விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, பயணம் தொடங்கும் விமான பணிப்பெண்கள் (ஏர்ஹோஸ்டஸ்) பாதுகாப்பு நெறிமுறைகளை செய்து காட்டி விளக்குவார்கள். பயணிகளை சிறப்பாக வரவேற்பார்கள், பயணிகளுக்கு மிகக் கனிவாக சேவை செய்வார்கள். இந்தக் கனிவும் சேவையும் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். இதுபோல அரசு பேருந்தில் நடந்தால் எப்படி இருக்கும்? சில்லறை இல்லயென்றாலே கத்துறாங்க, கடந்த வாரம் 'ஸ்டாப்பில் ஏன் நிறுத்தலை?' என்று கேட்ட பெண்ணை கண்டக்டர் அடித்த வீடியோ வைரல் ஆச்சு, இந்த நிலைமையில் கனிவாவது, பணிவாவது? இதுதான் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தோன்றும் எண்ணம். இதை உடைக்கும் வகையில் மதுரை டூ கோவை அரசு பேருந்து ஒன்றின் நடத்துனர் தனது பயணிகளுக்கு பாதுகாப்பு நெறிமுறைகளை சொல்லும் ஏர்ஹோஸ்டஸ் போல பேருந்துப் பயணத்துக்குத் தேவையான நெறிமுறைகளை சொல்லி அழைத்துச் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், "பேப்பர் போன்ற குப்பைகளை வெளியே போட்டால் பேருந்து கொஞ்சம் சுத்தமாக இருக்கும். அதேபோல வாமிட் வருவதுபோன்று தொந்தரவு இருந்தால் என்னிடம் தெரிவியுங்கள், கேரி பேக் தருகிறேன். அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், புளிப்பு மிட்டாய் தருகிறேன் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்கிறார். பின்னர், பயண கட்டணங்களை தெரிந்துகொள்ளலாம் என்று வழியில் உள்ள முக்கியமான ஊர்களின் பெயர்களைச் சொல்லி அதற்கான விலையையும் தெரிவித்தார். முடிந்த அளவிற்கு சில்லறை கொடுத்து உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு உதவுங்கள் என்று கேட்டுக்கொண்டார். இறுதியில், பேருந்தில் பயணம் செய்பவர்களின் நோக்கம் நிறைவேற வேண்டுமென தனது வாழ்த்துகளை நடத்துனர் தெரிவித்துக் கொண்டார்.
ஒவ்வொரு அரசு பேருந்து பயணமும் இப்படித் தொடங்கினால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமென இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் பகிர்ந்து சிலாகிக்கிறார்கள்.