கரோனா விவகாரத்தில் சிறப்பாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு, அடிக்கடி தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறது. ஆனால் நிலைமையோ வேறுவிதமாக இருக்கிறது. தமிழகத்தின் தொற்று எண்ணிக்கை ஜூலை 6-ஆம் தேதி நிலவரப்படி 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆகிவிட்டது. இறப்பின் எண்ணிக்கையும் 1,571 ஆனது பெரும் துயரமாகும். கரோனா விவகாரத்தில் தன்னைத் தானே ஏமாற்றி வருகிறது அரசு.
மார்ச் 5-இல் தான் தமிழகத்தில் முதன் முதலில் கரோனா நோயாளி கண்டறியப்பட்டார். இடைப்பட்ட இந்த 4 மாதத்தில் தொற்றின் வேகம் பலமடங்காகிதே தவிர குறையவில்லை. இப்போது தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மட்டுமல்லாது, மீண்டும் ஆபத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது சென்னை மண்டலம். 5-ஆம் தேதியுடன் முழு ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவந்த அரசு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ஏகப்பட்ட தளர்வுகளை அறிவித்துச் சிக்கலை அதிகரித்திருக்கிறது. இந்த நான்கு மாவட்டங்களுக்குள் இ-பாஸ் இல்லாமலே மக்கள் போய்வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் தொற்றுகளுக்கெல்லாம் தலைமை கேந்திரமாகத் திகழ்வது சென்னைதான். அதன் தாக்கத்தில்தான் செங்கை, காஞ்சி, திருவள்ளூர் சிவப்பு மண்டலமாயின. இந்தச் சிவப்பு மண்டலத்தில் இருந்துதான் தமிழகம் முழுக்க தொற்று விநியோகம் வேகமெடுத்தது. நிலைமை இவ்வாறு இருக்க, சென்னை உள்ளிட்ட சிவப்பு மண்டலங்களைச் சரிசெய்வதற்கு முன்பே, இப்போது பெருமளவு தளர்வை ஏற்படுத்திவிட்டார்கள்.
சென்னையில் கரோனா தடுப்பில் விறுவிறுப்பாகச் செயல்படுவது போல் காட்டிக்கொண்ட அரசு, முன்னாள் சுகாதாரத்துறைச் செயலாளரும் வருவாய் மற்றும் பேரிடர் துறை ஆணையருமான ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சை, மே 1-ஆம் தேதி கரோனா தடுப்பு நடவடிகைக்கான சிறப்பு அதிகாரியாக நியமித்தது. அவருக்குத் துணையாக 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. அப்போது சென்னையில் தொற்று எண்ணிக்கை 1,082-தான். ஒட்டுமொத்த தமிழகத்திலும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை அப்போது 2,526-ஐ தாண்டியிருக்கவில்லை.
இதன் பிறகாவது கரோனாவின் வேகம் கட்டுபட்டதா என்றால், முன்பை விடவும் வைரஸின் வேகம் பல மடங்கானதுதான் மிச்சம். அதுவரை சென்னையில் 50, 100 என்ற கணக்கில் அதிகரித்த தொற்று, நாளொன்றுக்கு 500, 1000, 1500, 2000 என்று எகிறி அது 3,000 வரை நெருங்கியது. சென்னையில் 6-ஆம் தேதி நிலவரப்படி மொத்த தொற்று எண்ணிக்கை 70, 017 ஆக உயர்ந்திருக்கிறது.
இதை, ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சின் கவனக் குறைவு என்று சொல்ல முடியாது. இவரைப் போன்ற அதிகாரிகள் களமிறக்கப்பட்டும் கரோனாவின் வேகம் குறையவில்லை என்றால், அரசு கையாளும் நடைமுறையில்தான் கோளாறு என்று பொருள். முதல் குறைபாடு, ஊரடங்கை அறிவித்துவிட்டு அதில் ஆயிரத்தெட்டு தளர்வுகளை அறிவிக்கும் அரசின் வேடிக்கை டெக்னிக்தான்.
கரோனா இப்போது சமான்ய மக்களை மட்டுமல்லாது இந்நாள் முன்னாள் அமைச்சர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் அலுவலகத்திலேயே இருக்கும் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பிரபல மருத்துவர்கள், செவிலியர்கள், வட்டாட்சியர்கள், தொழிலதிபர்கள், ஊடகத்துறையினர் என அனைவரையும் பாடாய்ப்படுத்தி வருகிறது. அதேபோல் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனில் தொடங்கி, விஜயா மருத்துவமனை டைரக்டர் சரத் ரெட்டி, பாடகர் ஏ.எல்.சீனிவாசன், டி.வி.எஸ். குழும பாஸ்ட்னர்ஸ் நிறுவனத் தலைவர் நாராயணசாமி பாலகிருஷ்ணன் என பிரபலங்கள் பலரையும் அது மரணத்தில் ஆழ்த்திகொண்டே இருக்கிறது.
இப்படிப்பட்ட நெருக்கடி மிகுந்த நிலையில்தான், சிவப்பு மண்டலப் பகுதிகளில் ஊரடங்கை பலவீனப்படுத்தி, தளர்வு அறிவிக்கப்பட்ட முதல் நாளான 6-ஆம் தேதியே சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலும் டிராஃபிக்கைத் திணறவைத்திருக்கிறார்கள்.
இரண்டொரு நாட்கள் சென்னையின் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்திற்குள் வந்ததையே பெரிய சாதனையாகக் கருதி, கரோனா குறைந்து வருவதற்கான அறிகுறி இது என்று தமுக்கடிக்கிறார்கள். இதே நிலை தொடர்கிறதா? என்று இன்னும் சிலநாள் அவதானிக்கக் கூட அவர்களுக்குப் பொறுமை இல்லை. தளர்வை ஏற்படுத்துவதிலேயே அவசரம் காட்டுகிறார்கள்.
இதைப் பார்க்கும் போது, சென்னையில் தொற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைப்பதற்காக, தாங்கள் விரும்பும் எண்ணிக்கை வரும் வரையில் மட்டும் பரிசோதனையைச் செய்கிறார்களோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
கரோனா தொற்று இல்லாத நிலை என்று அவர்கள் இப்போதைக்கு அறிவிக்க வேண்டுமானால், கரோனா பரிசோதனையை முழுதாகக் கைவிட்டால்தான் சாத்தியம். பரிசோதனை செய்தால்தானே கரோனா தென்படுகிறது என்று பரிசோதனைகளை அவர்கள் கைவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எது எப்படியோ, மறுபடியும் ’முதல்ல இருந்து...’ என அவர்கள் ஊரடங்கு விளையாட்டை ஆரம்பிக்காமல் இருந்தால் சரிதான்.
படங்கள்: அசோக், ஸ்டாலின், குமரேஷ்