உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான 'கூகுள்'. தனது 'கூகுள் டூடுல்' சேவையின் 25வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறது.
முனைவர் பட்ட மாணவர்களான செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் இருவரும் 1990-களின் பிற்பகுதியில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயிலும் போது நண்பர்களானவர்கள். இருவருக்குள்ளும் உலகளாவிய வலைதள சேவையை மேம்படுத்தும் சிந்தனை இருந்து கொண்டே இருந்தது.
கல்லூரியின் ஹாஸ்டலில் இருந்தே இரவு பகலாக உழைத்து சிறந்த முன்மாதிரி தேடுபொறியினை வடிவமைத்தனர். நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் எடுத்துக் கொண்ட செயல்களில் முன்னேற்றம் அதிகரித்தது. இதனால், ஆராய்ச்சியை தொடர்ந்து மேற்கொள்ள வாடகைக்கு ஒரு அலுவலகத்தை தேடி வந்தனர். அப்போது, இருவரின் நண்பர்களில் ஒருவரான சூசனின் கார் ஷெட்டில் இடம் கிடைத்ததால் அங்கேயே அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 27, 1998-ல் துவங்கியுள்ளனர். .அதுதான், பின்னாளில் கூகுளின் முதல் அலுவலகம் என பெயர் பெற்றது.
கூகுளின் வளர்ச்சி எந்த மாதிரி பரிணமித்துள்ளது என்பதனை 1998 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் இன்று வரை அதன் லோகோ உட்பட, டூடுலிலும் நாம் உணர முடியும். கூகுள் கண்டுபிடிப்பின் பிரதான நோக்கம் உலகத்தின் அனைத்து தகவல்களையும் ஒழுங்காக ஒருங்கிணைத்து. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும்படி உறுதி செய்வதே ஆகும். இப்படி ஆரம்பமான கூகுளின் பயணம் தான் இன்று, உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் இணையத்தில் தேடவும், சக மக்களுடன் இணைப்பில் இருக்கவும், வேலை செய்யவும், விளையாடவும் மற்றும் எண்ணற்ற பல விஷயங்களுக்கும் கூகுளின் சேவையை நம்பியுள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டின் மதுரையில் இருந்து புறப்பட்ட சுந்தர் பிச்சை போன்றவர்களால் கூகுள் நிறுவனம் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது தான். இவரைத் தொடர்ந்து பல உலக கார்ப்பரேட் நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமை வகிக்க தொடங்கினர். கூகுள் 1998 துவங்கிய பொழுது, கூகுள் டூடுல் (கேலி சித்திரமும்) தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் கூகுள் விடுமுறை தினங்கள், சில முக்கிய நிகழ்வுகள், சாதனைகள் மற்றும் குறிப்பிடத்தக்க வரலாற்று நபர்களை நினைவுகூரும் வகையில் கூகுளின் வலைத்தள முகப்புப் பக்கங்களில் உள்ள லோகோ வடிவமைப்பை மாற்றுவார்கள்.
உதாரணத்திற்கு, இன்றைக்கு அமெரிக்க சுதந்திர தினம் என்றால் அதற்கேற்றவாறு அமெரிக்க கொடிகளுடன் கூகுளின் லோகோ வடிவமைக்கப்படும். இந்த நிலையில் தான் கூகுள் டூடுலின் 25வது வருடத்தை இன்று கொண்டாடுகிறது. இதனையொட்டி தனது வலைத்தள முகப்பில், இந்த 25வருடங்களில் வெளிவந்த கூகிளின் சிறந்த டூடுல்களை வரிசைப்படுத்தி காட்டிவருகின்றனர்.
இந்த டூடுல் தொடங்கியதில் இருந்து பல மாற்றங்களை, வினோதமான சில முயற்சிகளையும் அவ்வப்போது கூகுள் நிறுவனம் செய்து வந்தது. ஆனால், இதன் முதல் டூடுல் 1998 ஆம் ஆண்டில் " அமெரிக்கா பிளாக் ராக் நகரில் பர்னிங் மேன் எனப்படும் கலை விழா நடைபெறும். அதன் பிரதிபலிப்பாக கூகுள் லோகோவின் மீது ஒரு குச்சி மனிதர் இருப்பது போன்று லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் வடிவமைத்தனர். இந்த டூடுல்கள் ரஷ்யா உட்பட சில பகுதிகளைத் தவிர உலகம் முழுவதும் தெரியும். மேலும், தரவுகளின் படி இதுவரை 5000 டூடுல்களை கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ளதாகவும் தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்த டூடுல்களை யார் வடிவமைப்பது? எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள்? என்ற கேள்வி எழுவது இயல்பு தான். இது குறித்து கூகுள் கூறுகையில், " கூகுளுக்கு என்று குழு ஒன்று கூடி திட்டமிட்டு எந்தெந்த நிகழ்வுகளை டூடுல் மூலம் கொண்டாடுவது என்பதை முடிவு செய்வார்கள். மேலும், கூகுள் பயனர்கள் மூலமாகவும் பல சமயங்களில் டூடுல்களுக்கான யோசனைகள் வரும். அதனையும் குழு தேர்வு செய்துள்ளது.
டூடுலின் தேர்வு முறையானது, ஆளுமைகள் மற்றும் புதுமைக்கான விருப்பத்தை பிரதிபலிக்கும் வண்ணம் உள்ள சுவாரஸ்யமான நிகழ்வுகளை, ஆண்டுவிழாக்களை கொண்டாடுவதே ஆகும். நீங்கள் அவ்வப்போது ரசித்துப் பார்க்கும் ஒவ்வொரு டூடுலுக்குப் பின்னாலும் இல்லஸ்ட்ரேட்டர்கள் (டூடுலர்கள்) மற்றும் பொறியாளர்கள் குழு இயங்கி வருகிறது." என்று கூறியுள்ளனர். இன்று கூகுள் டூடுல் தனது 25வது பிறந்த நாளைக் கொண்டாடிவருகிறது. இது குறித்து இந்திய கூகுள் டூடுல் ட்விட்டரில், இந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளை நினைவு கூர்ந்து நெகிழ்வுடன் பதிவிட்டுள்ளது.
- மருதுபாண்டி