Skip to main content

கொப்பளிக்கும் அணை! காப்பாற்றாத அதிகாரிகள்! கொந்தளிக்கும் விவசாயிகள்

Published on 20/07/2018 | Edited on 20/07/2018

 

தென் மாவட்டத்தின் விவசாயம் மற்றும் மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும் அடிப்படையாக இருந்த மூன்று பெரிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு சேர்வலாறு அணைகளின் நீர் மட்டம் மார்ச் மாதக் கோடையின்போது சுறு சுறுவென்று வற்றி 22 அடிக்கும் கீழே சென்றது. நூற்றுக்கும் மேற்பட்ட அடிகள் கொள்ளவு கொண்ட இந்த அணைகளின் நீர் வற்றிப் போனது மாவட்ட மக்களின் குடி நீர் ஆதாரம் விவசாயம் பற்றிய கலக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. கோடை தப்பிக்குமா என்றெல்லாம் வேண்டினர்.
 

நல்ல வேளையாக தென் மேற்குப் பருவமழையின் வருண பகவான் தென் மேற்குத் தொடர்ச்சி மலையில் சப்பணமிட்டு அமர்ந்ததால் அதன் தாக்கம், தொடர்ந்து மூன்று வாரங்கள் பெய்த தொடர் மழையின் காரணமாக வற்றாத தாமிரபரணி ஊற்றெடுத்தது. குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளம் போன்று பெருக்கெடுத்து ஒடியது. வற்றிய அணைகளின் நீர் மட்டங்கள் விர்ர்ர்ரென்று எகிறின. அணைகளின் நீர், பத்தே நாட்களில் பாபநாசம் அணை 107.30 அடியாகவும், மிகப் பெரிய அணையான 118 அடி கொள்ளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர் மட்டம் 79.45 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர் மட்டம 128.67 என்று தண்ணீரின் அளவை இயற்கையின் கொடை உயர்த்தியதை வரப்பிரசாதமாக மக்களும், விவசாயிகளும் கொண்டாடுமளவுக்குக் கொண்டு போயிருக்கிறது. மட்டுமல்ல இந்த மலையை ஒட்டியுள்ள கருப்பாநதி, கடனாநதி, ராமநதி அணைகள் நிரப்பியதோடு பச்சையாறு, நம்பியாறு போன்றவைகளும் பெருக்கெடுத்து ஒடுகின்றன.
 

இவைகளில், குறிப்பாக நெல்லை மாவட்டத்தின் கடையம் பகுதியை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள ராமநதி கொள்ளளவான 84 அடியைத் தாண்டி விட்டது. இதன் மூலம், கடையம், ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், பொட்டல், புதூர், மந்தியூர், ராஜாங்கபுரம் என்று 17க்கும் மேற்பட்ட கிராமங்களின் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு அந்தப் பகுதிகளின் குளங்களும் நிரம்புவதற்கும் ஆதாரமாக நிற்கிறது ராமநதி அணை,
 

தென்கால், வடகால் என இரண்டு மதகுகளைக் கொண்ட ராமநதியின் அணைக்குக் கீழாக 9 அணைக்கட்டுகள் உள்ளன. அதன் மூலம் வெளியேறும் தண்ணீர் 33 குளங்களை நிரப்புகின்றன.இந்த அணையில் பக்கமுள்ள தனியார் கல்குவாரியில் ஜல்லிகற்களுக்காக பாறைகள் வெடிவைத்துப் பிளக்கப்பட்டு கிரஷ்ஷர் மெஷின் மூலமாக தயாரிக்கப்படுகின்றன. அதற்காகத் தொடர்ந்து வைக்கப்படுகிற சக்தி வாய்ந்த வெடிகளின் வெடிப்பு காரணமாக தரைப்பாறைகள் வெகு தொலைவு வரை அதிர்வதால், அருகிலுள்ள ராமநதி அணையிலும் அதிர்வுகள் ஏற்பட்டு அணையின் கரை மற்றும் ஷட்டர் பகுதிகள், பல வீனமாகி விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கொப்பளித்து வெளியேறத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து வைக்கப்படும் வெடிகளால் அணை உடையும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
 

இது குறித்துச் சொல்கிற அந்தப் பகுதியின் விவசாயப் பிரதிநிதியான அழகப்புரம் செல்லையா.
 

ஜல்லிக் கற்களுக்காக கல்குவாரியை எடுத்திருப்பவர்கள் ஒரே நேரத்தில் 30 முதல் 40 குழிகள் வரை துளைபோட்டு சக்தியுள்ள டைனமைட் வைக்கிறார்கள் அவைகள் ஒரே நேரத்தில் வெடிப்பதால் பூகம்பம் ஏற்பட்டதைப் போன்று பாறைகள் பிளந்து தரை அதிர்கிறது. இதனால் அணையில் ஏற்பட்ட விரிசல் பற்றி மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவைகள் தொடர்ந்து நீடிக்குமேயானால் அணை உடைந்து பேராபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. என அதிர்ச்சியோடு சொல்கிற செல்லையா, ஐந்து வருடக் கோடையில் நிரம்பாத அணைகள் தற்போதைய தென்மேற்குப் பருவமழையால் நிரம்பியதைக் காப்பாற்ற வேண்டும். என்கிறார் வேதனையோடு.
 

அணைகள் நிரம்புவது அத்தனை சுலபமல்ல. நிரம்பிய அணையைத்தக்க பாதுகாப்புடன் வைப்பதே அதிகாரிகள், அரசின் கடமையாகும். எதிர்பார்க்கிறார்கள் வேளாண்மக்கள்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்