அன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்?
அன்புச்செழியனை இந்த அரசு கைது செய்து நடவடிக்கை எடுக்காது என்று ராமதாஸ் சொல்கிறார்.
தர்மயுத்தம் நடத்திய அமைச்சரின் வாரிசின் கருப்புப்பணத்தை கையாண்டவர் அன்புச்செழியன் என்கிறார்...
இதுக்குமேல அன்புச்செழியனுக்கு வேறு பாதுகாப்பு வேணுமா என்ன?
ஆனால், ஓபிஎஸ்சை ஒழிக்க மனதுக்குள் விரும்பும் இபிஎஸ்சின் ஆதரவு அமைச்சர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று அதிமுகவில் ஒரு பிரிவினர் கிசுக்கிசுக்கிறார்கள்.
நேற்றே, அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாக பேட்டி அளித்தார். கந்துவட்டிக்கு எதிரா தைரியமாக புகார் கொடுக்கலாம் என்று அவர் கூறியிருந்தார்.

அவர் சொல்லி்ட்டா புகார் கொடுத்துருவாங்களா?
போலீஸும், கட்சிப் பொறுப்பாளர்களும், அமைச்சர்களும் கந்துவட்டிக்காரர்களின் பாக்கெட்டில் இருக்கிறார்கள் என்று கூறப்படும் நிலையில் யார்தான் துணிச்சலாக புகார் கொடுப்பார்கள்?
கந்துவட்டியால் பாதிக்கப்படுவோர் செத்தால் மட்டுமே செய்தியாகும்.
அதிலும், சாதாரண ஜனங்கள் என்றால் கலெக்டர் அலுவலகத்தில் பச்சைக் குழந்தைகளோடு தீக்குளித்து சாகவேண்டும்.
வசதியானவர் என்றால் கடிதம் எழுதிவைத்து சாகவேண்டும். அதிலும், சினிமா தயாரிப்பாளராகவும், பிரபல சினிமா நடிகர், டைரக்டர்களின் நண்பராக இருக்க வேண்டும்.
அப்போதுதான் அவர்களுடைய சாவும் சாவுக்கான காரணமும் வெளியே தெரியவரும்.

அசோக்குமார் இறந்தவுடன்தான் சினிமாத் துறையில் கந்துவட்டிக் கொடுமை வெளியே வருகிறது என்றில்லை. அவருடைய வெளிப்படையான கடிதமும், அவர் சார்ந்த நண்பர்கள் உறவினர்களின் துணிச்சல்தான் அன்புச்செழியனை ஓடி ஒளிய வைத்திருக்கிறது.
இப்போது அன்புச்செழியனுக்கு வேறு வழி இல்லை. அரசுக்கும் வேறு வழியில்லை. அன்புச்செழியனின் ஆட்கள் அவருடைய இடத்தி்ல ராஜ்ஜியம் செய்யலாம்.
தலைமறைவாக இருந்துவிட்டு, வழக்கைச் சந்தித்துவிட்டு, அல்லது, அரசு உதவியோடு வழக்கையே ஊத்திமூடச் செய்துவிட்டு மீண்டும் அன்புச்செழியன் தனது பைனான்ஸ் தொழிலை நடத்தவும் வாய்ப்பிருப்பதாக டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் மறைமுகமாக சொல்கிறார்.
இது எங்கே கொண்டுபோய் முடியும் பார்க்கலாம்...
திரையுலகினர் கந்துவட்டிக்கு எதிராக வைக்கும் பொங்கலின் ருசி அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.
-ஆதனூர் சோழன்