Skip to main content

“ஓபிஎஸ் என் பக்கத்துல உட்காரக் கூடாது...” சீட்டுக்காக சண்டைபோட்ட அதிமுக; அமளிதுமளியான சட்டசபை

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

eps said ops should not occupy seat Opposition Leader tn Assembly

 

ஓபிஎஸ் என் பக்கத்துல உட்காரக் கூடாது... என சீட்டுக்காக ரகளையில் ஈடுபட்ட இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்ட சபாநாயகரின் அறிவிப்பால் சட்டசபையே அமளிதுமளியாக காட்சியளித்தது.

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பல முட்டல் மோதல்கள் நீடித்துவரும் நிலையில், அதிமுக என்ற பெரிய கட்சி மூன்று அணிகளாக பிரிந்து கிடக்கிறது. ஒருபுறம் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், மறுபுறம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓபிஎஸ்-சும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதில், கட்சியிலேயே இல்லாத சசிகலா நான்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் எனக் கூறி வருகிறார். அதிமுக தொண்டர்கள் இடையே வெறுப்பை ஏற்படுத்தும்படியான பல்வேறு குழப்பங்கள் அதிமுகவில் நிலவி வருகிறது.

 

இந்த சூழலில் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று தொடங்கப்பட்டது. சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு பக்கத்திலேயே எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அமர வேண்டியிருக்கும். கடந்த 4, 5 மாதங்களாக எலியும் பூனையுமாக இருந்து வந்த ஓபிஎஸ், இபிஎஸ் ஒன்றாக உட்காரும்போது என்ன நடக்கப் போகிறதோ என்பதைக் காண அதிமுக தொண்டர்கள் பலரும் காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமரக்கூடாது என எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் அந்தக் கடிதம் மீது சபாநாயகர் அப்பாவு இதுவரை எந்த முடிவையும் எடுக்காமலேயே இருந்தார்.

 

மேலும், சட்டமன்ற இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அருகில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையிலேயே ஓபிஎஸ் அமர்ந்தார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் அவரது தரப்பு எம்எல்ஏக்களும் சட்டசபைக்கு வரவில்லை.

 

இந்நிலையில், சட்டசபை கூட்டத்தொடர் 2வது நாளாக இன்று கூடியது. அதற்கு முன்கூட்டியே இருக்கை விவகாரம் குறித்து சபாநாயகர் அப்பாவுவை, எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அதன்பிறகு அவைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பக்கத்தில் அமர்ந்தார். ஒருபக்கம் வாங்க பழகுவோம் என்ற பாணியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வமும், மறுபக்கம் பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து தூக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக உட்கார்ந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் இருக்கைகள் மாற்றம் செய்யப்படாத காரணத்தால் சட்டசபை கூட்டம் தொடங்கியதுமே அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

 

முதலில் மக்கள் பிரச்சினை குறித்துப் பேச அனுமதியுங்கள் பிறகு நேரம் தருகிறேன் என எடப்பாடி பழனிசாமியிடம் சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டார். ஆனால் இதனை ஏற்காத எடப்பாடி தரப்பு கூச்சல், குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் கோபம் அடைந்த சபாநாயகர் 'சட்டமன்ற கூட்டத்தொடரை கெடுப்பதற்காகவே எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு வந்ததுபோல் இருக்கிறது. அவையில் தேவையில்லாத பிரச்சனைகளை பற்றிப் பேசி சபையில் குந்தகம் விளைவிக்க வேண்டாம் என சபாநாயகர் தெரிவித்தார். அப்போதும் எதையும் பொருட்படுத்தாது எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் சட்டப் பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று ஒருநாள் தடை விதிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் சட்டசபை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.