Skip to main content

கரோனா ஏன்...? "நமக்கு நாமே எதிரிகளாகிறோம்..." -பொன்னீலன்

Published on 14/05/2020 | Edited on 14/05/2020
Ponneelan




கரோனா வைரஸ் காலத்தை எழுத்தாளர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையறிய எழுத்தாளரும் சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான நாவலாசிரியர் பொன்னீலன் அவர்களிடம் பேசினோம். கட்டுரையாகவே நமக்கு கொடுத்தார்.


அதில், "கிட்டத்தட்ட இரு மாதத்திற்கு மேலாக கரோனா என்னும் நுண்ணிய கிருமி நம்மை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கி கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் பரவி, கோடிக்கும் அதிகமான மக்களை துயரப்படுத்தி வருகிறது இது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இதன் பாதிப்பு பரவலாக இருக்கிறது. சென்னையில் இதன் பாதிப்பு அதிகம். 

இந்த வைரஸ் என்பது புதிதான ஒரு கிருமி. உலகத்தில் 200-க்கும் மேற்பட்ட வைரஸ்கள் இருக்கும் எனச் சொல்லுகிறார்கள். இதற்கு முன்பும் வைரஸ் பல முறை உலகத்தை தாக்கி இருக்கிறது. வைசூரி, காலரா, பிளேக் என பல வைரஸ் நோய்கள் நம்மை தொடர்ந்து பாதித்து வந்திருக்கின்றன. 

 

 


எபோலா, சார்ஸ் பல கண்டங்களை, குறிப்பாக ஆப்பிரிக்கா கண்டங்களை தாக்கியது. நாம் பல வைரஸ் தாக்குதல்களில் இருந்து வெற்றி பெற்றிருக்கிறோம்.  இளம்பிள்ளை வாதம், மலேரியா, இவற்றில் இருந்து பெரும் அளவு வெற்றி பெற்றிருக்கிறோம். நேரு, இந்திரா காலத்தில் மருந்து கண்டுபிடிக்கப்படுவதில் பெரிய பங்கு நமக்கு இருந்தது. 

இந்த விதமாக வைரஸ் நீண்டகாலம் இருந்து வந்திருக்கிறது என்று சொல்லுகிறார்கள். இதற்கு முன்பு ஏற்பட்ட சிக்குன் குனியா உடல் உறுப்புகளையே தாக்கி முடப்படுத்தியது.  ஆனால் இந்தக் கொடிய கரோனா வைரஸ் உடலின் முக்கிய உள் உறுப்புகளை அழித்துவிடும். குறிப்பாக கல்லீரல், கணையம், நுரையீரல் போன்றவற்றை தாக்கி அழிக்கும். 

 


இதற்குப் பாரம்பரிய  இந்திய மருந்துகள் முந்தியே இருந்ததாகச் சொல்லப்பட்டது. இப்போதும் நாட்டின் பல பகுதிகளில் அவை நடைமுறையில் இருக்கின்றன.  நோயை கட்டுப்படுத்தவும் செய்கின்றன.  ஜெர்மானிய முறையான ஹோமியோ மருந்தில் பலர் குணம் அடைந்ததாக சொல்லுகிறார்கள்.

குஜராத்தில் ஏராளமான பேர் ஹோமியோ மருத்துவத்தில் குணம் அடைவதாக செல்லப்படுகிறது. சீனாவிலும் பாரம்பரிய மருந்தால் அதிகம் போர் குணம் அடைவதாக கூறப்படுகிறது.  இப்போது நாம் இந்தியா முழுவதும் கொடுத்துவரும் மருந்தை அமொரிக்காவுக்கும் கொடுத்துவருகிறோம். மேலும் அந்த மருந்தை தயாரிக்கும் காப்பு உரிமை இந்தியாவுக்கு மட்டும்தான் உண்டு.  ஆனால் இதிலும் கொடுமை என்னவென்றால் அண்மையில் இந்த மருந்து தயாரிக்கும் விதி முறைகளை அமெரிக்காவுக்கும் நம் அரசு கொடுத்ததாகத் தகவல்கள் இருக்கின்றன. 

 

 

 


இந்த மருந்தால் பக்கவிளைவும் உண்டு என விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். அண்மையில் தமிழகத்தில் பிரபலப்படுத்தப்படும் கபசுரக் குடிநீர் அரிய நோய் எதிர்ப்பு குணம் கொண்ட ரசாயனங்களினால் ஆன மூலிகையாகச் செயல்படுகிறது என்று தெரிகிறது. 

கரோனா தடுப்பு நடவடிக்கையில் இன்று காவல் துறையே முக்கியப் பங்கு வகிப்பதாகக் காண்கிறோம்.  ஊர்களை, தெருக்களை வேலியிட்டு அடைத்தல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றை இவர்கள் தீவிரமாக செய்து மக்களை சிரமத்துக்குள்ளாக்குகிறார்கள்.  இதற்குப்பதிலாக மருத்துவ அதிகாரிகள் தேவைப்படும் காவல்துறை ஊழியர்களுடன் ஊர் ஊராகப் போய் நோய் பரவலைக் கண் காணித்து உரிய நடவடிக்கை எடுக்கலாம். 

 

 


ஊரை அல்லது தெருவை அடைத்து மக்கள் இயல்பு வாழ்க்கையை சிரமப்படுத்துவதற்குப் பதிலாக ஊர் ஊராக மருத்துவக்குழுக்கள் சென்று பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களுக்குத் தக்க முறையில் மருத்துவ பரிசோதனை செய்து நோயை ஒடுக்குவதில் அதிக அக்கரை காட்டலாம்.  தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்.  சாதாரண மக்களை சிரமப்படுத்தாத வகையில் காரியங்களை முறைப்படுத்தாலாம்.  இன்று காய்கறி வாங்க, சாமான் வாங்க பிற தேவைகளுக்கு ஆட்டோவில் போக முடியாமல் சிரமப்படுகிறோமே. இதைச் சிரமமின்றி ஒழுங்குபடுத்தலாமே எனக்கு சைக்கிள் ஒட்டத்தெரியாது, பைக் ஓட்டத்தெரியாது. ஆட்டோவையே நீண்டகாலம் நம்பி வாழ்பவன்.  ஆட்டோ இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம்.

எந்த நோய்கும் மருந்து இல்லை என்பது இல்லை.  இது அறிவு பூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடியது தான்.  இப்போது ஆதிவாசிகள், பழங்குடி மக்கள், கிராமப்புற மக்கள் மூலிகைகளாலேயே நோய்களை குணப்படுத்துவதை பார்க்கிறோம்.  எனவே மருந்து இல்லை என்பதை மனித குலம் ஏற்று கொள்ள முடியாது. 

ஆனால் இக்கொடிய வைரஸ் நோய் ஏன் இவ்வளவு விரைவாகப் பரவுகிறது என்பதற்கு நாமே காரணமாக இருக்கிறோம் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.  விலங்குகளை, பறவைகளைக் கொல்லுவது, தாவரங்களை அழிப்பது, காடுகளை அழிப்பது போன்ற சீர்கேடுகளாலும் நமக்கு நாமே எதிரிகள் ஆகிறோம் என்பதும் உண்மை." இவ்வாறு தனது கட்டுரையில் கூறியிருக்கிறார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்