Skip to main content

வாழையடி வாழையாக வம்சாவளி அரசியல் !!!

Published on 23/09/2017 | Edited on 23/09/2017

வாழையடி வாழையாக வம்சாவளிஅரசியல் !!!





காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி, அமெரிக்காவின் பெர்க்ளி நகரில் உள்ள  கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் உரையாற்றினார். பின்னர், கேள்வி பதில் நேரத்தில்,  காங்கிரசின்  வம்சாவளி   வாரிசு அரசியல் பற்றி கேட்கப்பட்ட பொழுது, "இந்தியாவே அப்படிதான் இயங்குகிறது. இந்த விஷயத்தில் என்னை நீங்கள் தனிமைப்படுத்த முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் வாரிசுகள் அரசியலில் இருக்கின்றனர். ஏன் சினிமாவிலும், தொழில்துறையிலும் வாரிசுகள் இருக்கின்றனர்' என்று அபிஷேக் பச்சனையும் முகேஷ் அம்பானியையும் குறிப்பிட்டுப் பேசிய ராகுல், "பொறுப்புக்கு வரும் வாரிசுகளுக்கு திறமை உள்ளதா என்று மட்டும் பார்க்க வேண்டும்" என்று கூறி முடித்தார். தன்னை நோக்கி வந்த கேள்வியை இந்தியாவை நோக்கி திரும்பிவிட்டார். இந்தியாவில் மட்டும்தான் இப்படியா என்று பார்த்தால், உலகின் பல நாடுகளிலும் வாரிசுகள், திறமை இருக்கிறதோ இல்லையோ, அரசியலில் இருக்கத்தான் செய்கிறார்கள்.   


அமெரிக்கா




கென்னடி வம்சம் அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகவும் பிரபலமான வம்சமாக திகழ்கிறது. ஜான் எஃப். கென்னடி ஜனாதிபதியாகவும். அவருடைய சகோதரர் ராபர்ட் அட்வகேட்  ஜெனரலாகவும், ஜனாதிபதி வேட்பாளராகவும் இருந்தார். ஆனால் இருவரும்  படுகொலை செய்யப்பட்டனர்.  ஜான் எஃப். கென்னடியின் மரணம், அமெரிக்க மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்று வரை  அரசியலில் அவரது குடும்பத்திலிருந்து  ஒருவராவது ஈடுபட்டு வருகின்றனர்.ஜோசப் பி. கென்னடி இன்று அந்த பாரம்பரியத்தை தொடர்கிறார். 




அமெரிக்காவில் மற்றோரு குடும்பமும் அரசியலில் புகழ் பெற்றது.  1952 ல் செனட்டிற்கான தேர்தலில் வெற்றிபெற்ற பணக்கார புஷ்  குடும்பத்தின் முதல் அரசியல்வாதி  பிரஸ்காட்  புஷ் ஆவார்.  இந்தக்  குடும்பம்  ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ. புஷ் மற்றும் அவரது மகன் ஜார்ஜ் டபுள்யூ புஷ் ஆகிய இரண்டு ஜனாதிபதிகளை அமெரிக்காவிற்கு தந்துள்ளது.  மேலும் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் தனது மகள் இவான்கா டிரம்ப்பை தன் உதவியாளராகவும், அவரது கணவரை வெள்ளை மாளிகையின் ஆலோசகராகவும் நியமித்துள்ளார். இது இன்னொரு வம்சாவளியின் தொடக்கமாகவும் இருக்கலாம்.   





வடகொரியா


அமெரிக்காவின் வாரிசு அரசியல் பற்றி பேசும்பொழுது அடுத்து நினைவுக்கு வருவது அமெரிக்காவுக்கே அல்வா கொடுத்து வரும் வடகொரியா தான். கடந்த சில நாட்களாக ட்விட்டரடி சண்டை போட்டு வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பையும், வடகொரிய அதிபர் 'கிம்'மையும் 'கிண்டர் கார்டன் பிள்ளைகள் போல சண்டை போடுகிறார்கள்' என்று வர்ணித்துள்ளார் ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர். டிரம்ப் இவரை ராக்கெட் மனிதர் என்று கிண்டல் செய்துள்ளார். 




பார்க்க பழைய ஜாக்கி சான் படங்களில், அப்பாவி அண்ணனாக நடித்த 'சாமோ ஹங்' போல தோற்றமளிக்கும் வடகொரிய அதிபர்  'கிம் ஜாங் உன்'னின்   குடும்பம் வடகொரியாவில் வாரிசு அரசியல் சர்வாதிகார உக்கிரத்தின் உச்சமாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள், நாட்டின் அனைத்து பதவிகளிலும் உள்ளனர். கிம் ஜாங் இல் இறந்த  பின் அவரது மகனான கிம் ஜாங் உன்   2011ல் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இவர்  அடுத்த உலகப் போரை ஆரம்பித்து வைக்காமல் ஓய மாட்டார் போல... 


கனடா





கனடா நாட்டிலும் வாரிசு அரசியல்  உள்ளது. வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்பவர்களை கட்டுப்படுத்தும் பல நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த பொழுது, 'அவரு விடலைனா என்ன,  கனடாவுக்கு வாங்க...' என்று அன்புக் குரல் கொடுத்து உலக மக்களின் மதிப்பைப் பெற்றவர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. கனடா வாழ் தமிழர்களின்  பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பொழுது சிலம்பம் சுற்றியதன் மூலம் சமூக வலைதள  தமிழர்களின் அன்பை அதிகமாகப் பெற்றவர் இவர். கனடாவின் முன்னாள் பிரதமர் பியர் எலியட் ட்ரூடோவின் மகனான  ஜஸ்டின் ட்ரூடோ 2015 ல் பதவியேற்றார். முன்னாள் பிரதமரின் மகன்  பிரதமர் ஆவது கனடாவில் இதுவே முதல்முறை. இவரின் தந்தை 1980 முதல் 1984 வரை பதவி

வகித்தார்.


கென்யா




ஜோமோ கென்யாட்டா கென்யாவின்  விடுதலைப்  போராட்டத்தில் ஈடுபட்டவர் ஆவார்.  1963ல் பிரிட்டனிடம் இருந்து  சுதந்திரம் பெற்ற பின்  1978இல்  அவர் சாகும் வரை நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்.  அவரது மகன்  உஹுரு கென்யாட்டா 2013ல் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.  உஹுரு கென்யாட்டாவின் மூத்த மகனது பெயர், அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான 'ஜோமோ கென்யாட்டா'வின் பெயர் தான். பெயர் மட்டுமா இல்லை பதவியுமா என்பது வரும் காலத்தில் தெரிய வரும். 


இந்த நாடுகள் மட்டுமல்லாமல் கியூபா, சிங்கப்பூர், பிரான்ஸ், சவுதி என பல நாடுகளிலும்  வாரிசு அரசியல் உள்ளது. இந்தியாவில் தேசிய அளவில் காங்கிரஸிலும், மாநிலங்களில் காஷ்மீர் தொடங்கி  ராஜஸ்தான், ஒடிஷா, உத்திர பிரதேசம், பீகார், கர்நாடகா என தமிழகம் வரையில் வாரிசு அரசியல் பரவியுள்ளது. எல்லா வாரிசுகளுக்கும் அரசியல் சூழ்நிலையும், அவர்கள் வருவதற்கான காரணங்களும் ஒன்றாகவே இருப்பதில்லை. வாரிசுகளுக்கு வரவேற்பும் இருக்கிறது எதிர்ப்பும் இருக்கிறது. எனவே, ராகுல் சொன்னது போல, வாரிசுகள் என்று பார்க்காமல், திறமையைப் பார்க்கலாம். சில சமயங்களில் அது இல்லாமல் இருப்பதே பிரச்சனையாகிறது.


ஹரிஹரசுதன் 

சார்ந்த செய்திகள்