ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு பார்வை!
ஒருவழியாக தமிழகத்தின் முக்கியப் பிரச்சனையான இரட்டை இலை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. எதிர்பார்த்தபடியே ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சின்னம் கிடைத்த உற்சாகமோ என்னமோ.. உடனடியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்க இருக்கிறது ஆர்.கே.நகர். அந்தப் பகுதி இன்னும் கொஞ்ச நாட்களுக்கு கழுவி சுத்தமாக வைக்கப்பட்டிருக்கும். அடுத்த மாத தேர்தலுக்கு இப்போதே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்..
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சுமார் ஓர் ஆண்டுக்குப் பின்னர் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் டிச.21ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலிலும், 2016ம் ஆண்டு நடைபெற்ற பொதுதேர்தலிலும் வெற்றிபெற்று, ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த ஆண்டு டிச.5ஆம் தேதி மரணமடைந்தார்.
இதையடுத்து, காலியானதாக அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்.12ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதனிடையே, அதிமுக கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான 'இரட்டை இலை' மார்ச் 23ஆம் தேதி முடக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுகவினர் டிடிவி தினகரன் தலைமையில் அதிமுக அம்மா அணி, ஓபிஎஸ் தலைமையில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என இரண்டாகப் பிரிந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களம் இறங்கினர். அதிமுக அம்மா அணியின் வேட்பாளராக டிடிவி தினகரன் களம் இறங்கினார். அதில் அவருக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது. அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பாக முன்னாள் அவைத்தலைவர் மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு இரட்டை மின்விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. திமுக வேட்பாளராக மருதுகணேஷ் களம் இறங்கினார்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு டிடிவி தினகரன் சார்பாக அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. முன்னதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தாலும், பணப்பட்டுவாடா புகார் ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் பரபரப்பை கிளப்பி சாதாரண மக்களும் அதுகுறித்து பேசத் தொடங்கிய நிலையில், வாக்குப்பதிவு நடத்த திட்டமிட்டிருந்த இரண்டு நாட்கள் முன்னர் ஏப்.10ஆம் தேதி தேர்தலை வேறு வழியின்றி திடீரென ரத்துசெய்தது தேர்தல் ஆணையம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்ந்து தாமதமான நிலையில் தேர்தலை வரும் டிச.31ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே போலி வாக்காளர்களை நீக்கும்வரை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலை நடத்தக்கூடாது என திமுக வேட்பாளராக ஏற்கனவே களம் இறங்கிய மருதுகணேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆர்.கே.நகரில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது டிச.21ம் தேதி தேர்தல் நடைபெறும் என இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் தரப்பில் இருந்து வேட்பாளர்களைக் களமிறக்க உள்ளனர். டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த முறையும் ஒரு பிரபலத்தையே வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளோம் என அறிவித்துள்ளார். தேர்தல் களம் சூடுபிடிக்கப் போகிறது. இந்த முறையும் தேர்தலில் பணப்பட்டுவாடா நடக்காது என நிச்சயமாக சொல்லிவிட முடியாது. மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்கப் போகிறது ஆர்.கே.நகர். தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கப்போகின்றன.
ஏற்கெனவே திட்டமிட்ட தேதியில் நடைபெறாமல் நின்றுபோன தேர்தல், அதில் நின்ற வேட்பாளர்களின் உண்மை முகத்தை அந்தத் தொகுதி மக்களுக்கு அப்பட்டமாக காட்டியுள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை அதிகாரத்தை நிரூபிப்பதற்கான தேர்தலாக இது இருக்கலாம். மக்கள் இன்னமும் சின்னங்களின் மோகத்தில் திளைக்கிறார்களா என்பதையாவது இந்தத் தேர்தல் நிரூபிக்கக் கூடும்.
- இசக்கி