Skip to main content

அண்ணா அறிவாலயம் செல்கிறாரா கோகுல இந்திரா?

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

 

அதிமுக தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டு அமமுகவுக்கு சென்றவர்கள், அந்த தலைமையும் பிடிக்காமல் திமுகவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். செந்தில் பாலாஜி திமுக எம்எல்ஏவாகிவிட்டார். தங்க தமிழ்ச்செல்வன் கொள்கைப் பரப்புச் செயலாளராகிவிட்டார் என்றதும், அமமுகவில் இருந்து மேலும் பலர் திமுகவுக்கு செல்ல உள்ளனராம். புதுக்கோட்டை அமமுகவைச் சேர்ந்த பரணி கார்த்திகேயன் நேற்று அண்ணா அறிவாலயம் சென்று திமுகவில் இணைந்தார். இதேபோல் அதிமுகவில் இருந்தும் சிலர் திமுகவுக்கு தாவப்போகிறார்களாம்.

 

Gokula Indira



2011-2016 காலக்கட்டத்தில் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்தவர் கோகுல இந்திரா. 2016 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார். அதன்பிறகு வாரியத் தலைவர் பதவி உள்ளிட்ட பதவிகளை எதிர்பார்த்திருந்தார். அந்த நேரத்தில் ஜெயலலிதா மறைந்ததால் அந்த கனவும் நிறைவேறவில்லை. அதன்பிறகு சசிகலா ஆதரவாக இருந்தார். இதையடுத்து ஓ.பி.எஸ். அணி, எடப்பாடி பழனிசாமி அணி என உடைந்தபோது, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக இருந்தார். 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலோ அல்லது மக்களவை தேர்தலிலோ அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பாத்திருந்தார். ஆனால் அதிமுக தலைமை அவரை கண்டுகொள்ளவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக அதிமுக தலைமையை அணுகினார். அந்த வாய்ப்பும் தனக்கு கிடைக்காததால் வருத்தத்தில் உள்ளார் முன்னாள் அமைச்சரான கோகுல இந்திரா.


 

இதனால் அதிமுக கட்சி வேலைகளில் பெரிதும் அக்கறை காட்டவில்லை. அதிமுக தலைமை அலுவலகம்கூட செல்வதை தவிர்த்து வந்தார். வெளிநாடு சென்ற எடப்பாடி பழனிசாமியை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது கோகுல இந்திரா கண்ணில் படவில்லை என்கின்றனர் அதிமுகவினர்.


 

கோகுல இந்திரா அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதை அறிந்த பாஜக, அவரை பாஜகவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாம். ஆனால் கோகுல இந்திரா திமுகவுக்கு சென்றால் அங்கு தனக்கு எதிர்காலம் இருக்குமா என்று ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறாராம். அதிமுக, அமமுகவில் இருந்து வருபவர்களை முதலில் திமுகவில் இணைத்துக்கொள்வோம். அவர்களுக்கு உரிய பதவி, வாய்ப்பு கொடுப்பதை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று திமுகவும் அவரை கட்சியில் இணைப்பதற்கான பணிகளை செய்து வருகிறதாம்.