Skip to main content

"சாதி வீரத்தை சொல்லிக்கொண்டு அருவாளை தூக்கிக்கொண்டு வருகிறாயே அப்படியே டெல்லிக்கு போ பார்க்கலாம்...” - திருமுருகன் காந்தி

Published on 05/12/2018 | Edited on 05/12/2018

சமீபத்தில் காவிரி ஆற்றில் மாண்டியா எனும் பகுதியில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சுவாத்தி மற்றும் நந்தீஸ்க்கு சென்னை அம்பேத்கர் திடலில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன் காந்தி, இடைநிலை சாதியினரின் பிற்போக்கு சாதிய கொள்கைள் பற்றியும், பாஜகவின் இந்துத்துவ அரசியலைப் பற்றியும் பேசினார். அவர் பேசியதில் இருந்து.

 

 

y

 

 

ஆணவப் படுகொலை, சாதி வெறி போன்றவை எல்லாம் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்டுவருகிறது. இன்று இருக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் திட்டமிடப்பட்டு,  சாதிய வெறியை வளர்க்கின்ற போக்குக்குள் நகர்த்தப்படுகிறார்கள். அவர்களுக்குள் இயல்பாக இருக்கும் சாதிய மனோபாவத்தை, இங்கிருக்கும் இந்துத்துவ சக்திகளால் கூர்தீட்டப்படுகிறது. இது ஏன் இப்போது  வளர்த்தெடுக்கப்படுகிறது என்று பார்த்தால் இங்கிருக்கும் முற்போக்கான அரசியலை உடைக்கவேண்டியத் தேவை இந்தியாவிற்கும், இந்துத்துவ அமைப்புக்கும் இருக்கிறது. மற்றும் தமிழ்நாட்டில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு மிகப் பெரிய கல்வியோ அல்லது வேலை வாய்ப்போ கிடையாது. ஒரு சமயத்தில் இடஒதுக்கீட்டிற்காக பேசிய அந்த சமூகம் எல்லாமும் இன்று சாதி வெறியை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. அந்த சாதியக் கூட்டங்களை தங்கள் வாக்கு வங்கிக்காக மட்டுமே பயன்படுத்தும் அமைப்புகளாக அவை மாற்றிவிட்டன. இந்த அமைப்புகள் தங்களை நிலை நிறுத்திக்கொள்வதற்கும், தங்களின் சுரண்டலை தீவிரப் படுத்துவதற்கும் இந்த இளைஞர்களிடம் இருக்கும் சாதிய உணர்வை கூர்மைப்படுத்தி, அவர்களின் பிரதான எதிரியை நோக்கி நகர்த்தாமல் எளிய மக்களை நோக்கி நகர்த்தும் வேலையைத் திட்டமிட்டு செய்கிறார்கள். இது திட்டமிட்டு இந்திய அரசால் நகர்த்தப்படும் ஒரு வேலைத்திட்டம். எல்லோரிடமும் ஒரு பிற்போக்கு மனப்பான்மை இருக்கும் அதனை வளர்த்தெடுக்கும், கூர்மைப்படுத்தும் வேலையை இந்த அரசும், இந்த நிர்வாகமும், இந்துத்துவ அமைப்பும் திட்டமிட்டு செய்கின்றன. எட்டு வழிச் சாலை, மீத்தேன், கெயில், அணு உலை பிரச்சனை என எதுவாக இருந்தாலும் அதனை எதிர்க்க ஆதிக்க சாதி அமைப்புகள் வருவதும் கிடையாது, பங்குபெறுவதும் கிடையாது. இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் எவனும் மீசையை முறுக்கிக்கொண்டு வரவில்லை. கெயில் குழாய்  பிரச்சனையில் அந்த விவசாயி மண்டையை, காவல்துறை உடைக்கும்போது எந்த வீரப்பரம்பரையும் மீசையை முறுக்கிக்கொண்டோ அல்லது வேட்டியை மடித்துக்கொண்டோ வரவில்லை. அவர்கள் யாரும் எதிர்த்து போராடவோ, சிறைக்கு செல்லவோ, அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நிற்கவோ தயாராக இல்லை. இன்று அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள், சுற்றுசூழலை நாசம் செய்யக்கூடியக் கொள்கைகள், வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடிய கொள்கைகள் பெரும் அளவில் பாதிக்கக் கூடிய இடைசாதியினரின் நிலத்தை பாதிக்கக்கூடிய கொள்கைகள், என எதையும் எதிர்த்துகூட நிற்கக்கூடிய அரசியல் இல்லாத நிலையில்தான் இடைசாதியினர்  இருக்கிறார்கள். காரணம் இந்த சாதிய சங்கங்கள் வெறும் வாக்கு வங்கிகளாக மாறியிருக்கிறது, அவர்களின் சுயநலத்திற்காக இவர்களை முற்றிலுமாக சிதைத்திருக்கிறார்கள்.

 


முற்போக்கு கருத்துகளை கொண்டுசெல்ல வேண்டிய அமைப்புகள் அதன் பணியை செய்யாமல்போனதன் விளைவையும் சேர்த்து பார்க்கிறோம். இது எவ்வளவு மோசமான சூழலை உருவாக்கி இருக்கிறது என்றால், மேற்கு மண்டலத்தில் அம்பேத்கர் சிலையையும், பெரியார் சிலையையும் பார்க்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொழில் நுட்பத்தில், உற்பத்தியில் வளர்ச்சி கண்ட பகுதியாக மேற்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு சுத்திக்கொண்டிருக்கிறார்கள். மேற்கு மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சி எப்படி சாத்தியமானது என்றால், அவர்களுக்கு அங்கே மின்சாரமும், கல்வியும், அதற்குரிய தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர்களும் கிடைத்த கரானதால் மேற்கு மண்டலம் வளர்ச்சி அடைந்தது. மிக முக்கியமாக அங்கு மின்சாரம் என்பது வந்தபிறகுதான் பெரிய, பெரிய தொழிற்சாலைகள் கிடைத்தது. அந்த மின்சாரம் எப்படி கிடைத்தது என்றால், அனைவரும் பயன்படுத்தக்கூடிய மானிய விலையில் அவர்களுக்கு கிடைத்தது.  அதனால்தான் அங்கு தொழில்புரட்சி நடந்து வளர்ச்சி அடைந்தது. இந்த தொழில் புரட்சிக்கு தேவையான இளைஞர்களை உருவாக்குவதும் அங்கு சாத்தியமானது. இது எப்படிவந்தது என்றால் இடஒதுக்கீடு சட்ட வழி மூலமாகவும், மின்சாரம் சட்டங்களின் மூலமாகவும்தான் வந்தது. மின்சார சட்டம் என்பது என்ன,  இந்தியா விடுதலை அடைந்தப்போது குறிப்பிட்ட சில பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொருளாக மின்சாரம் இருந்தது. இவர்களிடம் பெரிய விலைக்கு மின்சாரத்தை விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து ஏழை, எளிய மக்களுக்கும் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கும் மானிய விலையில் மின்சாரத்தைக் கொடுத்து அவர்களைதொழில் வளர்ச்சிக்கு கொண்டு செல்லவேண்டும் என்று மின்சார சட்டம் வடிவமைக்கப்பட்டது. அதன் மூலமாகத்தான் கிடைத்த மின்சாரத்தை வைத்துக்கொண்டு தொழில் வளர்ச்சி என்பது மேற்கு மண்டலத்தில் சாத்தியமானது. இந்த சட்டத்தைக் கொண்டுவந்தது அண்ணல் அம்பேத்கர். இன்று மேற்கு மண்டலம் வளர்ச்சி அடைவதற்கு காரணம் அண்ணல் அம்பேத்கர் கொண்டுவந்த சட்டம்தான் ஒழியே வேறு எந்த இடைநிலை சாதியினரும் மீசையை முறுக்கிக்கொண்டு செய்தவேலை அல்ல. ஆனால் இந்த மின்சாரத் திட்டத்தை இரத்து செய்யக்கூடிய ஒரு மசோதாவை வருகின்ற குளிர்கால கூட்டத்தொடரில் மோடி அரசுகொண்டு வரவிருக்கிறது. ஆகவே இதைப் பற்றி பேசுவதற்கு அந்த சாதி சங்கங்களோ அல்லது அந்த சாதி அமைப்புகளின் வாக்குகளை வாங்கி பாராளுமன்ற உறுப்பினர்களாக சென்றவர்களோ  தயாராக இல்லை. எவனெல்லாம் அம்பேத்கர் சிலையை வைக்கக்கூடாது என்று சொன்னானோ அவனின் தொழில் வளம் என்பது முழுவதுமாக நசுக்கப்படப்போகிறது. ஏனென்றால் அவனுக்கு அம்பேத்கரையும் தெரியாது, அம்பேத்கர் கொண்டுவந்த சட்டமும் தெரியாது. அவர் பேசிய சமூக நீதியும்தெரியாது. அவர்களுக்கு மீசையை முறுக்குவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. இந்தக் கூட்டத்தை வைத்துக்கொண்டு இந்துத்துவம் கொண்ட இந்திய அரசு தனது பொருளாதார திட்டத்தை முழுவதையும் நடைமுறைப்படுத்துகிறது. தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில்தான் தண்ணீரை தனியார் மையமாக மாற்றியிருக்கிறார்கள், திருப்பூரில் தண்ணீரை விற்கிறார்கள். கோவையில் தண்ணீரை முழுவதுமாக தனியார் மையமாக மாற்றுவதற்கு  ஒரு பிரெஞ்சு நிறுவனத்திடம் கையெழுத்து ஆகிவிட்டது. 

 

 

th

 

 

இந்தத் திட்டங்களைப் பற்றி பேச எந்த சாதி தலைவர்களும் தயாராக இல்லை, மீறி பேசினால் அரசாங்கத்தினால் அடி விழும். இந்தத் திட்டங்களை எதிர்த்து நிற்கவோ, அதன் அடக்குமுறையை கையாளுவதற்கோ, சிறைவாசம் ஏற்பதற்கோ இந்த மீசை முறுக்கிகள் தயாராக இல்லை. ஏனென்றால் அவர்களின் வீரத்தின் எல்லை அவ்வளவுதான்.  இந்த மக்கள் எழுச்சி பெற்றுவிடக்கூடாது, அரசியல் பெற்றுவிடக் கூடாது என திட்டமிட்டு இந்த சாதிவெறி என்பது வளர்க்கப்படுகிறது. சாதி வெறி கொண்டவர்கள் மீது இந்த அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கக்கூட தயங்குகிறது. அதனால்தான் எஸ்.சி மற்றும் எஸ்.டி சட்டத்தை முழுவதுமாக நீர்த்துப்போக மோடி அரசு வழி செய்கிறது. அதை செய்த நீதிபதிகளுக்கு உடனடியாக பசுமை தீர்ப்பாயத்தில் பதவி கொடுத்து அமர வைத்துவிட்டார்கள். மாலை 5.00 மணிக்கு அவர் ஓய்வு பெறுகிறார், உடனடியாக 5.30 மணிக்கு அவருக்கு மற்றொரு பதவி வழங்கப்படுகிறது. இது அனைத்தும் இணைக்கப்பட்ட ஒன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் விளைவாக அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்தப் பாசிசத்தை, சாதிவெறியை கையாளுவதற்கு வேறொரு வழிமுறையும் இருக்கிறது, அது அவர்கள் கொண்டுவரும் பொருளாதாரத் திட்டங்களை அம்பலப்படுத்துவதுதான். எட்டு வழி சாலை, மீத்தேன், கெயில் குழாய் போன்றவற்றில் யாருடைய நிலம் பாதிக்கப்படுகிறது. இதை எதிர்த்து நிற்கும் போராட்டங்களில் எல்லாம் ஆதிக்க சாதி அமைப்புகள் எதுவும் இல்லை எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் நிற்கிறார்கள். அவர்களை ஒடுக்குவதற்காகத்தான் இந்த வேலையை திட்டமிட்டு செய்கிறார்கள். ஏனென்றால் அம்பேதகர் கருத்தியலை முன்னிறுத்தி போராட்டக்களத்தில் முன்னிற்கும் தலித் இளைஞர்களை ஒடுக்குவதற்குத்தான், அவர்களை பொதுவெளியில் முன்னிறுத்தி வில்லன்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.  இவர்கள் அரசியலையோ பொருளாதாரக் கொள்கைகளையோ எதிர்த்து பேசுவதற்கும்  தயாராக இல்லை. ஒடுக்கப்பட்ட இடைநிலை சாதியினரும்கூட அதைப்பற்றி பேச தயாராக இல்லை.  வடமாநில இளைஞர்களால்,  வடமாநிலத்தில் அவமானப்படுத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் இடைநிலை சாதியினரைப் பற்றி பேசுவதற்கும்கூட  இங்கே மீசையை முறுக்கிக்கொண்டு எவனும் வரவில்லை.

 

ஏம்ஸிலும் டெல்லியிலும் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் எல்லாம் யார், எந்த சமூகத்தை சார்ந்தவர்கள், ஏன் அங்கெல்லாம் உன் பெருமை வரமாட்டேங்குது, அருவாளை தூக்கிக்கொண்டு டெல்லிக்குப் போய் பாருங்களேன், உன் சாதி வீரத்தை சொல்லிக்கொண்டு லாரியில் அருவாளை தூக்கிக்கொண்டு வருகிறாயே அப்படியே சென்னையைத் தாண்டி டெல்லிக்கு போ என்ன நடக்கும் என்று பார்ப்போம். உண்மையான ஆற்றல் நீ வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினால் அதைக் காட்ட வேண்டிய இடம் எங்கோ அங்கு காட்ட நீ தயாராக இல்லை. ஏனென்றால், அவன் அடிப்பான் உனக்கு வலிக்கும். எங்கு உன் வீரத்தைக் காட்டினால் எதிர்வினை வராது என்று நினைக்கின்றாயோ அங்கேதான் உன் வீரத்தைக் நீ காட்டுகின்றாய். இதற்குப் பின்புலமாக இருக்கின்ற இந்துத்துவ சாதிகளை தடைசெய்ய வேண்டும். யாரெல்லாம் ஆணவப் படுகொலைக்கு  உடந்தையாக இருக்கின்றார்களோ, யாரெல்லாம் சாதிவெறி பேசுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் விவசாயத்திற்கு லோன் கிடையாது, ரேஷன் கார்டு கிடையாது, ஆதார் கார்டு கிடையாது என்று சட்டம் கொண்டு வந்தால், இந்த அரசு யோக்கியமான அரசாக இருந்தால் இதையெல்லாம்  நிச்சயம் செய்ய வேண்டும். இந்த அரசு உண்மையாகவே சாதியை ஒழிக்கக் கூடிய அரசாக இருந்தால் இதை எல்லாம் செய்ய வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால் இவர்கள் ஆணவப் படுகொலை செய்ய மாட்டார்கள். ஏனென்றால், இவளுக்கு சோறு முக்கியம் அந்த இடத்தில் கை வைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதற்காக இந்த ஆணவப் படுகொலையை, சாதிவெறியை தடுக்கின்ற வகையிலே சட்டம் ஏற்றுகின்ற போராட்டத்தை, அழுத்தத்தை நாம் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்க வேண்டிருக்கின்றது. மேலும் ஒவ்வொரு ஊராக, மாவட்டம் மாவட்டமாக, கிராமம் கிராமமாக, நாம் பிரச்சாரம் செய்ய வேண்டியத் தேவை இருக்கின்றது. அதுதான் இந்த தோழர்களுக்கு உண்மையாக நாம் செலுத்துகின்ற வீர வணக்கமாக இருக்கும்.

 

 

Next Story

“இதை மறைக்கவே மகளிர் இடஒதுக்கீடு மசோதா...”  -  திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

Thirumurugan Gandhi | Women Reservation Bill

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

பா.ஜ.க. வின் ஆட்சியில் அடிப்படையில் பெண்கள் முன்னேற்றம் என்பது இல்லை. அவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு தான் பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறையத் தொடங்கியது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் பார்வையில் பெண்கள் வீட்டில் இருக்கவும், கணவனின் பணியாளாக இருக்கவே நினைப்பார்கள். மேலும், பெண்கள் வேலை செய்வதால் ஆண்களுக்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறினர். எனவே, நாடாளுமன்ற மசோதா பெண்கள் முன்னேற்றத்திற்கு கொண்டுவரவில்லை. மாறாக, இதனை 2029ல் தொகுதி மறுபங்கீடு செய்த பிறகு அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே தான் ஏன்? வருகிற தேர்தலில் இதனை அமல்படுத்தவில்லை என எதிர்கட்சியினர் கேட்கின்றனர். இதிலும் ஒ.பி.சி. இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ஓவைசி அவர்கள் இஸ்லாமியப் பெண்களுக்கு இடமில்லை என எதிராக வாக்களித்துள்ளார்.

 

பா.ஜ.க. மணிப்பூர் விவகாரத்தை முறையாக கையாளவில்லை. இதனால், பெண்களிடம் ஏற்பட்ட களங்கத்தை மறைக்க இந்த இட ஒதுக்கீட்டை கொண்டுவருகிறார்கள். மேலும், பெண்கள் வாக்குகள் அதிகம் இருக்கும் இடத்தில் வெற்றி பெறுவதாலும் இது போன்று செயல்படுகிறார்கள். இதில் கவனத்தில் கொள்வது, " தொகுதி மறுவரை செய்வது" தான். ஏனென்றால், இவர்கள் மக்கள் தொகையை வைத்து தொகுதி எண்ணிக்கையை தீர்மானிக்க உள்ளனர். இதனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்கள் மிகவும் பாதிப்படையும். மாறாக, வடமாநிலங்கள் கூடுதல் எம்.பி. இடங்களை பெறும். ஏற்கனவே, மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் குறைந்த நிதியை பெறுகிறது.

 

ஆனால், காங்கிரஸ் அரசு 1971ல் இருந்த மக்கள் தொகை அடிப்படையில் வழங்கி வந்த நிதியை, பா.ஜ.க. அரசு 2011 கணக்கெடுப்பு படி மாற்றிவிட்டது. தென்னிந்தியாவின் நிதிகள் குறைந்ததற்கு முக்கிய காரணம் இதுதான். உதாரணமாக, தமிழ்நாடு 1 ரூ வரி செலுத்தினால் 0.40 பைசா திருப்பி செலுத்தப்படுகிறது. ஆனால், உ.பி. 1ரூ கொடுத்து, 2ரூ பெறுகிறது. இந்த நிலையில், தொகுதி மறுவரையறை செய்தால் மேலும் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். இதற்கு மறைமுகமாகத் தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என சொல்கின்றனர். இதையொட்டி தான் புதிய நாடாளுமன்றத்தின் இருக்கைகளை 843 ஆக அதிகப்படுத்தினர்.

 

தற்போதுள்ள கேரளா,தமிழ்நாடு,கர்நாடக,ஆந்திரா,தெலங்கானா, கோவா வில் 132 எம்.பி.க்கள் இருகின்றனர். மறுசீரமைப்பில் 167 எம்.பி. தொகுதியாக இது உயரும். இதன் மூலம் தென்னிந்திய மாநிலங்களுக்கு 25% சதவிதம் வரை கூடும். ஆனால், உ.பி.யில் 80ல் இருந்து 143 ஆக உயரும். இதனடிப்படையில், ஹிந்தி பேசும் மாநிலங்களின் எம்.பி. எண்ணிக்கை 439ஆக உயர்ந்து, நமக்கு சட்டம் இயற்றுவதில் சிக்கல் உருவாகும். எனவே, வரும் காலங்களில் இந்தியாவை ஹிந்தி பேசும் மாநிலங்கள் தான் ஆளப்போகிறது.  இதுமாதிரி தொகுதி மறுபங்கீடு செய்தால் பா.ஜ.க. தான் தொடர்ந்து மத்தியில் ஆட்சியமைக்கும். இதே போன்ற செயல் தான் இலங்கையில் நடந்து தமிழர்களின் இடங்கள் பறிபோனது. இந்தநிலையில், சட்டமன்ற தொகுதிகளையும் மாற்றியமைத்தால் மாநிலத்தின் அதிகாரங்கள் சிதைந்து விடும். எனவே, பெண்கள் இட ஒதுக்கீடு அல்ல அவர்களின் நோக்கம். 

 

தென்னிந்தியா முழுவதும் சேர்ந்தே பிரதிநிதித்துவம் இல்லை என்றால் தமிழ்நாட்டின் உரிமை எப்படி இருக்கும். மேலும், இவர்கள் மக்கள் தொகை கணக்கெடுத்து மறுசீரமைப்பு செய்யவுள்ளனர். நாங்கள் கேட்கிறோம் 1971 சென்சஸ் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாமே. ஏறக் குறைய ஆண்கள் பெண்கள் விகிதம் பாதியளவு தான் இருக்கும். இந்திக்காரர்களின் தேசியமாக இந்தியாவை மாற்றுவது தான் இவர்களின் நோக்கம்.  மேலும், தொகுதி பங்கீடு குறித்த ஆய்வும் வெளிவந்துள்ளது. இதைவைத்து தான் இவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கைகளை அதிகப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே, தமிழகத்தின் குரல் கேட்பது அரிது. தற்போது, கூடுதலாக எம்.பி. இடங்கள் குறைகிறது. இந்த மாதிரியான அடிமைநிலையில் நாம் வாழவேண்டும் என்பதற்கே பெண்கள் மசோதாவை கொண்டுவருகின்றனர். இதனை எங்கள் பத்திரிக்கையில் ஒரு வருடமாக சொல்லி வருகிறோம். ஆனால், வேறு பத்திரிகையில் பேச வாய்ப்பு அமையவில்லை. தற்போது நக்கீரனில் தான் தெரிவிக்கிறேன்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 

Next Story

காட்டுமிராண்டிகளா இவர்கள்? தொடைநடுங்கிகள்! - விளாசும் திருமுருகன் காந்தி

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

 Thirumurugan Gandhi Interview

 

சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பகிர்ந்து கொள்கிறார்.

 

அரசியலில் கோபம் இருக்கலாம். ஆனால் கண்ணியக் குறைவு எப்போதும் இருக்கக்கூடாது. தலைக்கு விலை வைக்கும் வேலையை இவர்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் என்ன காட்டுமிராண்டிங்களா? யாராவது விமர்சனம் செய்தால் அவர்களை சிறையில் அடைக்கும் தொடை நடுங்கிகள் தான் இவர்கள். பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலரை இதுபோன்று சிறையில் அடைத்துள்ளன உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிர மாநில பாஜக அரசுகள். இவர்கள் கருத்தியல் ரீதியாக உரையாடுவதாக இருந்தால் தமிழ்நாட்டில் இருக்கலாம். தலைக்கு விலை வைப்பதாக இருந்தால் வடமாநிலம் சென்றுவிடலாம். 

 

தமிழ்நாட்டு மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். சனாதன எதிர்ப்பு பற்றி உதயநிதி ஸ்டாலின் மட்டும் பேசவில்லை. அவருக்கு முன்பு பலரும் அதைப் பேசியுள்ளனர். சனாதனம் பின்பற்றப்பட்டிருந்தால், இன்று உதயநிதிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மேடையேறி இருக்கவே முடியாது. உத்தரப்பிரதேச சாமியாரின் பேச்சை எதிர்க்கும் அண்ணாமலை, ஜனநாயகவாதி போல் நடிக்கிறார். அவருடைய கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல. 

 

வட மாநிலத்தில் செய்யும் அரசியலை பாஜக இங்கு செய்தால் அது எடுபடாது. தமிழர்கள் படித்தவர்கள். உமா ஆனந்தனை இன்னும் ஏன் இந்த அரசு கைது செய்யவில்லை? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரானவர் உதயநிதி. அவருடைய தலையை வெட்ட வேண்டும் என்கிற கருத்தை ஆதரித்து பேசுகிறார் உமா ஆனந்தன். இப்படி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது இவர்கள் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். சனாதனம் என்பது மக்களைக் குறிக்கும் சொல் அல்ல. சனாதனம் என்கிற வார்த்தையை இந்துக்கள் பயன்படுத்துவதில்லை. 

 

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது போல, இந்து மதத்தின் பெயரை சனாதனம் என்று இவர்களால் மாற்ற முடியுமா? தலையை வெட்டுவேன், நாக்கைப் பிடுங்குவேன், கண்ணை நோண்டுவேன் என்று பேசி வரும் இவர்கள் காட்டுமிராண்டிகள் தான். உலகின் எந்த நாட்டிலும் இவ்வாறு அரசியல் தலைவர்கள் பேசுவதில்லை. இவை அனைத்தையும் திமுக அனுமதித்துக் கொண்டிருக்கிறது. இப்படி கீழ்த்தரமாக பேசும் நபர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டின் அரசியல் நிலை மோசமாகும்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...