Skip to main content

டெல்லிக்கு அனுப்பப்படும் ஃபைல்கள்! ஈரோடு தேர்தலுக்குத் தடை?

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

Files sent to Delhi! Ban on Erode election?

 

ஈரோடு கிழக்கு தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், தேர்தலை நிறுத்துவதற்கான வேலைகள் டெல்லியில் வேகம் எடுத்துள்ளன. இந்த வேலையில் ஈடுபட்டிருப்பது அமலாக்கத் துறை அதிகாரிகள். ஒன்றிய அரசின் ஏஜென்சிகளான சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகிய மூன்று ஏஜென்சிகளின் ஒட்டு மொத்த அதிகாரமும் அமலாக்கத்துறை சிறப்புப் பிரிவுகளுக்கு ஒன்றிய அரசு சமீபத்தில் அளித்தது. 

 

அத்துடன் எதற்கும் பயப்படாத கருணையே இல்லாத அதிகாரிகளை அமலாக்கத்துறையில் ஒன்றிய அரசு நியமித்தது. மம்தா பானர்ஜியின் மேற்கு வங்க அரசில் நடந்த ஆசிரியர் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை அமலாக்கத்துறை விசாரித்து, அதன் அமைச்சரையே கைது செய்தது. இதனால் மம்தா பானர்ஜி நிலைகுலைந்து போனார். அப்படிப்பட்ட அமலாக்கத்துறையை ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஒன்றிய அரசு களம் இறக்கியுள்ளது.

 

Files sent to Delhi! Ban on Erode election?

 

அவர்கள் ஒரு ரிப்போர்ட்டை தயாரித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளனர். மொத்தமுள்ள வாக்காளர் எண்ணிக்கை ரெண்டு லட்சத்து முப்பதாயிரம். அவை வாக்காளர் பட்டியல் அடிப்படையில் 22 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பாகத்துக்கு ஐந்நூறு பேர் என தேர்ந்தெடுத்து அவர்களை வைத்து ஊர்வலங்களை நடத்துகிறது தி.மு.க. அந்த ஐந்நூறு பேருக்கும் காலையில் ஐந்நூறு ரூபாய், மாலையில் ஐந்நூறு ரூபாய் என ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இப்படி ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வாரி இறைக்கப்படுகிறது. இது தவிர ஓட்டுக்கு ஆறாயிரம் ரூபாய் என இரண்டு லட்சம் வாக்காளர்களுக்கு கொடுக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மொத்த செலவு 120 கோடி ரூபாய்.

 

ஆர்.கே.நகர் தேர்தலில் ஓட்டுக்கு நாலாயிரம் ரூபாய் டி.டி.வி.தினகரன் கொடுத்தார். தி.மு.க. அதில் இரண்டாயிரம் ரூபாய் ஏற்றி ஆறாயிரம் ரூபாய் எனத் திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தப் பணம் இன்னமும் விநியோகிக்கப்படவில்லை. இது விநியோகிக்கப்பட்டால் தி.மு.க. இன்றைய நிலையிலேயே ஒரு லட்சம் வாக்குகளைக் கவர் செய்துள்ளது. அதன் வாக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தை தாண்டும். அ.தி.மு.க. வாக்குகள் மிகவும் சுருங்கும். அ.தி.மு.க டெபாசிட் இழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

Files sent to Delhi! Ban on Erode election?

 

இந்த நிலைமையைச் சமாளிக்க அ.தி.மு.க. வாக்காளர்களைக் கெஞ்சுகிறது. வாக்காளர்கள் அ.தி.மு.க.வின் ஊர்வலங்களுக்கு வருவதில்லை. அவர்களுக்கு ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் கொடுத்து பத்து நாட்களுக்கு தி.மு.க. அட்வான்ஸ் புக்கிங் செய்துள்ளது. அதனால் எடப்பாடி குறைந்தபட்சம் அ.தி.மு.க. வாக்குகளையாவது வாங்க வேண்டும் என ஒரு ஓட்டுக்கு இரண்டாயிரம் என ரெண்டு லட்சம் வாக்காளர்களுக்கு நாற்பது கோடி செலவு செய்ய முன்னாள் அமைச்சர்களிடம் நிதி திரட்டி வருகிறார். அதில் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் போன்றவர்கள் “எங்களிடம் பைசா இல்லை” என எடப்பாடிக்கு கை விரித்து விட்டார்கள். ஜெயக்குமார் பணப் பிரச்சனை காரணமாக ஈரோடு தொகுதிக்கே வரவில்லை. தங்கமணி, வேலுமணி, வீரமணி, எடப்பாடி சேர்ந்து நாற்பது கோடி ரூபாயை வாக்காளர்களுக்கு தர தயார் செய்து வைத்திருக்கிறார்கள். அதில் பெரும் பகுதி பணம் எடப்பாடியுடையது என ஒரு ரிப்போர்ட்டை அமலாக்கத்துறை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது என்கிறது மத்திய அரசு வட்டாரங்கள்.

 

ஈரோடு கிழக்கு தேர்தலைப் பொறுத்தவரை அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்காமல் இழுத்தடிக்கலாம் என பா.ஜ.க. திட்டமிட்டது. ஆனால், எடப்பாடி சுப்ரீம் கோர்ட்டுக்குப் போய் சின்னம் வாங்கி வந்துவிட்டார். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 19, 20 தேதிகளில் ஈரோட்டில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அந்தப் பிரச்சாரத்துக்கு நான் வர மாட்டேன் என எடப்பாடி தெளிவாகக் கூறிவிட்டார். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதை பா.ஜ.க. விரும்பவில்லை. அத்துடன், இந்த தேர்தலால் பா.ஜ.க.வுக்கு எந்த லாபமும் இல்லை.

 

Files sent to Delhi! Ban on Erode election?

 

கடந்த பாராளுமன்றக் கூட்டத் தொடரில் நரேந்திர மோடிக்கு எதிராக தி.மு.க. வலுவாகக் குரல் எழுப்பியதை மோடி விரும்பவில்லை. எனவே, தி.மு.க. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதை எப்படி நிறுத்தலாம் என்கிற ஆலோசனைகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே தமிழகத்தில் நடைபெற்ற ஆர்.கே.நகர், வேலூர் தேர்தல்களை பண விநியோகத்தைக் காரணம் காட்டி மத்திய தேர்தல் கமிஷன் நிறுத்தியது. அதுபோல் ஈரோடு கிழக்கு தேர்தலையும் நிறுத்தலாம் என ஒன்றிய அரசுக்கு ஆலோசனைகளை அமலாக்கத்துறை வழங்கியுள்ளது. அத்துடன் தி.மு.க.வை சேர்ந்த எட்டு பேர் மீது விரைவில் அமலாக்கத்துறை பாய இருக்கிறது என ஒன்றிய அரசு வட்டாரங்கள் எச்சரிக்கை ரிப்போர்ட்டை தருகின்றன.