Skip to main content

விஸ்வநாத் பிரதாப் சிங் எனும் சமூகநீதிக் காவலர்

Published on 25/06/2023 | Edited on 25/06/2023

 

former prime minister  vp singh birthday special aricle

 

இந்து சட்ட மசோதாவை நிறைவேற்றி பெண்களுக்கும் சொத்துரிமை அளிக்க வேண்டும் என்றும், OBC ஆணையம் அமைத்து பிராமணர்களைக் (ஆண், பெண்) கணக்கெடுத்து அவர்களுக்குத் தனியாக OBC இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும், காஷ்மீர் பிரச்சனையில் காஷ்மீரிகளுக்கு அரசு முழு உரிமையை வழங்கியிருக்க வேண்டும்., ஆனால் இந்தியாவின் தலையீடு காஷ்மீர் மக்களின் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது போன்ற காரணங்களுக்காகத் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாளன்று டாக்டர். அம்பேத்கர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடுகிறார். அம்பேத்கர் பதவி விலகிய ஆண்டு 1951, செப்டம்பர் 27.

 

‘சமூக ஜனநாயகத்தை அடையாமல்; உண்மையான அரசியல் ஜனநாயகம் இருக்க முடியாது’ என்று நம்பிய டாக்டர் அம்பேத்கரை, எங்கெல்லாம் நிறுவ முடியுமோ அங்கெல்லாம் நிறுவி அம்பேத்கரின் ராஜினாமாவுக்குப் பிறகான 40 ஆண்டுகள் கழித்து, வெறும் 11 மாதங்களே பிரதமராக இருந்த வி.பி. சிங், அம்பேத்கர் தனது பதவியை ராஜினாமா செய்யக் காரணமாக இருந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு BC, MBC ( OBC ) இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினார். அவர் பிறந்த இந்நாளில் அவரின் சமூகப் பணியை நினைவு கூறுவது ‘சமூக நீதி’யைப் பேசுவது என்றுதான் ஆகும்.

 

அம்பேத்கர் நூற்றாண்டு விழாவின்போது நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் புகைப்படத்தை நிறுவியதோடு மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு சட்டத்தைப் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த சட்ட அமைச்சரான ராம் விலாஸ் பாஸ்வானை வைத்து நிறைவேற்ற முன்னெடுப்பு செய்தார். ‘பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும்’ என்று நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தபோதும், ‘ஒருவன் சமூக அடிப்படையில் தான் பல்லாயிரம் ஆண்டு ஒடுக்கப்பட்டு இருக்கிறான். அதனால் சமூக அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற வாதத்தை வைத்தார். அதன்வழி மண்டல் கமிஷன் பரிந்துரைத்த 27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான கோரிக்கையை நிறைவேற்றினார்.

 

மாணவர் அமைப்புகள் மண்டல் கமிஷனை எதிர்த்துப் போராட்டம் செய்தனர். இதில் துயரம் என்னவென்றால், யாருக்காக, யாருடைய உரிமைக்காக வி.பி. சிங் போராடிக் கொண்டிருந்தாரோ, அதே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வைத்தே போராட்டம் நடத்தினார்கள். மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தியதால் பரவலாகப் பேசப்பட்டவர் இந்திய நாட்டில் மற்றொரு முன்னெடுப்பை முதலாக எடுத்தார். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் 1984 முதல் 1987 வரை நிதியமைச்சராக இருந்தபோது பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடங்கியவர் வி.பி. சிங்தான்.

 

தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி நீருக்காக நடுவர் மன்ற ஆணையத்தை அமைத்தது. பெண்களுக்கான 30 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கச் சட்டம் நிறைவேற்றியது எனக் குறுகிய காலத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பு நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் இருந்த பற்றைக் காட்டுகிறது. பெயருக்குப் பின்னால் இருந்த சாதியை விட உயர்ந்தது கல்வி என உணர்த்தி இந்தியாவின் ஒவ்வொரு பிற்படுத்தப்பட்டோரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோரும் பெருமையாகக் கல்விப் பட்டங்களைப் போட்டுக்கொள்ளக் காரணகர்த்தாவாக இருந்த சமூகநீதிக் காவலரை அவரின் வார்த்தையாலேயே புகழ வேண்டுமெனில் ‘அரசியல் நாட்காட்டியில் கடைசி நாள் என்பது இல்லை’ என்பதுபோல இந்திய அரசியலும் நீங்கள் இல்லாமல் இல்லை.

 

 

சார்ந்த செய்திகள்