Published on 20/07/2018 | Edited on 20/07/2018
கல்வி, கட்டிடக்கலை, ஊருணி மற்றும் சாப்பாடு என தனித்துவ அடையாளங்களைப் பதித்தது செட்டிநாடு, இயற்கையிலேயே செம்பாறாங்கல் எனப்படும் ஒரு வகை கல் இந்தப் பகுதியில் அதிகம். செட்டிநாட்டின் ஊருக்கேற்ப செம்மண், களிமண், உலர் மண், உலர் களி மண் என மண் வகை மாறுபட்டாலும், பெரும்பாலும் இருப்பது மாவட்டம் முழுவதும் இருப்பது செம்மண் கலந்த சரளை மண்ணே.
எத்தைகைய இயற்கை சீற்றங்களுக்கும் இந்த மண் தாங்கும் என்பதாலேயே காவிரி பூம்பட்டிணத்திலிருந்து காரைக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பிடங்களை அமைத்தனர் நகரத்தார்கள். இயற்கையை எதிர்க்கும் சரளை மண்ணிலும் திராட்சையை விளையவைத்து தனித்துவமாக மிளிர்கிறது செட்டிநாட்டு திராட்சை.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து குன்றக்குடி செல்லும் கிராமச்சாலைகளின் விளிம்பிலிருக்கின்றது பேயன்பட்டி கிராமம். அடர்த்தியான யூகலிபட்ஸ் மரம், அதனருகே மின்சார நிலையம். தடுக்கி விழுந்தால் முகம் உடையுமளவிற்கு செம்பாறாங்கல். இங்கு தான் இருக்கின்றது திராட்சைத் தோட்டம்.
"ஆரம்பத்தில் வீட்டு உபயோகத்துக்காக, 12 பன்னீர் திராட்சை குச்சிகளை தேனியில் இருந்து வாங்கி நட்டு வளர்த்தேன். பயனளித்தது. நல்ல விளைச்சலையும் தந்தது. தற்போது திண்டுக்கல், தேனியிலிருந்து குச்சி வாங்கி வந்து இப்பொழுது 85 சென்டில் பயிரிட்டுள்ளேன். ஆறு மாதத்தில் கொடி வந்து பூ பூக்க ஆரம்பித்து விடும். ஒரு ஏக்கருக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை செலவாகும். >
ஒரு முறை முதலீடு தான். அதிக பட்சம் ஏக்கருக்கு எட்டு டன், குறைந்த பட்சம் 5 டன் விளைச்சல் எடுக்கலாம். ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்..? " என்கிறார் தோட்ட உரிமையாளரும், கட்டிடப் பொறியாளருமான விடுதலை அரசு. வேலை இங்கு இல்லை.! வெளிநாடு தான் இலக்கு.! என நினைப்போருக்கு இவர் முன்னுதாரனம்.!