Skip to main content

முகம் காட்டினால் முகநூல் திறக்கும் !!!

Published on 07/10/2017 | Edited on 07/10/2017
முகம் காட்டினால் முகநூல்  திறக்கும் !!!





உலகில் உள்ள அனைவரையும் ஒர் செயலிக்குள் கட்டிப்போட்டுள்ள 'ஃபேஸ்புக்' நிறுவனம் தற்போது தனது வாடிக்கையாளர்களின் ஃபேஸ்புக் கணக்குகளுக்கு மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது. சில மாதங்களுக்கு முன், பாடகி சுசித்ராவின் 'ட்விட்டர்' கணக்கு 'ஹேக்' செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அவரது ட்விட்டரில் இருந்து பல பல புகைப்படங்களும்,  தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதற்கு முன்பே ஹிந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், நடிகைகள் ஸ்ருதி ஹாசன், மடோனா சபாஸ்டீன், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல பிரபலங்களின் ஃபேஸ்புக் கணக்குகள் அவ்வப்போது   'ஹேக்' செய்யப்பட்டு தவறாகப் பயன்படுத்தபுள்ளன. இவ்வாறு  நமது  ஃபேஸ்புக் கணக்கு 'ஹேக்' செய்யப்பட்டாலோ, அல்லது நாம் நமது கடவுச்சொல்லை மறந்துவிட்டாலோ, நமது   ஃபேஸ்புக் கணக்கை மீட்க இதுவரை இரட்டைப் பாதுகாப்பு முறை இருந்தது. குறுந்தகவல், மின்னஞ்சல் மூலம் மீட்க முடியும்.   'ஹேக்' செய்யப்பட்டிருந்தால் அந்தத் தகவல்களையும் கூட மாற்றும் வாய்ப்பிருந்ததால், பயன்படுத்துபவரின் முகத்தை வைத்து மீட்கும் முறையை இப்பொழுது சோதித்து வருகிறது  ஃபேஸ்புக்.       






ஹேக் செய்யப்பட்ட ஹ்ரித்திக் ரோஷன் ஃபேஸ்புக்  கணக்கு 
 


முக அங்கீகார (Face Recognition)  முறை, தற்போது வெளியாகியுள்ள ஆப்பிளின்  'ஐ - ஃபோன் X' மற்றும் சாம்சங் கேலக்ஸி 8 ஆகியவையில் இருப்பது  குறிப்பிடத்தக்கது. இந்த அம்சத்தில், முன்னர் பயன்படுத்துபவரின் புகைப்படத்தை பயன்படுத்தி நுழையும் அபாயம் இருந்ததால், கவனமாக உருவாக்கி வருவதாக  ஃபேஸ்புக் தெரிவித்தது.  ஏற்கனவே  ஃபேஸ்புக்கில், நாம் புகைப்படங்களை ஏற்றும்பொழுது, புகைப்படத்தில் இருக்கும் நண்பர்களைத் தானே கண்டறிந்து  'டேக்' செய்ய  ஃபேஸ்புக் பரிந்துரைக்கிறது. ஆனால், அதில் பலமுறை தவறுகள் நிகழ்கின்றன.  இது போன்றல்லாமல் தவறு நிகழும் வாய்ப்பில்லாத வகையில் இந்தப் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த தயாராகிறது ஃபேஸ்புக்.








நாளுக்கு நாள் நம் தகவல்களும், நடவடிக்கைகளும், வாழ்க்கை முறையும்  கணினியைச் சார்ந்தே இருக்கின்றன. நமது விருப்பங்களும் தேர்வுகளும் ரசனையும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவாகிவருகின்றன. இப்படியிருக்கும் பொழுது, நம் தகவல்களின் பாதுகாப்பு மிகுந்த கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக நிறுவனங்கள் கூறும்போது நம்பத்தான் வேண்டியிருக்கிறது.

ஹரிஹரசுதன்               

சார்ந்த செய்திகள்