பிரதமர் மோடி நேற்று தொலைக்காட்சியில் கரோனா தொடர்பாகவும், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாகவும் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். இதுதொடர்பாக எவிடன்ஸ் கதிர் தெரிவித்துள்ள கருத்து வருமாறு, "ஊரடங்கு தொடர்பாக பிரதமர் இரண்டாவது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி இருக்கிறார். மக்கள் பாதுகாப்பாக இருங்கள், சத்தான உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவினைச் சாப்பிடுங்கள் என்று கூறியிருக்கிறார். என்றைக்கு கரோனா தொற்று உலகில் ஆரம்பித்ததோ அன்றில் இருந்து அனைவரும் சொல்லும் முறையைத்தான் தற்போது பிரதமர் கூறியுள்ளார். ஆலோசனை சொல்ல ஒரு பிரதமர் எதற்கு? ஒரு பக்கம் இந்தியாவில் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மற்றொரு பக்கம் இந்தியாவின் பொருளாதாரம் பின்நோக்கி செல்கிறது. ஏழை எளிய மக்களின் பிரச்சனைகள் அதிகம் இருக்கிறது. குடும்ப வன்முறை அதிகரித்து உள்ளது. தற்கொலைகள் அதிகரித்து இருக்கின்றது. பசி, பட்டினி உச்சத்தில் இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு தீர்வு சொல்லுவார் என்று பிரதமரின் அறிவிப்பை அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் இது எதைப்பற்றியும் கூறாமல், வழக்கம்போல் அறிவுரையைச் சொல்லிவிட்டு பிரதமர் தன்னுடைய உரையை முடித்துக் கொண்டுள்ளார். இன்னும் ஊரடங்கை கடுமையாக்கப் போகிறோம், 20 தேதிக்குப் பிறகு தளர்த்த போகிறோம் என்று பேசி இருக்கிறார். ஏற்கனவே அவர் மூன்று முறை நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி இருக்கிறார். அதில் ஒருமுறை கைத்தட்ட சொன்னார், மற்றொரு முறை ஒளியேற்றச் சொல்லியிருந்தார். உலக தலைவர் எல்லோருமே மக்களிடம் பேசுகிறார்கள் என்றாலே செயல் திட்டங்கள்தான் அதிகமாக இருக்கும். எத்தனை சதவீதம் இந்தத் தொற்றுக்கு நிதி ஒதுக்குகிறோம் என்ற ஒரு செயல்திட்டத்தைக் கூட மோடி அறிவிக்கவில்லை. உலக நாட்டின் தலைவர்கள் எல்லாம் இந்தத் தொற்றுக்குப் போதுமான நிதியின் ஒதுக்கி வருகிறார்கள். ஆனால் இந்தியாவில் அதுபற்றிய முழு விவரம் இதுவரை தெரியவில்லை. மோடியின் உரையைக் கேட்கும்போது நமக்குச் சலிப்பு ஏற்படுகிறது. இதைச் சொல்ல எதற்குப் பிரதமர், சுகாதாரத்துறை செயலாளர் போதுமே என்ற எண்ணம் நமக்கு வருகிறது" என்றார்.