எம்.ஜி.ஆருக்குப் பிறகு வெளிநாடு செல்லும் அ.தி.மு.க. முதல்வர் என்ற பெயரைப் பெறுகிறார் எடப்பாடி. ஜெ.வை சிகிச்சைக்காகக்கூட வெளிநாடு அழைத்துச் செல்லாத நிலையில், எடப்பாடியின் பயணம் எதிர்பார்ப்பையும் சர்ச்சையையும் சேர்த்தே உருவாக்கியுள்ளது.
28-ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் எடப்பாடி நேராக அமெரிக்கா போய் தமிழரும் கூகுள் நிறுவனத்தின் தலைவருமான சுந்தர் பிச்சையை சந்திக்கிறார். அதற்குப் பிறகு பஃபலோ ஸ்டேட் (எருமை மாடுகளின் மாநிலம்) என்கிற இடத்திற்கு செல்கிறார்.
அங்கிருந்து நியூஜெர்ஸி மாநிலத்திற்கு செல்கிறார். அதன்பிறகு கிரேட் பிரிட்டன் எனப்படும் இங்கிலாந்து நாட்டிற்கு செல்கிறார். இதில் நியூஜெர்ஸி என்கிற இடத்தில் ஒரு உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையை பார்வையிடுகிறார். அமெரிக்காவில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார். செப்டம்பர் 9 காலையில் சென்னை திரும்புகிறார். இதுதான் அவரது பயணத்திட்டம் பற்றி அரசு வட்டாரங்களில் பரிமாறப்படும் தகவல்கள்.
13 நாட்கள் சுற்றுப் பயணத்தின் மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. முதல்வருடன் பதினோரு பேர் கொண்ட குழு செல்கிறது. அதில் முதல்வரின் உதவியாளர் கிரிதரன், முதல்வரின் செயலாளர்களான விஜயகுமார் ஐ.ஏ.எஸ்., சாய்குமார் ஐ.ஏ.எஸ். ஆகியோருடன் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, அந்தந்த துறைகளின் செயலாளர்கள் இவர்களோடு மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ஆகியோர்தான் இந்த பதினோரு பேர் குழு. இவர்கள் ஒரே நேரத்தில் எடப்பாடியுடன் பயணிக்க மாட்டார்கள். எங்கே முதல்வருடன் சேர வேண்டும் என தனித்தனியாக நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்டுள்ளது. எடப்பாடியின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் அவருக்கு மிக நெருக்கமான அமைச்சர்கள் எனச் சொல்லப்படும் தங்கமணியும், வேலுமணியும் இடம்பெறாதது, கோட்டை வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரிதரன் மட்டுமே முழுமையாக இருப்பாராம். அதுதான் மேட்டர்'' என்கிறார்கள் மேல்மட்டத்தில்.
ஜெ.வின் அமைச்சரவையில் எடப்பாடி முதன் முதலாக அமைச்சர் பதவி பெற்றபோது அவருடன் இணைந்தவர்தான் கடலூரைச் சேர்ந்த அரசு ஊழியரான கிரிதரன். கூவத்தூர் முகாமில் 32 எம்.எல்.ஏ.க்களை எடப்பாடி முழுவதுமாக கவனித்துக் கொண்டபோது, அதற்கான ஏற்பாடுகளை நிறைவாக செய்தவர் கிரிதரன்தான்'' என்கிறார்கள். மழைநீர் சேகரிப்பு விளம்பரத்தில் வேலுமணி தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில் எடப் பாடியுடன் முட்டல் மோதல் வெளிப்படையானது. தங்க மணி கடந்த ஒரு வாரமாக எடப்பாடி கலந்துகொள்ளும் எந்த விழாவிலும் தலைகாட்டாமல் தவிர்க்கிறார். எனவே இவர்கள் இருவரையும் வெளிநாட்டுப் பயணத்தில் எடப்பாடி புறக்கணித்து விட்டாலும் அவர்களுக்கிடையிலான நடைமுறை விவகாரங்கள் தொடர்கின்றன. அதுபற்றி நன்கறிந்த உதவியாளர் கிரிதரனையும் செயலாளர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ்.சையும் எடப்பாடி அழைத்துச் செல்கிறார். இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது'' என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.
ஜெ. ஆட்சியில் நத்தம், ஓ.பி., வைத்திலிங்கம் ஆகியோர் கொடுத்த மாதாந்திர தவணையை, கார்டனில் ஜெ.விடம் கொடுக்கும் பொருளாளராக இருந்தார் எடப்பாடி. சசிகலா வெளியேற்றப்பட்ட நேரத்தில் நடந்த ஏற்பாட்டை மறுபடியும் சசிகலா கார்டனுக்கு வந்ததும் கண்டுபிடித்து விட்டார். அதில், ஜெ.விடம் தந்தது போக மீதமிருந்தவை கரூர் அன்புநாதன் மூலம் வெளிநாட்டில் முதலீடானது. இதனால், ஓ.பி., நத்தம், வைத்திலிங்கம் ஆகியோர் போயஸ் கார்டனில் விசாரிக்கப்பட்டார்கள். ஜெ. பாணி தண்டனைகளும் நிறைவேறின. எடப்பாடி இதில் சிக்கவில்லை. காரணம், அவர் அப்ரூவராகிவிட்டார். இதுதான், ஜெ. மரணத்திற்குப் பிறகு, ஓ.பி.எஸ்.ஸிடமிருந்த முதல்வர் பதவி, எடப்பாடி பக்கம் வந்ததற்கும் காரணம். சசிகலாவுக்கு சிறைத் தண்டனை கிடைத்த நிலையில், கூவத்தூர் முகாமில் எடப்பாடி கச்சிதமாக காய் நகர்த்தியும், ஜெ. ஆட்சிக்கால சேமிப்புகளை இறக்கியும் சசிகலாவின் நம்பிக்கையைப் பெற்று முதல்வர் பதவியை அடைந்தார். இதுதான் எடப்பாடி ஸ்டைல் இதையெல்லாம் தெரிந்த ஒரே ஜீவன் அவரது உதவியாளர் கிரிதரன்தான்.
எடப்பாடி முதல்வர் ஆனதும் அந்த கிரிதரன் மூலமாகவே வேலுமணியையும் தங்கமணியையும் டீல் செய்தார். சேலத்தை சேர்ந்த திரிவேணி எர்த் மூவர்ஸ் மூலம் பா.ஜ.க.வை சமாதானப்படுத்தியதும் சசிகலாவை தூக்கி எறிந்தார் எடப்பாடி. அதன்பிறகு எடப்பாடிக்கு எல்லாமாக இருந்த வேலுமணி, தங்கமணியுடனும் தற்போது விவகாரமாகியுள்ளது. அதை சரி செய்யத்தான் கிரிதரன் துணையுடன் எடப்பாடி பாரின் விசிட்டிற்கு செல்கிறார்'' என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்க மானவர்கள். தங்கமணி, வேலுமணி, எடப்பாடி மூவரும் ஒரு வகையில் உறவினர்கள் மூவரும் கிரிதரன் வீட்டு திருமணத்திற்கு லம்ப்பாக உதவியிருக்கிறார்கள்.
இந்நிலையில், ""திரிவேணி எர்த் மூவர்சை சேர்ந்த நிர்வாகிகளான கார்த்திகேயனும் பிரபாகரனும் முன்கூட்டியே அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் சென்று எடப்பாடிக்காக காத்திருக்கிறார்கள். இது எடப்பாடியின் பயணத்தில் உள்ள ரகசிய விவகாரங்களை வெளிப்படுத்துகிறது'' என்கிறார்கள் கோட்டை வட்டாரத் தினர். பயண நோக்கத்திற்கான ஏஜெண்ட்டுகளாக இவர்கள் முன்கூட்டியே சென்றிருப்பதாகத் தெரிவிக் கிறார்கள். இதைப் பற்றி கிரிதரனிடம் அவரது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டோம். நாம் அவர் மீது எழும் குற்றச்சாட்டுகளை சொன்னபோது பலமாக சத்தம் போட்டு சிரித்தார். அவர் எந்த பதிலையும் சொல்ல மறுத்து விட்டார்.