ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டிய கலைமாமணி விருதுகளை 2011 ஆம் ஆண்டு முதல் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் எட்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து, அவசர அவசரமாக ஆளுங்கட்சிக்கும், அதிகாரிகளுக்கும் வேண்டிய ஆட்களாக பார்த்து 200க்கு மேற்பட்டோரை தேர்ந்தெடுத்து கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விருதுப் பட்டியலில் தகுதியில்லாத, அனுபவமில்லாத, திறமையற்ற கலைஞர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விருதுகளை அரசு கூவிக் கூவி விற்பனை செய்திருக்கிறது என்று அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தோற்றுவிக்கபட்டது. அன்று முதல் கலைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள்தான் இந்த மன்றத்தின் உறுப்பினர்களாகவும், செயலாளராகவும் அரசு நியமித்தது. ஆனால், தற்போதுதான் முதல்முறையாக கலைத்துறையை சாராத கலைகளில் தேர்ச்சியும் அனுபவமும் இல்லாத ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான தங்கவேலுவை அரசு நியமித்திருக்கிறது. அதனால்தான் விருது வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மூத்த கலைஞர்கள் கூறுகிறார்கள். இதுவரை கலைமாமணி விருது பட்டயத்தில் கலைத்துறை வித்தகர்கள்தான் உறுப்பினர், செயலாளராக இருந்துதான் விருது வழங்கியுள்ளனர் இப்போது எல்லாமே தலைகீழாக இருக்கிறது.
“நான் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கத்தில் 30 வருடமாக உறுப்பினராக இருக்கிறேன் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அறிவிக்கும் இந்த பட்டியலில் மதுரையை சேர்ந்த நாடக நடிகர்கள் ஒருவருக்குக்கூட விருது கிடைக்கவில்லை. மதுரையில் 400 பேருக்கு மேல் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பாதிபேர் 60 வயதை கடந்தவர்கள். இவர்களுக்கு பென்சன் கிடைக்கவேண்டும் என்றால் இங்குள்ளவர்களில் கலைமாமனி விருபெற்ற இருவர் கையெழுத்து போடவேண்டும். இதுவரை யாருக்கும் கிடைக்காததால் ஓய்வு ஊதியம் கூட வாங்க தகுதி இல்லாமல் இருக்கிறோம். 1955 சங்கீத நாடக சங்கம் என்ற பெயரில் தொடங்கபட்டு பின்பு 1973ல் கலைஞரால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்று மாற்றி கலைத்துரையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கபடுகின்றன. இதுதவிர நலிவுற்ற கலைஞர்களுக்கு மாத தொகையும் வழங்கபடுகின்றன. 2014 ஆகஸ்ட் 3ல் ஜெயலலிதா இதன் தலைவராக இசை அமைப்பாலர் தேவா வையும் இதன் செயலாளராக சித்திரா விக்னேஸ்வரனையும் நியமித்தார். ஆனால், எடபாடி அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரியான தங்கவேலுவை நியமித்தது. அதனால்தான், கலைஞர்கள் என்று யார்யாருக்கோ விருதுகளை அள்ளி வழங்கியிருக்கிறார்கள்” என்கிறார் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கத்தின் துணைதலைவர் முத்துராமலிங்கம்.
மதுரை இயல் இசை நாடக மன்ற செயலாளர் சோமசுந்தரமோ, “மறைந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கபடுவதில்லை. ஆனால் 2015ல் மரணமடைந்த திருச்சியை சேர்ந்த முனைவர் சேகர் மற்றும் கோவையை சேர்ந்த சம்மந்த ஓதுவார் ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கபட்டுள்ளது. அடுத்து மதுரையை சேர்ந்த தப்பாட்ட கலைஞர் பி.ராஜாவுக்கு கொம்பு தப்பட்டை கலைஞர் என்று விருது அறிவிக்கபட்டுள்ளது. ஆனால், அவர் அந்த வாத்திய கலைஞரே அல்ல. இதேபோல் மதுரையைச் சேர்ந்த கோவிந்தராஜ் கொல்லிகட்டை கலைஞர் என்று விருது அறிவிக்கபட்டுள்ளது. ஆனால், இவர் இசைக்கல்லூரியில் இப்பதான் படித்தே முடித்திருக்கிறார். தமிழகத்தில் தெருக்கூத்து கலையில் பல ஆயிரம் கலைஞர்கள் இருந்தும் அவர்களுக்கு இந்த எட்டு ஆண்டுகளில் ஒரு விருது கூட அறிவிக்கபடவில்லை. தமிழக கலைகள் மண்சார்ந்து இருக்கும் உதாரணமா சொல்லனும் என்றால் வில்லுப்பாட்டு கோவில்பட்டி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி போன்ற மாவட்டங்களில் மட்டும்தான் இருக்கும். கரகாட்டம் ஒயிலாட்டம் மதுரை தேனி இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலும், தெருகூத்து விழுப்புரம் கடலூர் திருவள்ளுவர், சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் வள்ளிதிருமணம் புதுகோட்டை இராமநாதபுரம் மதுரை திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களிலும் நடைபெறும்.
குன்னகுடி வைத்தியநாதனை வயலின் வித்துவான் என்றுதான் எல்லோருக்கும் தெரியும் ஆனால் “அவர் வாசிப்பது வயலின் அல்ல" என்று இயல் இசை சங்கத்தில் இருந்து கடுமையான எதிர்ப்பு வரவே அவருக்கு திரைபட இசை கலைஞர் என்றுதான் விருது வழஙக்பட்டது. ஏன் இதை சொல்கிறேன் என்றால் தமிழக அரசால் நியமிக்கபடும் மொத்தம் 22 பேர்களில் 11 பேர் அரசால் நியமிக்கபடுபவர்கள். மீதம் உள்ள 11 பேர் தமிழ்நாடு இயல் இசை சங்கத்தின் 3000 உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கபடுபவர்கள். இவர்களின் ஒட்டுமொத்த தேர்வின்படி தமிழக அரசால் இயல் இசை நாடக சங்கத்தின் செயலாளர் இதற்கு ஒப்புதல் அளித்து, அவர்களில் அந்த வருடத்திற்கான சிறந்த கலைஞராக தேர்வு செய்து விருதுகளை அறிவிப்பார்கள். இதுதான் நடைமுறை. ஆனால் தற்போது உள்ள செயலாலரோ இத்துறைக்கு சம்மந்தமே இல்லாததால் எந்தவித முறையையும் பின்பற்றபடாமல் அமைச்சர் யாரை கைகாட்டுகிறாரோ அவருக்கு விருதுகள் வழங்க உத்தரவிட்டிருக்கிறார். இது கலைஞர்களுக்கு மிக வருத்தமாக இருக்கிறது” என்றார்
இதுகுறித்து தமிழ்நாடு இயல் இசை நாடக செயலாளரும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான தங்கவேலிடம் கேட்டபோது, “தவறுகள் எதுவும் நடக்கவில்லை இயல் இசை நாடகம் என்பது இயல் என்றால் கவிதை, மேடைப்பேச்சு, இசை என்றால், வயலின், மிருதங்கம், வ புல்லாங்குழல், நாடகம் என்றால் மேடைநாடக நடிப்பு, திரைநடிப்பு மற்றும் கிராமிய கலைகள் என்று 120 கலைகளுக்கு ஆண்டுதோறும் விருதுகள் கொடுக்கபடுகின்றன.
மதுரை போன்ற தென்மாவட்டங்களை பொறுத்தவரை கலைஞர்களுகான சங்கங்கள் ஏராளமாக இருக்கின்றன. எப்போது விருதுகள் அறிவிக்கபட்டாலும் இந்த பிரச்சனை வரத்தான் செய்கிறது. ஏதாவது புகார் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அறிவித்திருப்பதால் 1500 விண்ணப்பங்களில் இருந்து தேர்வு செய்து கொடுத்திருக்கிறோம். இதில் பலபேருக்கு ஏமாற்றம் இருக்கும்” என்றார்.
இதேபோன்று பூம்புகார் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த சிறந்த கைவினை கலைஞர்கள், சிற்பிகள், மற்றும் ஓவியர்களுக்கான விருதுகளை தமிழ்நாடு பூம்புகார் நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை அறிவிக்கும். இதிலும் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக சொல்கிறார் பஞ்சலோக சிலை வடிவமைப்பாளரான மதுரையை சேர்ந்த மோகன். “முறைபடி ஒருவருக்குகூட இந்த முறை விருது அறிவிக்கபடவில்லை. நான் கடந்த 30 வருடங்களாக 1979ல் இருந்து பித்தளை கலைப் பொருட்கள் செய்து வருகிறேன். தொடர்ச்சியாக மாநில விருதுக்கு எட்டுமுறை விண்ணப்பித்திருக்கிறேன். விருது கிடைக்கவில்லை. சரி நம்மை காட்டிலும் திறமையானவர்கள் இருப்பார்கள் என்று நினைத்து விட்டேன்.
முத்துராமலிங்கம், மோகன், சோமசுந்தரம்
கடந்த 2018ல் பூம்புகார் கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகம் வாயிலாக கேரளா பன்னாட்டு கைவினை திருவிழாவிற்க்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டதில் நான்கு பேரை மட்டும் தேர்வு செய்தனர். அதில நானும் ஒருவன். என்னை கேரள அரசு பாராட்டியது. ஆனால் இந்த வருடம் 2018-2019க்கான மாநில விருதுக்கு 174 கைவினை கலைஞர்கள் தங்களது படைப்புகளை வைத்திருந்தனர். ஆனால் தேர்வு குழுவினர் தேர்வு செய்யும்போது வெறும் 9 பேரின் படைப்புகளை மட்டுமே வைத்து தேர்வு செய்தனர். இதையடுத்து, மிக வருத்ததுடன் இருந்த நிலையில், நான் வடிவமைத்த சிலைகளை காசு கொடுத்து வாங்கி அதையே மாநில விருதுக்கு அனுப்பி, கிருஷ்ணன் என்பவர் விருதையும் பெற்றிருக்கிறார் என்ற செய்தி என்னை அதிர்ச்சி அடையச் செய்தது. இது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. சிலை செய்வதை வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும் என்ற நடைமுறையை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது” என்கிறார் மோகன்.
இதுகுறித்து விசாரிக்க பூம்புகார் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக இயக்குனர் அலுவலகத்தை பலமுறை தொடர்பு கொண்டோம். தொலைபேசியை எடுத்தவர்கள் நக்கீரனில் இருந்து பேசுகிறோம் என்றதும், தொலைபேசியை வைத்துவிட்டனர். பின்னர், பலமுறை தொடர்புகொண்டும் யாரும் எடுக்கவில்லை.