குஜராத்தில் பாஜகவுக்கு சரிவு ஏற்படுவதை மறைத்து பெரிய வெற்றியைப் போல மீடியாக்கள் முனைப்பாக முட்டுக்கொடுக்கின்றன. இது, ஏன் என்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது.
மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அதிகரிப்பதும், பாஜகவின் வெற்றிக்காக மோடி படாதபாடு படுவதும் கண்கூடாக தெரிகிறது. ஆனால், ஒரு சில மீடியாக்கள்தான் அதை அம்பலப்படுத்துகின்றன. குறிப்பாக வட இந்திய மீடியாக்கள் பாஜகவின் திணறலை வெளிப்படுத்துகின்றன.
குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக தன்னிடமிருந்த பல நகராட்சிகளை இழந்திருக்கிறது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 66 நகராட்சிகளைக் கைப்பற்றி இருந்தது. ஆனால், 18 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் அந்தக் கட்சி 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
அதேசமயம், கடந்த முறை 8 நகராட்சிகளை கைப்பற்றியிருந்த காங்கிரஸ் கட்சி, இப்போது 16 நகராட்சிகளாக அதிகரித்துள்ளது.
மொத்தம் 2060 நகராட்சி வார்டுகளில் பாஜக 1167 வார்டுகளையும், காங்கிரஸ் 630 வார்டுகளையும் கைப்பற்றி இருக்கின்றன. சுயேச்சைகள் 202 வார்டுகளை கைப்பற்றி இருக்கிறார்கள்.
இந்தத் தேர்தல் முடிவுகளில் சுமார் 10 நகராட்சிகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்கிறார்கள். ஆனால், அந்த நகராட்சிகளை இரண்டு கட்சிகளுமே உரிமை கொண்டாடுகின்றன. சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவோடு அவற்றைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இந்தத் தேர்தலின் இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், கடந்த உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனது சின்னத்தில் போட்டியிட தயங்கி, சுயேச்சைகளை ஆதரித்தது. சுயேச்சை சின்னத்திலேயே தனது ஆதரவாளர்களை நிறுத்தியது. ஆனால், இந்தமுறை காங்கிரஸ் கட்சி நேரடியாகவே களம் இறங்கியிருக்கிறது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனது பல இடங்களை பாஜக இழக்கும் என்றே கருதப்படுகிறது.