கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நான்கு நாட்கள் பயணம் செய்திருக்கிறார் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன். பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும், விவசாயிகளையும் சந்தித்தது குறித்து நம்மிடம் விவரித்தார்...
புயலின் வீரியத்தை தமிழக அரசு உணரவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் ஒரு பாராட்டு கிடைத்தவுடனேயே, புயலுக்கு பிந்தைய பணிகள் மிக மோசமான நிலைக்கு போய்விட்டது. அதன் பிறகுதான் மக்கள் சாலைக்கு வந்து போராட ஆரம்பித்தார்கள். சாலைக்கு வந்து போராடும் அளவுக்கு சக்தி அவர்களிடம் இல்லை.
புயலில் வீடு இடிந்து இருக்க இடம் இல்லாமல் நிற்கதியாய் நிற்கின்றனர். அவ்வவ்போது மழை பெய்கிறது. உணவு, குடிக்க தண்ணீர் கிடையாது. எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார்கள். இது ஒரு பேரழிவு. முகாம் தொடர்ந்து இருக்கும் என்று மக்கள் நினைத்தார்கள். புயல் நின்றவுடன் மழை நின்று விட்டது. இதனை காரணம் காட்டி கிராமப்புறங்களில் 17 ந் தேதியோடு முகாம்களை மூடிவிட்டார்கள், அங்காடிகளில் அரிசி மண்ணெண்ணெய் இருப்பு வைக்க வில்லை.
இதனால் மக்கள் சொல்லொனா துயரத்திற்கு ஆளானார்கள். இதனால்தான் வீதிக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தை துவக்கினார்கள். மண்டல அளவிலான அலுவலர்கள் குழு இருப்பிடத்தை விட்டு எழுந்திருக்க மறுத்து தலைமரைவாகி விட்டனர். இதனால் மக்கள் கொந்தளிக்க துவங்கினர்.
பெரும்பாலான கிராமங்களில் உணவுக்கே வழியில்லை என்ற பிறகுதான் மக்கள் போராட்டக் களத்திற்கு வந்தார்கள். இன்று வரைக்கும் பல கிராமங்களில் குடிநீருக்கு மக்கள் தவிக்கிறார்கள். ஜெனரேட்டர் வைத்து இறைக்கவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. மழை நீரையே பயன்படுத்துகின்றனர். இன்று காலை வரை நகரத்திலும் இந்த நிலை... மன்னார்குடியில் இந்த நிலை...
கிராமப் பகுதிகளில் மரங்கள் பெரும்பாலும் வயல் பகுதிகளில் விழுந்துள்ளது. உயர்மின்னழுத்தம் கொண்ட மின்கம்பங்கள் முழுவதும் வயல்வெளிகளில் போகிறது. உயர்மின்னெழுத்த பாதையை சரிசெய்யாமல் கிராமப்புறங்களுக்கு மின் இணைப்பு போகாது.
நான் கடந்த நான்கு நாட்களாக புயல் பாதிப்பட்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்தேன். முழுமையாக ஆய்வு செய்தேன். விவசாய தொழிலாளர்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வேலை இழப்பு. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு. தென்னை விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளார்கள்.
பெண்கள் கதறுகிறார்கள். எப்படி வாழப்போகிறோம் என்று கண்ணீர் விட்டு கதறுகின்றனர். மத்திய அரசின் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மண்டல அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர், தன் ஊரில் ஏற்பட்டுள்ள இழப்பை பார்த்து என்னை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு கதறினார். அந்த அளவுக்கு பெரிய பேரழிவை காவிரி டெல்டா பகுதி சந்தித்துள்ளது.
இந்த அரசை பிடிக்காதவர்கள், எதிர்க்கட்சியினர் மக்களை சந்திக்க வரும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரும்போது வேண்டுமென்றே மறிக்கிறார்கள், முற்றுகையிடுகிறார்கள் என்று ஆளும் தரப்பு சொல்கிறதே?
இது முற்றிலும் தவறான தகவல். இதற்கு முன்பு இதேபோன்ற இழப்புகள் வரும்போது அமைச்சர்கள் மக்களை சந்தித்திருக்கிறார்கள். அப்படிபோகும்போது அமைச்சர்கள் சார்ந்த கட்சியினரும் செல்வார்கள். எதிர்க்கட்சியினர்தான் மறியல் செய்கிறார்கள் என்றால் ஆளும் கட்சியினர் அப்போது எங்கே சென்றார்கள். அப்போது உண்மை என்ன? ஆளும் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இணைந்துவிட்டனர் என்பதுதானே.
இதற்கு அனைத்துக்குமே காரணம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல் அமைச்சர் ஐந்து நாட்கள் வராததுதான். இதில் மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது. 16ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் நல்ல வெயில் அடித்தது. ஹெலிகாப்டரில்தான் பார்வையிடப்போகிறேன் என்றால், அன்றே ஹெலிகாப்டரில் பார்வையிட்டிருக்க வேண்டியதுதானே.
சாலைகளில் மரம் விழுந்து கிடக்கிறது. அதனை அப்புறப்படுத்தியப் பிறகுதான் சாலை வழிப்பயணம் செய்ய முடியும் என்கிறார்களே?
16ஆம் தேதி இரவே நெடுஞ்சாலைத்துறை பெரும் சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றிவிட்டனர். தஞ்சாவூர் - மன்னார்குடி - திரைத்துறைப்பூண்டி சாலை சரியாகிவிட்டது. திரைத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில் கார் போகும் அளவுக்கு சாலை இருந்தது. முதல் அமைச்சர் தரை மார்க்கமாக வந்திருக்கலாம்.
முதல் அமைச்சர் ஓடி வந்திருந்தால் பிரதமரின் பார்வை தமிழ்நாட்டின் மீது விழுந்திருக்கும். இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் உதவ முன் வந்திருக்கும். உலகத் தமிழர்களின் பார்வை தமிழ்நாட்டின் மீது விழுந்திருக்கும். பிரதமர் ஓடோடி வந்திருப்பார். அந்த நிர்பந்தத்தை உண்டாக்காதது ஏன்? இதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
நாகை, திருவாரூர் இரண்டு மாவட்டத்தை சுத்தமாக புறம் தள்ளியிருக்கிறார். மத்திய அரசு நிதி கொடுத்தால்தான் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்று சொல்லுகிறார். பிரதமர் வராமல் மத்திய குழு வந்தால் அது சடங்காகத்தான் போகும். ஏற்கனவே பல இயற்கை சீற்றங்கள் வந்தபோது இந்த மத்திய குழு வந்ததில் எந்த பலனும் கிடையாது. ஒரு பெரும் தொகையை ஒதுக்கிவிட்டு, கூடுதல் பாதிப்புக்கு என்ன செய்யலாம் என்று ஆய்வு செய்யத்தான் மத்திய குழு வரவேண்டும். பாதிப்பா என்று ஆய்வு செய்தவற்கு ஏன் குழு வரவேண்டும்.
மத்திய அரசு ஏன் உடனடியாக வரவில்லை?. தமிழ்நாடு இந்தியாவின் ஒரு அங்கம்தானே. தமிழக மக்கள் இந்திய பிரஜைதானே? மற்ற மாநிலங்களில் ஒரு சிறிய பாதிப்பு ஏற்பட்டால் பிரதமர் போகிறார், உள்துறை அமைச்சர் போகிறார். அமைச்சர்கள் குழு போகிறது. ஓடோடி உதவி செய்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை ஏன் காவிரி டெல்டா பக்கம் திரும்பவில்லை. இதில் மிகப்பெரிய உள்நோக்கம் இருக்கிறது.
முதலமைச்சர் வராததற்கும், பிரதமர் கண்டுகொள்ளாதற்கும், முதலமைச்சரின் செயல்பாடுகள் மிகவும் மந்தமாக இருந்ததற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. ஏதோ ஒரு அழுத்தம் இருக்கிறது. அந்த அழுத்தத்தை அவர் வெளிப்படுத்த வேண்டும்.
முதலமைச்சர் டெல்டா பாதிப்புகளை கண்டுகொள்ளாததன் பின்னணில் மத்திய அரசு இருக்கிறது என்கிறீர்களா?
மத்திய அரசின் உள்நோக்கம் என்னவென்றால் காவிரி டெல்டாவில் விவசாயம் இருக்கக்கூடாது என்பதுதான். குறிப்பாக இந்த புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக அனுமதிக்கப்பட்ட பகுதிகள். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பது யார்? மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கக்கூடிய மக்கள். அந்த மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும்போது பிரதமர் வராமல் தவிர்க்கிறார், புறக்கணிக்கிறார். முதலமைச்சர் ஏனோதானோவென்று செயல்பட்டிருக்கிறார். இதனை பார்க்கும்போது எங்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் இருக்கிறது. இதைத்தான் நாங்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.
டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு சில திட்டங்களை கொண்டு வருகிறது. அதனை அப்பகுதி மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதால் மத்திய அரசும், மாநில அரசும் கண்டுகொள்ளவில்லை என்கிறீர்களா?
அந்த திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்திருக்கிறது. காவல்துறையை வைத்து அச்சுறுத்தி வழக்குப்போட்டு அந்த திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு மிக வேகமாக நடவடிக்கை எடுக்கிறது. அதற்கு மாநில அரசு ஒத்துப்போகிறது. இந்த சூழ்நிலையில் எந்த இடத்தை மையப்படுத்தி மத்திய அரசு தாக்குதல் தொடங்கியிருக்கோ அந்த பகுதி கஜா புயலால் அழிகிறது. அழிகிற பகுதியை பிரதமர் பார்க்க வராததற்கான காரணம். முதலமைச்சர் உடனே வந்து பார்க்காததற்கு காரணம்.
தென்னைக்கு நிவாரணத் தொகையாக 1100 ரூபாய் கொடுப்பதிலும் பின்னணி இருக்கிறதா?
இழப்பீடை பொறுத்தவரையில் உற்பத்தி செலவை கணக்கிடுவது அரசாங்கம்தான். சென்னை - சேலம் எட்டு வழச்சாலைக்கு தென்னை ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் தருவதாக சொல்லியிருக்கிறார். செக் கொடுத்திருக்கிறார்கள். அங்கு உள்ள தென்னை மரத்திற்கு மதிப்பீடு போட்டது தமிழக அரசுதானே. அதே தமிழக அரசு நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை தென்னை மரத்திற்கு மதிப்பை குறைத்து 1100 ரூபாய் கொடுக்கிறது.
அதன் அர்த்தம் என்ன? இனி விவசாயி மீண்டும் தென்னை பயிரிடக்கூடாது. அந்த நிலங்களை எந்த தடையும் இல்லாமல் இயக்கை வளங்களை எடுக்கும் நிறுவனங்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்ற ஒரு நிர்பந்தத்தை உள்நோக்கத்துடன் மேற்கொள்வதற்கான நடவடிக்கை போலத்தான் தெரிகிறது.