மணி ஹைஸ்ட் நான்காவது சீசன் வரப்போகிறது என்ற அறிவிப்பை நெட் ஃப்ளிக்ஸ் வெளியிட்டதிலிருந்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பு பற்றிக்கொண்டது. வாத்தி கமிங் என்ற ஹாஷ்டேகுடன் ரசிகர்கள் ப்ரொஃபசரின் படத்தைப் போட்டு கொண்டாடத் துவங்கிவிட்டனர். நான்காவது சீசன் ஸ்ட்ரீம் ஆக ஆரம்பித்த முதல் வாரத்திலேயே 24 மில்லியனுக்கு மேற்பட்ட சப்ஸ்க்ரைபர்கள் மொத்த சீசனையும் பார்த்து முடித்து விட்டனர் என்கிறது நெட்ஃப்ளிக்ஸ். நெட்ஃப்ளிக்ஸில் அதிகமான ரசிகர்கள் பார்த்து ரசித்த டாப் சீரிஸ்களில் மணி ஹைஸ்ட்டும் ஒன்று. ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில் நெட்ஃப்ளிக்ஸின் நம்பர் ஒன் ஷோ இதுதான். ஆங்கிலம் அல்லாத வேற்று மொழி ஒரிஜினல் சீரிஸ்களில் நெட்ஃப்ளிக்ஸின் நம்பர் ஒன் சீரிஸும் மணி ஹைஸ்ட் தான். உலக அளவிலேயே கூட ரசிகர்கள் அதிகமாகக் கண்டுகளித்த டாப் சீரிஸ்களில் மணி ஹைஸ்ட்டுக்கு இடம் உண்டு. அதைத் தாண்டி ஒரு கல்ட் ஃபாலோயிங்கே இந்த சீரிஸ்க்கு உண்டு. உலகின் பல மூலைகளிலும், பல போராட்டங்களில், விளையாட்டு போட்டிகளில் மணி ஹைஸ்ட் உடையையும் முகமூடியையும் அணிந்து கொண்டு அதை ஒரு குறியீடாகவே பயன்படுத்த ஆரம்பித்தனர் மக்கள்.
இத்தனை ரெக்கார்டுகளை தன்வசம் கொண்ட மணி ஹைஸ்ட் ஆரம்பத்தில் ஒரு ஃப்ளாப் சீரிஸ் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் உண்மை அதுதான். தொடரின் நான்கு சீசன்களுக்கும் எந்த விதத்திலும் குறைவில்லாதது மணி ஹைஸ்ட் வெற்றி பெற்ற கதை.
ஸ்பெயினில் ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஆரம்பித்தது லகாசா டி பாப்பெல் எனும் இந்தத் தொடர். வாரம் ஒரு எபிசோட். ஒரு மணி நேரம் ஓடும். 15 வாரங்கள் ஓடியது இந்தத் தொடர். ஆரம்பத்தில் நான்கரை மில்லியன் ரசிகர்களுடன் ஆரவாரமாக ஆரம்பித்த இந்தத் தொடருக்கு போகப் போக ஆதரவு குறைய ஆரம்பித்தது. ஆரம்பிக்கும் போது இருந்ததை விட பாதிக்கும் குறைவான ரசிகர்களே இந்தத் தொடரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட தொடர் ஒரு தோல்வி. அந்தத் தொலைக்காட்சியின் நிர்வாக அதிகாரியே ‘சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை’ என்று சொல்லும் அளவிற்கு தொடரின் பாப்புலாரிட்டி சரியத் துவங்கியது.
தொடருடன் தொடர்புடைய கலைஞர்கள் பலருக்கு இது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தது. ப்ரொஃபசர், நைரோபி, டோக்யோ என பலரும் தொலைக்காட்சி தொடர் தோல்வியுடன் முடிவடைந்த தருணத்தை கண்ணீர் நிறைந்ததாக நினைவுகூர்கிறார்கள். இனிமேல் இந்தக் கதாபாத்திரத்தைத் தொடர முடியாதா.. இனிமேல் இந்தக் குடும்பத்துடன் இணைந்திருக்க முடியாதா என்று இறுதி நாள் படப்பிடிப்பில் ஒவ்வொருவரும் கண்ணீருடனே விடை பெற்றிருக்கின்றனர்.
அதன் பின் தான் நடந்திருக்கிறது அந்த மேஜிக்! நெட்ஃப்ளிக்ஸ் இந்த சீரிஸை வாங்கி, ஒரு மணி நேரமாக இருந்த 15 எபிசோடுகளைக் கொஞ்சம் க்ரிஸ்ப்பாக கட் செய்து, 45 நிமிடங்கள் கொண்ட 22 எபிசோடுகளாக மாற்றி, அதை மணி ஹைஸ்ட் என்ற பெயரில் இரண்டு சீசன்களாக வெளியிடுகிறது. அதுவும் எந்தப் பெரிய விளம்பரங்களும் இன்றி. நீங்கள் நெட்ஃப்ளிக்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தைக் கொஞ்சம் ஸ்க்ரால் செய்தால் மணி ஹைஸ்ட் என்ற பெயரில் ஒரு தொடர் அப்லோட் செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அவ்வளவுதான். முதலில் ஸ்பெயின் பயனாளர்களுக்கு மட்டும் வெளியிடப்பட்ட மணி ஹைஸ்ட் பின்பு உலகில் பல நாடுகளிலும் வெளியிடப்பட்டது.
நாட்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. மணி ஹைஸ்ட்டில் நடித்தவர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸில் போட்டதால் பெரும் மாற்றம் வந்துவிடும் என்ற நம்பிக்கையெல்லாம் இல்லை. ‘ஓ.. நெட்ஃப்ளிக்ஸ் வாங்கிருக்கா’ என்ற அளவில் தான் அதை எடுத்துள்ளனர். ஆனால் இரண்டு வாரங்கள் கடந்தபின், அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சரசரவென ஏறத் துவங்கியிருக்கிறது. நூறுகளில் ஆயிரங்களில் இருந்த எண்ணிக்கை, சட்டென லட்சங்களில் மில்லியன்களில் எகிறத் துவங்கியிருக்கிறது. சக நடிகர்களுக்கு ஃபோன் செய்து இதைச் சொன்னால், அங்கேயும் இதே நிலைமைதான் என்று தெரிய வந்திருக்கிறது. அப்போதுதான் இவர்களுக்கு தெரிந்திருக்கிறது ‘ஏதோ நடக்கிறது’ என்று.
அந்த ஏதோதான் முதல் பேராவில் நீங்கள் பார்த்த ரெக்கார்டுகள். கொஞ்சம் கொஞ்சமாக உலகின் பல மூலைகளுக்கு பரவிய மணி ஹைஸ்ட், மிகப்பெரிய வெற்றியைப் பெறத் துவங்கியது. குறிப்பாகத் தெற்கு ஐரோப்பாவில் இதுவரை வந்து சீரிஸ்களின் ரெக்கார்டுகளை முறியடிக்கத் துவங்கியது மணி ஹைஸ்ட். எம்மி விருது உட்பட பல விருதுகளும் மணி ஹீஸ்ட்டுக்கு வந்து சேர்ந்தன. அது மட்டுமல்ல. மணி ஹைஸ்ட் சார்ந்த ஒவ்வொன்றும் ஒரு ஹிட் மெட்டீரியலாக மாறியது. தொடரில் வரும் Bella ciao என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பாடல் உலகில் பல பகுதிகளைத் தன்வயப்படுத்தி சுற்றி வரத் துவங்கியது. அதை முன்வைத்து பல பாடல்கள், ஆல்பங்கள் உருவாக்கப்பட்டன.
அது மட்டுமல்லாமல், தொடரில் பயன்படுத்தப்படும் சிவப்பு உடை மற்றும் முகமூடி எதிர்ப்புணர்வின் குறியீடாகப் பல போராட்டங்களில் பயன்படத் துவங்கியது. பல விளையாட்டு போட்டிகளில் மணி ஹைஸ்ட் போஸ்டர்கள், ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டன (இந்த அத்தனை புகைப்படங்களும் ஒரு ட்ரிப்யூட் போல மூன்றாவது சீசனில் காட்டப்படுகிறது). பல பிரபலங்கள் மணி ஹைஸ்ட்டின் முகமூடி உடையை அணிந்து போஸ் கொடுத்தனர். குறிப்பாக பிரேசில் கால்பந்து சூப்பர் ஸ்டார் நெய்மார், மணி ஹைஸ்ட்டின் மிகப்பெரிய ரசிகர். எந்த அளவிற்கு என்றால், இன்ஸ்டாகிராமில் போஸ் கொடுத்ததோடு நிற்காமல், மூன்றாவது சீசனில் இரண்டு காட்சிகளில் தலைகாட்டுகிற அளவிற்கு.
இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக உலக அளவிலான கவனம் மணி ஹைஸ்ட்டுக்கு கிடைக்கத் துவங்கியதும், நெட்ஃப்ளிக்ஸே நேரடியாக மூன்றாவது நான்காவது சீசனைத் தயாரிக்க முன்வந்தது. லாகாசா டி பாப்பெல் குழு எதிர்பார்த்தேயிராத பட்ஜெட்டுடன், எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி படமாக்கும் சுதந்திரத்துடன் வந்திருக்கிறது இந்த வாய்ப்பு. இருந்தாலும் உடனே தலையாட்டிவிடவில்லை குழு. இரண்டு மாதங்கள் நேரமெடுத்து, அடுத்தடுத்த சீசன்களுக்கேற்ற சரியான கதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, சரியான திட்டமிடலுக்குப் பிறகே ஓகே சொல்லியிருக்கிறார்கள். மூன்றாவது சீசன் துவங்கியிருக்கிறது.
அதுவரை இன்ஸ்டாகிராமில் மட்டுமே பிரபல்யத்தை அனுபவித்த நடிகர்கள் நிஜமான செலிபிரிட்டி வாழ்வை வாழத் துவங்கினர். மூன்றாவது சீசனில் முதல் நாள் ஷுட். அதுவரை வந்தோம், ஷுட் செய்தோம், போனோம் என்று இருந்த மணி ஹைஸ்ட் குழுவினருக்கு ஆச்சர்யம். கிட்டத்தட்ட நான்காயிரம் மக்கள் ப்ரொஃபசரையும் பெர்லினையும் சூழ்ந்து கொண்டு அன்பால் நனைக்க ஆரம்பித்தனர். மற்ற நடிகர்கள் சென்ற இடமெல்லாமும் திருவிழாதான். அதுவும் டோக்யோ முகத்தைப் பலர் உடலில் டாட்டூ குத்திக் கொள்ளும் அளவிற்கு உலகளவில் அந்தப் பாத்திரமும் அதில் நடித்த உர்சுலா கொர்பேரோவும் டாப் டக்கர் ஹிட்.
இப்படிச் சென்ற இடங்களில் எல்லாம் அதுவரை பார்க்காத, கட்டுக்கடங்காத கூட்டத்துடனே நடந்து முடிந்துள்ளது மூன்றாவது, நான்காவது சீசன்களின் ஷுட். அதுவும் பல தடைகளுடன். என்னென்ன தடைகள் வந்தது என்பதிலிருந்து இப்படி தொடர் குறித்த பல விஷயங்களையும் சுவாரசியத்துடன் முன்வைக்கிறது Money Heist – The Phenomenon எனும் ஒரு மணி நேர ஆவணப்படம். நெட்ஃப்ளிக்ஸே இதை உருவாக்கி வெளியிட்டுள்ளது. மணி ஹைஸ்ட் ரசிகர்கள் தவறவே விடக்கூடாத ஒன்று அந்த ஆவணப்படம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏன் நகரங்களில் பெயர் வைக்கப்பட்டது என்பது துவங்கி பல ஆச்சர்யத் தகவல்கள் இதில் உள்ளது. மூன்றாவது சீசனில் வரும் பணமழை பொழியும் காட்சி எப்படி எத்தனை சிரமங்களுக்கு நடுவில் எடுக்கப்பட்டது என்பதையும் இதில் ஜாலியாக காட்டுகிறார்கள்.
உலக அளவில் இந்தத் தொடர் பெற்றுள்ள வெற்றிக்கான காரணங்களாகச் சிலவற்றை முன்வைக்கிறது அந்த ஆவணப்படம். எதிர்பாராததைக் கொடுத்தது, ஆழமான உணர்வுகளைக் கடத்தியது, பரபர சண்டைகளையும் மென்மையான உணர்வுகளையும் சரியான விகிதத்தில் கலந்தது, தூக்கலான ரொமான்ஸ் இருந்தது, ரசிகர்களை சேர் சோஃபா நுனிக்கு கொண்டு வரும் பதட்டத்தை உருவாக்கியது எனப் பல காரணங்களை ஜாலியாக அடுக்குகிறது.
இந்தத் தொடரை உருவாக்கியவர்களுள் ஒருவரான அலெக்ஸ் பினா, உலக அளவில் மணி ஹைஸ்ட் பெற்ற வெற்றிக்கு காரணம், அது ஒரு பொழுது போக்குத் தொடர் என்பதைக் கடந்து சித்தாந்த ரீதியாக மக்களிடம் ஒரு பிணைப்பை ஏற்படுத்தி விட்டது என்கிறார்.
இத்தனைக்கு இந்த பரபர எபிசோடுகள் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டு பின் பலமுறை சரிபார்க்கப்பட்டு படமாக்கப்படுவதில்லை. படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சுடச்சுட அடுத்த எபிசோடுக்கான ஸ்க்ரிப்ட் தயாராகிக் கொண்டிருக்குமாம். சில சமயங்களில் காலை எடுக்க வேண்டிய காட்சிக்கு முந்தைய இரவுகளில் ஸ்க்ரிப்ட் எழுதிய சம்பவமும் நடந்திருக்கிறது. ஆனால் இதுவும் தொடரின் வெற்றிக்கு ஒரு காரணம் என்கிறது இந்தக் குழு. எப்படி? ஏற்கனவே எழுதியதை எடுத்தால் அதுதான் அப்படியே திரையில் வரும். ஆனால் நாங்கள் படமாக்கியதைப் போட்டு பார்த்துவிட்டு அது தரும் உணர்வுகளின் அடிப்படையில் அடுத்தடுத்த எபிசோடுகளை எழுதியதால்தான் அது ரசிகர்களுடன் இந்தளவிற்கு கனெக்ட் ஆனது என்கிறார்கள்.
இதுபோன்ற தொடர்களுக்கான மிகச்சரியான ப்ளாட்ஃபார்ம் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற தளங்கள்தான். யோசித்துப் பாருங்கள். வாரம் ஒரு எபிசோட் என்று இந்த தொடர் ஒளிபரப்பானால் இத்தனை ஆர்வத்துடன் நம்மால் அதைப் பார்த்திருக்க முடியுமா? சில வாரங்களிலேயே அந்த ஆர்வம் விட்டுப்போயிருக்கும் இல்லையா? அதுவும் ஒளிபரப்பான ஒரு மணி நேர எபிசோடிலும் ஆங்காங்கே வழக்கமான தொலைக்காட்சி விளம்பரங்கள். அத்தனை விளம்பரங்களோடு, வாரம் ஒரு எபிசோட் என்ற வட்டத்தில் வைத்து யோசித்துப் பாருங்கள். இந்தத் தொடர் தொலைக்காட்சியில் ஏன் தோல்வியடைந்தது, நெட்ஃப்ளிக்ஸில் ஏன் ரெக்கார்டுகளை அடித்து நொறுக்கியது என்பது புரியும். 'ஓடிடி'களின் பெரும் பலமே நினைத்த நேரத்திற்கு நம்மால் பார்க்க முடிவதும், அதுவும் ஒரே நேரத்தில் மொத்த சீசனையும் பிஞ்ஜ் (binge) வாட்ச் பண்ண முடிவதும்தானே? அந்த வடிவம்தான் இதுபோன்ற தொடருக்கான கச்சிதமான வடிவம். அதில் இதைப் பொருத்தியதும் பெற வேண்டிய வெற்றியை அது பெற்றுவிட்டது.
இன்னொரு முக்கியக் காரணம் டப்பிங். நெட்ஃப்ளிக்ஸில் இந்தத் தொடரை பார்ப்பவர்களில் 70 சதவிகிதம் பேர் இதை ஆங்கில டப்பிங்கில்தான் பார்க்கிறார்களாம். ஒரிஜினல் ஆடியோவை கேட்டபடி சப்டைட்டிலை பார்ப்பது பலருக்கும் ஒத்துவரவில்லை போல. வெளியான சில காலத்திலேயே இதற்கு ஆங்கில டப்பிங்கை உருவாக்கி இணைத்த நெட்ஃப்ளிக்ஸின் சமயோசிதச் சிந்தனையும் இந்தப் பெரும் வெற்றிக்கு ஒரு காரணம். இதெல்லாம் சேர, இதோ நான்காவது சீசனை வெளியான (ஏப்ரல்) முதல் வாரத்திலேயே 24 மில்லியன் சந்தாதாரர்கள் பார்த்து முடித்துள்ளனர். 150- க்கும் மேற்பட்ட நாடுகளில், 150 மில்லியனுக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சீரிஸ் உலகில் தனி சாம்ராஜ்யத்தையே கட்டமைத்துக் கொண்டு வருகிறது மணி ஹீஸ்ட்.
வழக்கமாகவே வில்லன்கள் மேலான ஈடுபாடு சமகால சினிமாக்களில் தலைதூக்கி வருகிறது. அதுவும் அவர்களை ராபின் ஹுட்டுகள் போல காட்டியதும் அவர்கள் மேல் பரிதாபமும் அன்பும் ஏற்படுவது போல காட்சிகளைக் கட்டமைத்ததும், கொள்ளையைத் தடுக்க நினைக்கும் அதிகார வர்க்கத்தின் இருட்டு பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டியதும் இந்த மொத்த கொள்ளையையே ஒரு எதிர்ப்புணர்வாக தூக்கி நிறுத்தியதுமே இந்தத் தொடருக்கும் கதாப்பாத்திரங்களுக்கும் கிடைத்த அளப்பரிய வரவேற்புக்கான காரணங்களாக இருக்கும்.
இரண்டாவது சீசனில் (ஒரிஜினலாக முதல் சீசன்) இறுதிக்கட்டத்தில், ப்ரொஃபசர் இன்ஸ்பெக்டரிடம் கூறும் வலிமையான வசனம் ஒன்று இருக்கிறது. எப்படி அரசாங்கங்கள் பணக்காரர்களுக்காகச் செயல்படுகிறது என்றும் ஏழைகளை வஞ்சிக்கிறது என்பதையும் கூறும் அந்த வசனம்தான் தொடரின் மையமான கொள்ளைக்கான ஜஸ்டிஃபிகேஷன். ஆனால் அது உலகின் மிகப் பழமையான ஆனால் வலிமையான, இப்போதும் கனெக்ட் செய்யத்தக்க வர்க்க வேறுபாட்டைத் தொட்டு எழுப்பப்பட்ட கேள்வியாதலால் ரசிகர்கள் சட்டென அதனுடன் தங்களைத் தொடர்புபடுத்திக் கொண்டு, ஆத்மார்த்தமாகவே கொள்ளைக் கூட்டத்தின் பக்கம் நிற்கத் துவங்கிவிட்டனர். அதன் வெளிப்பாடுகள்தான் போராட்டங்களில் உயர்ந்து நிற்கும் மணி ஹைஸ்ட் முகமூடிகளும் குறியீடுகளும். இப்படி எல்லா பரிமாமணங்களிலும் நிச்சயம் மணி ஹைஸ்ட் ஒரு ஃபினாமினன்தான் என்பதில் சந்தேகமில்லை.
இத்தனை வரவேற்புகளோடு சேர்ந்து பிரச்சினைகளும் வராமல் இல்லை. மணி ஹைஸ்ட் மெத்தடுகளைப் பின்பற்றி பல கொள்ளைச் சம்பவங்கள் முயற்சி செய்யப்பட்டுள்ளன. இது க்ரிமினல் நடவடிக்கைகளை ஆதரிக்கிறது என்று பலர் சொல்லி வருகின்றனர். அட அதெல்லாம் கிடக்கட்டும்... அஞ்சாவது சீசன் எப்போ வரும் என்று நகம் கடித்து காத்துக் கொண்டிருக்கின்றனர் மணி ஹைஸ்ட் வெறியர்கள்.
ஐந்தாவது சீசன் எப்போது வரும் என்பதைப் பற்றிய தகவலை இன்னும் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிடவில்லை. ஆனால் நான்காவது சீசனின் முடிவை வைத்து பார்க்கும் போது நிச்சயம் ஐந்தாவது சீசன் வரும் என்பது உறுதியாக தெரிகிறது. அத்தனை சீசன்களிலும் ரசிகர்களை சீட்டு நுனிக்கு வரவைத்து, அவர்களது எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ததோடு மட்டுல்லாது, நான்காவது சீசனில் பல அதிர்ச்சிகளையும் கொடுத்த மணி ஹைஸ்ட்டின் அடுத்த சீசன் வர குறைந்தது ஒரு வருடம் ஆகலாம். கரோனா குறுக்கீட்டில் இன்னும் கூட தாமதமாகலாம். அதற்கான படப்பிடிப்பே இன்னும் தொடங்கப்படவில்லை. ‘என்னது ஒரு வருஷம் காத்திருக்கணுமா.. அவ்ளோ வொர்த்தா என்ன இது..’ என்று கேட்டால், ‘போங்க தம்பி.. போய் ஒரு எபிசோட பாக்க ஆரம்பிச்சா, நாலு சீசனையுமே முடிக்காம டிவிய ஆஃப் பண்ண முடியுதான்னு பாத்துட்டு வாங்க’ என்று கெத்தாக சவால் விடுகின்றனர் வாத்தியின் பிள்ளைகள்!