தமிழக ஆளுநரின் கான்வாய் வாகனம் மோதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எந்தவித நிவாரணமும் வழங்காமல் அவர்களை அலைக்கழித்து வருகிறது அரசு. இரண்டு ஆண்டுகள் ஆகியும் நிவாரணமு கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் விபத்தில் உறவுகளை இழந்து நிர்க்கதியாக நிற்கும் குடும்பத்தினர்.

2017-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி அன்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடைகளுக்கு தண்ணீர் கேன் போடுவதற்காக சுரேஷ், கார்த்திகேயன் ஆகிய இருவரும் டூவீலரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடலூரில் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு, சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தார். புதிய கல்பாக்கம் மீனவர் பகுதியில் வேகமாக வந்த ஆளுநரின் கான்வாய் சுரேஷின் டூவீலர் மீது மோதி, அதன்பின் அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் மோதி நின்றது. இதில், டூவீலரை ஓட்டிவந்த சுரேஷ், பின்புறம் அமர்ந்து வந்த கார்த்திகேயன், பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த புதிய கல்பாக்கம் மீனவ கிராமத்தை சேர்ந்த கவுசல்யா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது தொடர்பாக கார்த்திகேயனின் தந்தை நரேஷ்குமார் நம்மிடம் பேசுகையில், ’என்னுடைய ஒரே மகனை இழந்து நடைப் பிணமாக நான் சுற்றி வருகிறேன். எங்களைப் போன்றவர்களுக்கு சொத்தே எங்கள் பிள்ளைகள்தான். அதையே இழந்து தவிக்கும் எங்களுக்கு இந்த அரசு நிவாரணத்தை தட்டிக் கழிப்பது ஏன்?''’என்று கண்ணீருடன் கேட்கிறார். சமூக ஆர்வலர் அருங்குணம் விநாயகம் இது குறித்து நம்மிடம்... "இந்த சம்பவத்தில் வாகன சட்டத்தின்படி பார்த்தால், ஆளுநர்தான் குற்றவாளியாக உறுதிசெய்யப்படும் நிலை இருக்கிறது. ஆனால், வாகனம் ஓட்டி வந்த டிரைவரை மட்டுமே சஸ்பெண்ட் செய்திருப்பது சூழ்ச்சியாகவே கருதப்படுகிறது''’என்கிறார்.
மேலும், "விபத்து செய்த வாகனம் தனியார் வாகனம் அல்ல; ஆளுநர் கான்வாய் வாகனம். உடனடியாக அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஆர்.டி.ஓ., அல்லது மாவட்ட ஆட்சியர் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கான நிவாரணத்தை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை இதுவரையிலும் செய்யாமல் காலம் கடத்துவது படு மோசமான செயல். நடுத்தெருவில் நிற்கும் இந்த குடும்பத்தினருக்கு உடனடியாக தமிழக அரசு சார்பில் நிவாரண உதவியோ, சுயதொழில் புரிய கடன் உதவியோ வழங்க வேண்டும்'' என்று வலியுறுத்துகிறார்.
இந்த விவகாரத்தை நாம் மாவட்ட ஆட்சியர் பொன்னையன் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, "இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்''’என்றார். கவர்னர் மாளிகைக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.