நேரடியாக வருமானவரித்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம். அதற்கு சத்ய பிரதா சாஹுவின் அனுமதியை பெற வேண்டியதில்லை. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழகத்தை சுற்றும் தேர்தல் பார்வையாளர்களுக்கு அகில இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்தது. சென்னை மண்டல வருமானவரித் துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கும் "தேர்தல் பார்வையாளர்கள் அழைத்தால் உடனடியாக செல்ல வேண்டும்' என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது சென்னை மண்டல வருமான வரித்துறையின் தலைமைப் புலனாய்வு அதிகாரியான வீரகுமாரை தாண்டி சிறப்பு புலனாய்வு அதிகாரிகளாக உள்ள நான்கு ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளுக்கும் போய்ச் சேர்ந்தது. அதில் ஒரு தேர்தல் பார்வையாளர் வருமான வரித்துறையின் சிறப்பு அதிகாரியை அழைத்தார். "சென்னை கீழ்கட்டளை பகுதியில் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஒரு காண்ட்ராக்டர் தினமும் கோடிக்கணக்கான ரூபாய்களை வண்டிகளில் ஏற்றி அனுப்பி வருகிறார்.
உடனே அவரது வீட்டை ரெய்டு செய்தால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்' என்கிறார். அவர் பெயர் நடராஜ் சபேசன். சென்னை நகரில் உள்ள எல்.இ.டி. பல்புகளை அவர் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்க்கு சப்ளை செய்கிறார் என வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடிக்கிறது. அவரது கீழ்கட்டளை வீடு, பூந்தமல்லியில் உள்ள அவரது தொழிற்சாலை என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது.
முதலில் சில லட்சங்கள் கிடைத்த பணம் போகப் போக கோடிகளாக மாறுகிறது. நேரம் செல்லச் செல்ல கோடிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. இந்தப் பணம் யாருடையது என கேட்டால் நடராஜ் சபேசனிடம் பதில் இல்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்ட கேள்விகளை அவரால் தாங்க முடியவில்லை. அதனால் நெஞ்சுவலி என அப்பல்லோ மருத்துவமனையில் படுத்துக் கொள்கிறார். விடாத கருப்பாக தொடரும் வருமானவரித்துறை அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவ மனைக்குள் செல்கிறார்கள். "நோயாளியை தொந்தரவு செய்யாதீர்கள்' என மருத்துவமனை நிர்வாகம் சொல்லி விடுகிறது. சரி, சிகிச்சை முடிந்து வரட்டும் என அங்கேயே ஒரு படையை நிறுத்தி வைத்துவிட்டு தங்களது ரெய்டை தொடர்கிறார்கள். ஒரு கோடி இரண்டு கோடி என ஆரம்பித்த பணக்குவியல்கள் தொடர்ந்து பதினாறு கோடியை தொடுகிறது. பணம் எண்ணும் எந்திரங்கள், சென்னை மாநகராட்சியில் சபேசன் எடுத்த காண்ட்ராக்ட் அதில் கிடைத்த லாபம் என ஏகப்பட்ட விவகா ரங்கள் வருமான வரித்துறையிடம் கிடைக்கிறது.
சபேசன் இன்னும் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார். அவற்றை கடந்த தேர்தலில் இதேபோல் வருமான வரித்துறையிடம் சிக்கிய கரூர் அன்புநாதனைப் போல ஆம்புலன்ஸ் வண்டிகள் போன்ற லாரிகளில் அனுப்பினாரா? என ஏகப்பட்ட எலக்ட்ரானிக் டேட்டாக்களை திரட்டிக் கொண்டிருக்கும் வருமான வரித்துறையின் சோதனை இன்னமும் முடியவில்லை. சபேசன் மீது வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவை வழக்குப் பதிவு செய்துவிட்டு சபேசன் மருத்துவமனையிலிருந்து வெளியே வருவதற்காக காத்துக் கிடக்கின்றன. இந்தப் பணம் எப்படி வந்தது என சபேசன் உரிய பதில் சொல்லவில்லையென்றால் சபேசனுக்கு நெருக்கமான உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீதும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ய காத்திருக்கிறது என்கிறார்கள் இந்திய தேர்தல் ஆணையத்தை சேர்ந்தவர்கள்.
இளம் ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் பட்டாளம் பயம் அறியாதது. சமீபத்தில் தாது மணல் அதிபர் வைகுண்டராஜனிடம் ரெய்டு நடத்தியது இந்தப் பட்டாளம்தான். வைகுண்டராஜன் அதன்பிறகு உயரதிகாரிகளிடம் காம்ப்ரமைஸ் செய்து கொண்டு தனக்கு எதிராக வருமானவரித்துறை நடத்திய ரெய்டுகளில் ஒரு சமரசம் செய்ய முயன்றார். நத்திங் டூயிங் என இந்த இளம் அதிகாரிகள் போர்க்குரல் கொடுத்ததால் வசமாக மாட்டிக் கொண்டார் வைகுண்டராஜன் என்கிறது வருமான வரித்துறை வட்டாரம். வைகுண்டராஜன் விரித்த வலையில் விழுந்தவர் களுக்கு எதிராக துறை ரீதியான விசாரணையை சி.பி.ஐ. நடத்தி வருகிறது என்கிறது வருமான வரித்துறை.
தேர்தல் களத்தில் அ.தி.மு.க.வுக்கு எதிராக வருமான வரித்துறையா? என கொதித்தெழுந்த பா.ஜ.க. வட்டாரம் சென்னை மண்டல தலைமைப் புலனாய்வு அதிகாரியை வறுத்து எடுத்து விசாரித்தது. அவர் உடனடியாக வேலூரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்த உத்தரவிட்டார். சபேசன் வீட்டில் அட்டைப் பெட்டியில்... மூட்டைகளில் கைப்பற்றிய 16 கோடி பற்றி மூச்சே விடாத வருமான வரித்துறை... "துரைமுருகன் வீட்டில் அட்டைப் பெட்டி மூட்டையில் பணம்' என டி.வி.க்களுக்கு தானே முன்வந்து புட்டேஜ் கொடுத்துக் கொண்டிருக்கிறது. உடனே "வேலூர் தொகுதி பாராளுமன்றத் தேர்தல் ரத்தாகும்' என்கிறார் மாநில தேர்தல் ஆணையாளர். இதுதான் வருமான வரித்துறை பாலிடிக்ஸ் என்கிறார்கள் அந்தத் துறையை சேர்ந்தவர்கள்.