தமிழகத்தில் பாஜக தனித்து நின்றாலே 25 தொகுதிகளில் வெற்றிபெறும் ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது. நாலஞ்சு சீட்டுக்கு இனி கையேந்த வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாக ஒரு செய்தி வெளியான நிலையில், டெல்லியில் பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி பாஜக ஒரு பிச்சைக்கார கட்சி என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில் இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது, "தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது. இவர்களாகவே தாங்கள் வளர்ந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். நாங்கள் கூட்டணியில் சேர மாட்டோம். தனியா நிற்போம் என்பதெல்லாம் கூட்டணியில் பேரம் பேசுவதற்காக இவர் பேசுவதுதான்.
தேர்தல் நேரத்தில் பெரிய கட்சிகள் கூட அமைதியாக இருப்பார்கள். ஆனால், சின்ன கட்சிகள்தான் பெரிய உதார் விடுவார்கள். நாங்கள் இல்லையென்றால் ஜெயிக்கவே முடியாது என்றெல்லாம் இவர்கள்தான் சொல்வார்கள். ஆனால், கட்சியில் இரண்டு பேர் மட்டும்தான் இருப்பார்கள். அதைப்போல ஒரு கட்சி தான் பாஜக. இவர்கள் சொல்வது அனைத்தும் உதார் விடுவதை போல்தான் இருக்கிறது. கூட்டணியை மிரட்டி சீட் பேரத்தை அதிகரிக்கவே நாங்கள் வரமாட்டோம், தனித்து நிற்போம் என்றெல்லாம் கதை விட்டு வருகிறார்கள். இவர்கள் கதையெல்லாம் ஒருபோதும் எடுபடாது. மக்கள் மத்தியில் இவர்களுக்கு எந்த மாதிரியான ஆதரவு இருக்கும் என்று அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரியும். இமாச்சல் பிரதேசத்தில் விழுந்த ஓட்டுக்கள்தான் இந்தியாவில் மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு.
பாஜகவுக்கு இருக்கின்ற பலமே அமலாக்கத்துறையும் தேர்தல் ஆணையமும் தான். இது இரண்டும் இல்லை என்றால் அவர்கள் பூஜ்ஜியம் தான். எனவே, சுப்பிரமணியன் சாமி சொன்னது நூறு சதவீதம் உண்மை. அவர் சொன்னது போல இந்த இரண்டும் இவர்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றால், இவர்களால் வெற்றி என்பதைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. இப்போது கூட அண்ணாமலையிடம் வாட்ச் பில்லை கேட்கிறார்கள். உடனே கேட்டா அவர் எப்படிக் கொடுப்பார். பொறுமையா, வாட்ச் வாங்குனா எந்த மாதிரியான பில்லை கொடுப்பார்களோ அந்த மாதிரி அவர் ரெடி பண்ண வேண்டாமா? கொஞ்சம் பொறுத்தா அவரே கொடுத்துடுவாரு. அதனால் அவரிடம் அதைக்கொடு இதைக்கொடு என்று கேட்க வேண்டாம். அதான் அவரே பல லட்ச ரூபாய் வாட்ச் என்று சொல்லிவிட்டாரே. அவர் பில்லை கேட்டு என்ன செய்ய போறீங்க" என்றார்.