தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமமான நாகலாபுரத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, பனை ஓலை கொட்டான்களை தயாரித்து, வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர் கிராம மக்கள்.. இந்த ஊரடங்கு அவர்களையும் விட்டுவைக்கவில்லை.
ஓலைக்கொட்டான் செய்யும் தொழிலாளர்களிடம் பேசினோம். “எங்க வூட்டுக்காரர், அவுக அப்பா எல்லோரும் காலங்காலமாக இந்த தொழில் செய்றாங்க. நான் இந்த ஊருக்கு வாழ்க்கைப்பட்டு வரும்போது, ஒரு ஜோடி கொட்டான் எட்டணா(50 பைசா) இப்போ 8 ரூபாய். போன வருசம் எல்லாம் ஜோடி 10 ரூபாய்க்கு வித்தோம். இப்ப கொஞ்சம் குறைச்சிருக்கோம். பிளாஸ்டிக் பைகளுக்கு அரசாங்கம் தடை விதிச்சதனால எங்களுக்கும் ஆர்டர் அதிகம் கிடைச்சது. தினமும் 2 ஆயிரம் கொட்டான், 3 ஆயிரம் கொட்டான்னு பஸ்களில் ஏற்றி வெளியூருக்கு அனுப்பினோம்.
இப்ப இந்த ஒன்றரை மாசமா கடைகளை மூடிட்டாங்க பாருங்க... அப்படியே ஆர்டரும் நின்னுபோச்சு... வெளியூர்களுக்கு அனுப்ப முடியலை, அதனால வருமானமும் இல்லாம போச்சுய்யா" என்றபடியே வார்த்தையில் வால்யூமை குறைத்தார் மாடத்தி அம்மாள்.
அவரே தொடர்ந்து, “ராஜபாளையம், கோவில்பட்டி, திருச்செந்தூர் போன்ற ஊர்களுக்கு சேவுக்கடை வியாபாரிகள் வாங்குறாங்க. மெட்ராஸ்ல இப்ப ஓலைக்கொட்டான்ல பிரியாணி விக்கிறாங்களாம். வாரம் ஒருமுறை மெட்ராசுக்கும் பெட்டி ஏத்துவோம்.
முதல்ல 15 குடும்பங்கள் இந்த வேலையில இருந்துச்சு. இப்ப 2 குடும்பங்கள்தான் செய்றோம். கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டதால், இப்ப எங்களுக்கு பெரிய திண்டாட்டமா இருக்குய்யா... இனி எப்படியாவது 10 நாளை ஓட்டிட்டோம்னோ, அங்கிட்டு கடையை திறந்துடுவாங்க.. ஆர்டர் வர ஆரம்பிச்சிடும், நாங்களும் பஸ்ல ஓலைக் கொட்டான்களை அனுப்பி வைப்போம். எங்களுக்கும் பிழைப்பு ஓடும்" என்றார் பக்குவமாக ஓலைகளை கிழித்தபடி.
இவரைப் போலவே ஓலைப் பெட்டி செய்யும் காளியப்பனோ, "எங்க அப்பா காலத்தில் இருந்து இந்த தொழில் செய்யுறேன். ஓலைப் பெட்டி செய்வேன், சித்தாள் வேலைக்கு போவேன், பெயிண்ட் அடிக்க போவேன். இருந்தாலும் இந்த கொட்டான் முடையுறதுல இருக்கிற திருப்தி வேற எதுலயும் கிடையாது.
இந்த ஓலைக் கொட்டான்ல காராச்சேவு போட்டு வச்சு 10 நாள் கழிச்சு எடுத்து சாப்பிட்டு பாருங்க. அப்படியே கம கமன்னு வாசம் அருமையா இருக்கும். காரச் சேவுல இருக்கிற மொறு மொறுப்பும் குறையாது. அதேபோல கருப்பட்டி மிட்டாய் வச்சு சாப்பிட்டு பாருங்க சும்மா தேவாமிர்தமா இருக்கும். ஓலைக் கொட்டானை பயன்படுத்திட்டு தூரப் போட்டாலும் மண்ணுக்கும் கெடுதி கிடையாது மக்கிப்போயிடும்.
கவுர்மெண்ட் இந்த பிளாஸ்டிக் பைகள் தடையை கடுமையாக்கணும். அப்படினாதான் எங்கள மாதிரி ஆளுக கஞ்சி குடிக்க முடியும். இந்த ஓலைக் கொட்டான்ல பெருசா லாபம் வந்திடாது. ஒரு கொட்டானுக்கு அடக்கவிலையே ரூ.3 வரைக்கும் வந்திடும். இருந்தாலும் நாம்ம செய்யுற தொழில் மூலமா மண்ணும், மக்களும் நன்மை பெருகிறார்கள் என்ற திருப்தி இருக்கு. அது போதும் எங்களுக்கு!" என்றார் அவர்.
இயல்பு நிலை எப்போது திரும்பும் என ஏழைக் குடும்பங்கள் பல காத்திருக்கிறது. அவர்களில் இவர்களை போன்ற எளிய ஜனங்களும் காய்ந்து போன வயிறோடு நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.