தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா ஆத்தூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் நரசிம்மலு - ராமானுஜம் தம்பதியர். இந்த தம்பதிக்கு ஒன்பது குழந்தைகள். அதில் இரண்டாவதாக பிறந்தவர் பிரதாப சந்திரன். பிரதாப சந்திரனுக்கு ஒரு அண்ணன் மூன்று தம்பிகள் மற்றும் நான்கு தங்கைகள் உண்டு. நரசிம்மலு கோவில்பட்டியில் இயங்கிவந்த ஜப்பான் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்கல் எஞ்சினியராக பணியாற்றி வந்தார். 1922 ஜூலை 15 ஆம் தேதி பிறந்த பிரதாப சந்திரன்தான் பின்னாளில் சங்கரய்யாவாக மாறினார். சங்கரய்யா என்பது நரசிம்மலுவின் அப்பாவின் பெயர். அதாவது பிரதாப சந்திரனின் தாத்தாவின் பெயர். இந்த பெயர் மாற்றப் பின்னணி இரண்டு விதமாக சொல்லப்படுகிறது. ஒன்று.. பிரதாப சந்திரன் சிறுவயதிலேயே அடம்பிடித்து தாத்தா பெயரான சங்கரய்யாவை வைத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது. மற்றொன்று, தாத்தாவே அடம்பிடித்து தனது பெயரை பேரனுக்கு வைக்கவேண்டும் என பிடிவாதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ.. பிரதாப சந்திரன் சங்கரய்யாவாக மாறினார்.
தூத்துக்குடி மேலூரில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார் சங்கரய்யா. அவரது தந்தை நரசிம்மலு, பணி நிமித்தம் காரணமாக மதுரை நகரசபையில் நீரேற்று நிலைய சூப்பிரெண்டாக பணி ஏற்றார். இதனால், அவரது குடும்பமே மதுரைக்கு இடம் பெயர்ந்தது. பின்னர், மதுரையிலேயே பள்ளிப் படிப்பை முடித்த சங்கரய்யா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வரலாறை விருப்பப் பாடமாக தேர்வு செய்து BA படிப்பை மேற்கொண்டார். கல்லூரி காலத்தில் மாணவர் பேரவைத் தலைவராக செயல்பட்ட சங்கரய்யா, சுயமரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். அதன் விளைவாக.. 1938ல் கொழுந்துவிட்டு எரிந்த இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று ராஜாஜிக்குக் கறுப்புக்கொடி காட்டும் அளவுக்கு துணிந்து செயல்பட்டார். மாணவர் சங்கம் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டங்களை நடத்தினார். சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்றிருந்த சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அழைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றச் செய்தார். இப்படி, சங்கரய்யாவின் புரட்சிகர செயல்பாடுகளை விரும்பாத கல்லூரி நிர்வாகம் அவரைக் கல்லூரியிலிருந்து நீக்க முடிவு செய்தது. இதையடுத்து சங்கரய்யாவுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் மாணவர்கள் களமிறங்க, தனது முடிவை கல்லூரி நிர்வாகம் மாற்றிக்கொண்டது வரலாறு.
இதே காலகட்டத்தில் நடைபெற்ற, தாழ்த்தப்பட்ட மக்களை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் போராட்டம், அவருக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, வர்க்க வேறுபாடு பற்றிய புரிதலுடனும், வர்ண வேறுபாடு பற்றிய தெளிவுடனும் சங்கரய்யா செயல்படத் தொடங்கினார். அதேசமயத்தில், பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான சங்கரய்யாவின் தொடர் போராட்டங்கள் ஆங்கிலேய அதிகாரிகளை எரிச்சலூட்டியது. இதன் காரணமாக, இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சங்கரய்யா கைது செய்யப்பட்டார். BA இறுதித் தேர்வுக்கு இன்னும் 15 நாட்களே இருந்த நிலையில், சங்கரய்யா கைது செய்யப்பட்டதால் அவரது கல்லூரி படிப்பே நின்றுவிட்டது. இது தனது மகன் எப்படியாவது படித்து முடித்துவிட்டு வழக்கறிஞர் ஆகிவிடுவான் என கனவு கண்டு கொண்டிருந்த தந்தை நரசிம்மலுவின் தலையில் இடியாய் இறங்கியது. ஆனாலும், சங்கரய்யா தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார். கைது செய்யப்பட்ட சங்கரய்யா வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு காமராஜர் உள்ளிட்ட பெரும் பெருந்தலைவர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. சிறைக்குள்ளும் சங்கரய்யா சும்மா இருக்கவில்லை. ஆங்கிலேய அரசின் சிறைக் கொடுமைகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். இதனால் தனிமைச் சிறையில் அடைக்கப்படுகிறார். அவருடன் கைதான மற்றவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
சும்மாவே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஆடும் சங்கரய்யாவுக்கு, சிறை வாழ்க்கை சலங்கையை கட்டிவிட்டது. சொல்லவா வேண்டும்.. முன்பை விட இப்போதுதான் சங்கரய்யா அதிக வீரியத்துடன் வெளிப்படத் தொடங்கினார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காக மாணவர்களை ஒன்று திரட்டி மாணவர்கள் ஊர்வலத்திற்கு தலைமை ஏற்கிறார். அப்போது நடத்தப்பட்ட போலீஸ் தடியடியில் காயம் ஏற்படுகிறது. மீண்டும் கைது.. மீண்டும் போராட்டம்.. மீண்டும் காயம்.. இதுதான் சங்கரய்யாவின் வாழ்க்கையாக மாறிப்போனது. 1944ஆம் ஆண்டு மாணவர் அமைப்பிலிருந்து விலகிய சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றார். பின்னர், 1947 ஆம் ஆண்டு நவமணி எனும் கம்யூனிஸ்ட் குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். நவமணி கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் சங்கரய்யா குடும்பத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதை கொஞ்சமும் பொருட்படுத்தாத சங்கரய்யா, தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார். பின்னர், கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டபோது தலைமறைவு வாழ்க்கையை தேர்ந்தேடுத்த சங்கரய்யா, சலவைத் தொழிலாளி வீட்டில் அழுக்கு மூட்டைகளுக்கு நடுவில் மாதக்கணக்கில் பதுங்கியிருந்திருக்கிறார். பின்னர், தடை நீக்கப்பட்டவுடன் மீண்டும் துடிப்புடன் கட்சிப்பணி செய்து வந்த சங்கரய்யா தேர்தல் பணியிலும் ஈடுபட்டார்.
1957 ஆம் ஆண்டு மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சங்கரய்யா அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஆனாலும் மனம் தளராத சங்கரய்யா மீண்டும் தேர்தல் களம் கண்டார். விளைவாக, 1967ல் மதுரை மேற்கு தொகுதியிலிருந்தும், 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் மதுரை கிழக்கு தொகுதியிலிருந்தும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் பதினைந்து ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1964ல் பிளவுபட்டபோது 35 தேசியக் கவுன்சில் உறுப்பினர்கள் பிரிந்து சென்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கியது வரலாறு. அந்த 35 பேரில் கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மற்றும் சங்கரய்யாவும் ஒருவர். சங்கரய்யா தமிழ்நாடு முன்னாள் முதல்வர்களான கலைஞர் மற்றும் எம்ஜிஆரிடம் தீவிர நட்பு கொண்டிருந்தார். முன்பெல்லாம், மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற கிராமத்திலிருந்து நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதை கவனித்த சங்கரய்யா, இனி அனைத்து கிராமங்களிலும் நியாய விலைக் கடைகளைத் திறப்பது பற்றி ஆளுநர் உரையில் சேர்க்க வேண்டுமென அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் கோரிக்கை வைத்தார். எம்.ஜி.ஆரும் இதை ஏற்றுக் கொண்டார். இதுபோல பல சமயங்களில் எம்ஜிஆருக்கு அறிவுரை கூறியவர் சங்கரய்யா. அதேபோல, திமுக முதல் முறையாக 1967ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றபோது போக்குவரத்து துறையில் கடும் பிரச்சனைகளை சந்தித்தது. அப்போது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கலைஞருடன் கலந்துபேசி சுமூக தீர்வை ஏற்படுத்தியதில், முக்கியப் பங்காற்றியவர் சங்கரய்யா. சுயமரியாதை திருமணங்களை சட்டமாக்கிய கலைஞருக்கு உற்ற துணையாகவும் இருந்தவர் சங்கரய்யா.
சாதி மத தீண்டாமைகளுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்து வந்தவர் சங்கரய்யா. சாதிமறுப்பு திருமணங்களை மேடைகளில் பேசுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், தன் குடும்ப வாழ்விலும் செயல்படுத்திக் காட்டியவர் சங்கரய்யா. அவர் தொடங்கி, அவரின் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் வரை பலரும் சாதி மறுப்பு திருமணங்களையே செய்தனர். அதற்கு விதை போட்டவர் சங்கரய்யா. இப்படி பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவித்தது மு.க. ஸ்டாலின் அரசு. மேலும், தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவண செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15 ஆம் தேதி அறிவித்திருந்தார். இதனையடுத்து சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அனுமதி வழங்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என். ரவி மறுத்தார். விடுதலைப் போராட்ட வீரருக்கு கவுரவ டாகடர் பட்டம் வழங்க அரசு அனுப்பிய கோப்பில் கவர்னர் ரவி கையெழுத்திட வேண்டும் என அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் கோரிக்கை வைத்து வந்தன.
இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கரய்யா, தற்போது உயிரிழந்துள்ளது தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் அவருக்குத் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்த சங்கரய்யா நினைத்திருந்தால் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம்.. ஆனால், மக்களுக்காகத்தான் வாழ்வேன் என்று பல்வேறு வலிகளையும், தடைகளையும் தாண்டி மகத்தான வாழ்வை வாழ்ந்து காட்டியுள்ளார் சங்கரய்யா.