இந்திய நாடாளுமன்றம் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால், இரண்டு சபைகளுக்கும் உறுப்பினர் தேர்வு செய்யப்படுவதில் தான் அதிக வித்தியாசம் உள்ளது. அந்த வகையில், மக்களவைக்கு நேரடி தேர்தல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு பெரும்பான்மை பலம், அதாவது 272 உறுப்பினர்களை பெறும் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கும். அந்த வகையில், 303 உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சி தற்போது ஆட்சியில் உள்ளது. ஆனால், இதற்கு நேர்மாறாக மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 80ன் படி மாநிலங்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 250 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 238 பேர் தேர்தல் மூலமும், மீதியுள்ள 12 பேர் நியமனம் மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனால், நடைமுறையில் தற்போது 245 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 233 பேர் தேர்தல் மூலமும், மீதியுள்ள 12 பேர் நியமன உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த நியமன உறுப்பினர்களை குடியரசு தலைவர் தேர்ந்தெடுப்பார். இந்த 233 எம்.பி-களில் தமிழகத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்படுகின்ற 18 எம்.பிக்களும் அடக்கம்.
இந்நிலையில், மாநிலங்களவையின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுக்களுக்கு ஒரு முறை நிறைவடையும். அவ்வாறு நிறைவடையும் எம்பிக்களின் பதவிகளுக்கு அவ்வப்போது தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும். இந்த தேர்தல் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அடிப்படையில் நடைபெறும். அதன்படி ஒரு வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்றால் குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெறவேண்டும். இந்தக் குறிப்பிட்ட அளவு வாக்குகள், அதற்கென்று அரசியல் அமைப்பு சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள அளவீடு மூலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
வாக்குகள் = ((மொத்த உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை) x 100/ (காலியிடங்கள்+1))+1 என்ற அளவீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
தமிழகத்தில் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற நிலையில், 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனில், ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க தேவையான வாக்குகள்,
வெற்றிபெற தேவையான வாக்குகள் = ((234x100 )/(6+1))+1 = 3343.85
ஒரு எம்.எல்.ஏயின் வாக்கு 100 வாக்குகளாக கணக்கிடப்படுகிறது. இந்நிலையில், ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் அவசியமாகிறது. தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் போது எம்.எல்.ஏக்களின் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதற்கான வாய்ப்புக்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மரணமடைந்தால் அதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். தற்போது தமிழகத்தில் அதிமுகவுக்கு 123 எம்.எல்.ஏக்களும், திமுகவுக்கு 100, காங்கிரஸுக்கு 7 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். இதன்படி 18 தேதி நடைபெற இருக்கின்ற மாநிலங்களவை தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தலா மூன்று இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளது.