பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் மகனுடைய போலி பத்திரப்பதிவு வழக்கு குறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் விவரிக்கிறார்
நயினார் நாகேந்திரனின் மகனுடைய போலி பத்திரப்பதிவு குறித்த புகாரை முதலில் அறப்போர் இயக்கம்தான் வழங்கியது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி, இளையராஜா என்பவரிடமிருந்து விருகம்பாக்கத்தில் 1.3 ஏக்கர் நிலத்தை 46 கோடிக்கு வாங்கினார். அதன் சந்தை மதிப்பு 100 கோடி வரை இருக்கும். சென்னையில் இருக்கும் இந்த நிலத்தை திருநெல்வேலியில் உள்ள சப்-ரெஜிஸ்டரார் அலுவலகத்தில் பதிவு செய்தனர். சட்டப்படி இது தவறு. யாருடைய நிலம் இது என்பதை அவர் சரிபார்த்திருக்க வேண்டும்.
இளையராஜா என்கிற நபர் ஏற்கனவே மோசடிகளுக்குப் பெயர் போனவராக இருக்கிறார். பட்டா சரியாக இருந்தால்தான் பத்திரப்பதிவு செய்யவே முடியும். இளையராஜாவின் பெயரில் அந்தப் பட்டா இல்லை. அந்த ஒரு நிலத்துக்கே 15 பதிவுகளும், பணப்பரிமாற்றங்களும் நடந்திருக்கிறது. அந்த சப்-ரெஜிஸ்டரார் இது எதைப் பற்றியும் விசாரிக்காமல் இவர்களோடு சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டார். திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. இவை அனைத்தையும் குறிப்பிட்டு நாங்கள் புகார் கொடுத்திருக்கிறோம்.
இப்போது அந்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தவறே நடக்காமல் நடவடிக்கை எடுத்தால் அரசியல் பழிவாங்கல் என்று சொல்லலாம். இங்கு நடந்த அனைத்து தவறுகளுக்கும் ஆதாரம் இருக்கிறது. மற்றவர்கள்தான் தவறு செய்தனர், அவை தனக்குத் தெரியாது என்று நயினார் பாலாஜி சொல்கிறார். இவரும் சேர்ந்துதான் அந்த தவறைச் செய்திருக்கிறார். இளையராஜா என்பவர் இதில் மட்டுமல்லாமல், இதுபோல் பல குற்றங்களைச் செய்தவர். விசாரணையில்தான் இது குறித்த அனைத்து உண்மைகளும் வெளியே வரும்.
நயினார் பாலாஜி தானும் ஏமாற்றப்பட்டதாக சொல்கிறார். ஆனால் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. திருநெல்வேலியில் பத்திரப்பதிவு செய்ததே இவர்களுக்கு அங்கு செல்வாக்கு இருப்பதால்தான். பட்டா இல்லாத நிலத்தை ஒருவர் விற்க வந்தால் நீங்கள் எதையும் விசாரிக்காமல் வாங்கி விடுவீர்களா? இது மிகவும் ஆபத்தான ஒரு விஷயம். இவர்கள் நீதிமன்றத்துக்கு சென்று தங்களுக்கான தீர்வைப் பெறுவார்கள். ஆனால் சாதாரண ஏழை மக்களின் நிலை என்ன? அவர்கள் ஏமாற்றப்பட்டால் அவர்களால் கோர்ட்டுக்கு சென்று வாதாட முடியுமா?
இந்தத் துறையே ஒரு மாஃபியா துறை போல் இயங்கி வருகிறது. இப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகளால் அதிகம் பாதிக்கப்படுவது சாமானிய மனிதர்கள்தான். இளையராஜா என்பவரை இவர்கள் கைது செய்திருந்தால் பல்வேறு உண்மைகள் வெளியே வந்திருக்கும். இந்த வழக்கு இன்னும் விசாரணை அளவில்தான் இருக்கிறது. அதிகாரத்துக்கு நெருக்கமாக இருப்பதால் குற்றவாளிகள் காப்பாற்றப்படும் சூழலும் இருக்கிறது.