தமிழகத்திலுள்ள 6,600 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளில் 4,700 கிலோ மீட்டர் சாலைகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டிலும், 1,700 கிலோ மீட்டர் சாலைகள் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன. தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்காக சுமார் 6,000 ஆயிரம் கோடி ரூபாயை ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்குகிறது மத்திய அரசு.
மத்திய அரசின் நிதியில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளை தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையிலுள்ள "தேசிய நெடுஞ்சாலை அலகு' என்கிற பிரிவின் உயரதிகாரிகள்தான் கவனிக்கின்றனர். இந்த சாலைப் பணிகளுக்கான பல்வேறு நிலைகளில் பல ஒப்புதல்களை மத்தியமைச்சர் நிதின் கட்கரியின் மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் பெற வேண்டும். இதற்காக மாநிலத் தலைநகர்களில் மண்டல அலுவலகங்களை (ரீஜினல் ஆபீஸ்) வைத்திருக்கிறது மத்திய அரசு.
தமிழகத்தில் சென்னை பெசன்ட்நகர் ராஜாஜிபவனில் இயங்கி வருகிற மண்டல அலுவலகத்தின் உயரதிகாரியாக இருப்பவர் சூப்பிரன்டெண்ட் இன்ஜினியர் இளவரசன். இவர் உட்பட 3 நபர்களை கடந்த 4-ந்தேதி அதிரடியாக கைது செய்திருக்கிறது சி.பி.ஐ.! மூவர் மீதும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு (எப்.ஆர்.நெ. : ஆர்.சி.எம்.ஏ.1 2020ஏ 0002 ) புழல் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர் சி.பி.ஐ.அதிகாரிகள்.
சி.பி.ஐ. தரப்பில் விசாரித்தபோது, "சாலைப்பணிகளை மேற்கொள்ளும்போது சாலையின் இரு பக்கமுள்ள மின் கம்பங்கள், ட்ரான்ஸ்ஃபார்மர்கள், பைப்கள், கேபிள்கள் உள்ளிட்டவைகளை இடமாற்றம் செய்ய வேண்டியதிருக்கும். அப்படி மாற்றுவதற்கு தேவையான நிதிச் செலவினங்களுக்காக மத்திய மண்டல அலுவலக சூப்பிரன்டெண்ட் இன்ஜினியர் இளவரசனிடம் ஒப்புதலைப் பெற வேண்டும். இதற்காக இடமாற்றம் செய்யப்பட வேண்டியவைகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை இளவரசனுக்கு தந்து வருகிறார்கள். இதற்கான புரோக்கராக தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கோட்டப் பொறியாளராக இருந்த ஓவுரெட்டி என்பவர் நீண்ட நாட்களாக செயல்பட்டு வந்திருக்கிறார்.
மதுரை தேசிய நெடுஞ்சாலை வட்ட கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணசாமியின் கட்டுப்பாட்டில் உள்ள திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை கோட்டத்தில் 100 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் சாலைப் பணிகள் நடந்து வருகின்றன. வெற்றிவேல் என்பவரின் ஐ.வி.எல்.ஆர். நிறுவனத்துடன் இப்பணிகளுக்கான ஒப்பந்தம் செய்துள்ளது தமிழக நெடுஞ்சாலைத் துறை. இது தொடர்பான நிதி மதிப்பீடுகளுக்காக லஞ்சத் தொகையை, மதுரையிலிருந்து சென்னையில் உள்ள இளவரசனுக்கு கொண்டு வந்துள்ளார் புரோக்கர் ஓவுரெட்டி. இவருக்குத் துணையாக திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கோட்டப்பொறியாளர் முருகபூபதியும் வந்திருக்கிறார். பெசன்ட் நகரிலுள்ள மண்டல அலுவலகத்துக்குச் சென்று இளவரசனிடம் பணத்தைத் தரும்போது கையும் களவுமாக சி.பி.ஐ.யிடம் சிக்கினர். காண்ட்ராக்டர் வெற்றிவேலை தேடி வருகின்றது சி.பி.ஐ.
மூவரும் கைது செய்யப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு வரை தமிழக நெடுஞ்சாலைத்துறையின் தேசிய நெடுஞ்சாலை அலகு பிரிவின் தலைமைப் பொறியாளரான உயரதிகாரி சந்திரசேகரும், மதுரை வட்ட தேசிய நெடுஞ்சாலையின் கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணசாமியும் இளவரசனிடம் பல்வேறு விசயங்களை விவாதித்தபடி இருந்துள்ளனர். 5 நிமிடத்திற்கு முன்பு சந்திரசேகரும் கிருஷ்ணசாமியும் வெளியேறிவிட்டனர். துறையின் அமைச்சரான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த கைது விவகாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்கிறார்கள் சி.பி.ஐ.தரப்பில்.
நெடுஞ்சாலைத்துறையின் ஊழல்களை அம்பலப் படுத்தி வரும் "தேசிய மக்கள் சக்தி' என்ற அமைப்பின் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவியிடம் பேசிய போது, "நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் காண்ட்ராக்டர்களுக்குமிடையே புரோக்கர்களாக சில ஆலோசகர்கள் (கன்சல்டன்ட்) செயல்படுகிறார்கள். முன்பெல்லாம் இன்ஜினியர்களும் காண்ட்ராக்டர்களும் கூட்டு சேர்ந்து ஊழல் செய்தனர். இப்போது, ஆலோசகர்களும் இதில் இணைந்துள்ளனர்.
ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்ய வேண்டிய வேலைக்கு பல கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது. ஆட்சியாளர்களின் சிபாரிசால் ஆலோசனை ஒப்பந்தம் (கன்சல்டன்சி அக்ரிமெண்ட்) பெறும் இவர்கள், அரசியல்வாதிகள்-துறையின் உயரதிகாரிகள்- காண்ட்ராக்டர்கள் மூவருக்கும் ஊழல் பணத்தை பிரித்துக்கொடுக்கும் புரோக்கர்களாக செயல்படுகின்றனர். மண்டல அலுவலகத்திலுள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தால் பல அதிகாரிகள் சிக்குவர். ஊழல் அதிகாரிகள் சிக்கினாலும் தண்டிக்கப்படுவதில்லை. புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் சில நாட்களிலேயே பழுது ஏற்பட்டதால் 10-க்கும் மேற்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டனர். ஆனால், 2 வருடங்களாகியும் மேல் நடவடிக்கை இல்லை. இப்படி நிறைய ஊழல்கள் நடந்துகொண்டுதானிருக்கின்றன. வேறு மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர்கள் ஆய்வு செய்தால் ஊழல்கள் பூதாகரமாகும்'' என்கிறார்.
கோட்டையிலுள்ள தமிழக நெடுஞ்சாலைத்துறையினரிடம் விசாரித்தபோது, "கைது செய்யப்பட்டிருக்கும் புரோக்கர் ஓவுரெட்டி, மதுரை தேசிய நெடுஞ்சாலைக் கோட்டத்தில் கோட்டப்பொறியாளராக 2015 வரை பணியாற்றியவர். பணிக்காலத்தில் டெல்லியிலுள்ள மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு அடிக்கடி சென்று அங்குள்ள அதிகாரிகளை நெருக்கமாக்கிக் கொண்டார். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி தனது கோட்டத்துக்கு அதிக நிதிகளைப் பெற்றுக்கொண்டிருந்தார். அதில் பல ஊழல்கள் நடந்தன. இரண்டு குற்ற வழக்குகள் அவர்மீது இருந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இப்போதுவரை பணி ஓய்வு ஆணை வழங்கப்படவில்லை.
சஸ்பெண்ட் ஆனபோதும், டெல்லி தொடர்புகளை விட்டுவிடவில்லை. தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக கடந்த 5 வருடமாக நெடுஞ்சாலைத் துறைக்கும் மத்திய அமைச்சகத்துக்கும் பாலமாக இருந்து வருகிறார் ஓவுரெட்டி. மதுரை மாவட்டத்தை விட்டு அவர் வேறு எங்கும் செல்வதாக இருந்தால் நெடுஞ்சாலைத்துறை செயலாளரின் அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக ஓவுரெட்டி அனுமதியின்றி டெல்லி, சென்னை என செல்கிறார். உயரதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.
தேசிய நெடுஞ்சாலைகளுக்கு தடையின்றி அதிக நிதி ஒதுக்கப்படுவதால் சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து தேவையற்ற திட்டங்களை தயாரித்து அனுப்புகின்றனர். ஊழல் செய்வதற்காகவே தயாரிக்கப்படும் இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெறுவதற்காக ஓவுரெட்டியை எங்கள் துறையின் அதிகாரிகள் பயன் படுத்துகின்றனர். மத்திய அமைச்சகத்தின் அலுவலர்களும் ஓவுரெட்டியால் கவனிக்கப்படுவதால் அப்ரூவல் கிடைக்கிறது. தேவையற்ற திட்டங்கள் மூலம், அதிக நிதி கிடைத்தால்தான் லஞ்ச பணத்தின் அளவும் அதிகரிக்கும் என திட்டமிட்டே இந்த ஊழல்களை செய்து வருகின்றனர்.
பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், ஜே.ஆர். கன்சல்டன்சி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத் தை மத்திய வர்த்தகத்துறையில் பதிவு செய்திருக்கிறார் ஓவுரெட்டி. அதில் அவரும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஜான்சிராணி, சரவணக்குமார், சந்தோஷ்குமார் ஆகியோரும் இயக்குநர்களாக இருக்கின்றனர். ஓவுரெட்டியின் நிறுவனத்தைத்தான், "இன்ஜினியரிங் ப்ரொக்கியூர்மெண்ட் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்'’என்கிற ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு தங்களது ஆலோசகராக தமிழக நெடுஞ்சாலை அலகிலுள்ள அதிகாரிகள் நியமித்திருக்கிறார்கள். மேலும், நெடுஞ்சாலைப் பணிகளை மேற்பார்வையிடும் இன்ஜினியராகவும் ஓவுரெட்டியை நியமித்துள்ளனர் அதிகாரிகள். கிரிமினல் குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டவருக்கு இத்தகைய முக்கியத்துவம் தந்திருப்பதை எடப்பாடிக்கு தெரியாமல் மூடி மறைத்துள்ளனர்.
கன்னியாகுமரி-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பார்வதிபுரம், மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் சுமார் 320 கோடி ரூபாயில் இரண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டன. கடந்த வருடம் மக்களின் பயன்பாட்டுக்காக திறந்துவிடப்பட்டது. ஆனால், சில மாதங்களிலேயே அந்த மேம்பாலங்கள் மோசமானது. இந்த மேம்பாலங்களுக்கு அத்தாரிடி இன்ஜினியராக இருந்தவர் ஓவுரெட்டியின் மகன் சரவணக்குமார்.
மத்திய அரசு உயரதிகாரியான இளவரசன், லஞ்சம் வாங்குகிறார் என்பதை அறிந்த சி.பி.ஐ., தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்காணித்து லஞ்சம் கைமாறும்போது இளவரசன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்திருக்கிறது. உயரதிகாரி என்றாலும் கூட கைது செய்ய சி.பி.ஐ. தயங்குவதில்லை. ஆனால், இதே போன்ற ஊழல் புகார்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நிறைய போயிருந்தும் விசாரிக்கக்கூடப்படுவதில்லை'' என சுட்டிக்காட்டுகின்றனர்.
மத்திய அரசு மற்றும் மாநில அரசின் அதிகாரிகளை சி.பி.ஐ. கைது செய்துள்ள விவகாரத்தை மிக ரகசியமாக மூடி மறைத்து வருகிறது தமிழக நெடுஞ்சாலைத்துறை. இந்த விவகாரம் எடப்பாடிக்கு தெரியப்படுத்தப்பட்டும் நோ ஆக்ஷன்! கைது சம்பவம் நடக்கும் சில நிமிடங்களுக்கு முன்புவரை இளவரசனின் அறையில் இருந்த துறையின் உயரதிகாரிகளான சந்திரசேகரையும், கிருஷ்ணசாமியையும் விசாரித்தால் இந்த லஞ்ச விவகாரத்தில் மேலும் பல விவரங்கள் தெரியவரும். கடந்த 8 ஆண்டுகளாக தேசிய நெடுஞ்சாலை அலகில் நடந்துள்ள திட்டங்கள், அதன் மதிப்பீடுகள், டெண்டர் ஆவணங்கள், ஒப்பந்த ஆவணங்கள், தரக்கட்டுப்பாடு பதிவேடுகள், மத்திய அமைச்சகத்தோடு நடந்த கடிதப்போக்குவரத்துகள் என ஆராய்ந்தால் அதிர்ச்சிகரமான பல ஊழல் பூதங்கள் கிளம்பும் என்கின்றனர் நெடுஞ்சாலைத்துறையினர்.
இதுகுறித்து தலைமைப் பொறியாளர் சந்திரசேகரிடம் கேட்டபோது, "எஸ்டிமேட் சம்பந்தமாக இளவரசனை பார்க்கப் போயிருந்தோம். மற்றபடி நீங்கள் சொல்ற எந்த சம்பவத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை'' என்கிறார்.