மனித சக்தி அத்தனையையும் விட இயற்கை உயர்ந்தது, பலமானது என்பதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது உலகத்தில் ஒரு விஷயம் நடக்கும். இயற்கையாக நடக்கும் நிலநடுக்கம், சுனாமி போன்ற விசயங்களாகட்டும், அதையும் தாண்டி திடீரென உருவாகும் புதுப்புது நோய்களாகட்டும் மனிதர்கள் எவ்வளவு ஆயுதங்கள் வைத்திருந்தாலும் அதனை கட்டுப்படுத்த முடியாது என்கிற விசயத்தை ஞாபகப்படுத்துவதைப்போல நடக்கிறது.
அந்த மாதிரி சமீபத்தில் வந்திருப்பதுதான் கொரனா வைரஸ். இதற்கு முன்பு எந்த ஒரு தருணத்திலும் ஒட்டுமொத்த உலகமும் ஒரு விஷயத்தை பார்த்து பயந்த மாதிரி தெரியவில்லை. முன்பெல்லாம் உலகத்தில் ஏதோ ஒரு மூளையில் ஒரு நோய் வந்ததாக தகவல் வெளியாகும். அதனை பரவாமல் இருக்க அந்த நாடு நடவடிக்கை எடுக்கும். உலக நாடுகளும் உதவும். இப்போது பெரும்பாலான நாடுகளில் இந்த நோய் தாக்கப்பட்டுள்ளதால் அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
சீனாவில் இந்த நோயின் தாக்கத்தை குறைத்துவிட்டதாக சொல்கிறார்கள். இத்தாலியில் உயிரிழப்பு அதிகாமாகியிருக்கிறது. இதனை பார்த்து மற்ற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்தியாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தாலும் அதையும் தாண்டி கொரானா இந்தியாவுக்கு வந்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சிகிச்சை அளித்து வருகிறது.
இந்திய அரசு, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வதை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் இதனை பாராட்டியுள்ளார். முக்கியமாக அவர்கள் சொல்லுவது கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்திய அரசும், மாநில அரசும் இந்த நோய்க்கான அறிகுறி என்ன என்பதை விளக்கியுள்ளது. அந்த அறிகுறி இருந்தால் அலட்சியம் காட்டாமல் உடனே மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். தேவைப்பட்டால் அவர்கள் சொல்லும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நோய் மேலும் பரவாமல் இருக்க மக்கள் அதிகமாக கூடக்கூடாது என்கிறார்கள். இதனை கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும். சாப்ட் வேர் நிறுவனங்கள், சில கார்ப்பரேட் நிறுவனங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்று அவர்களது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனை பின்பற்றி அவர்கள் இல்லங்களில் வேலை செய்து வருகின்றனர்.
சென்னையில் பல இடங்களில் கூட்டங்கள் குறைவாக உள்ளது. இது நாம பார்த்த இடம்தானா என்கிற வகையில் தி.நகரெல்லாம் காலியாக இருக்கிறது. ரெங்கநாதன் தெருவில் அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. அந்த தெருவில் கிரிக்கெட் ஆடுகிறார்கள்.
இன்னொரு பக்கம் தினசரி வருமானத்தை வைத்துதான் சாப்பிட வேண்டும் என்பவர்களுக்கு இது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. தள்ளுவண்டி கடை வைத்திருப்பவர்கள், தினசரி கூலி வேலைக்கு செல்பவர்கள், முறையாக ஆர்கனைஸ் செய்யப்படாத தொழில் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள், அரசு ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் வந்துவிடும் என்கிற உறுதி இருக்கிறது. ஆனால் மில், சிறிய தொழிற்சாலைகள், தினசரி ஊழியர்களுக்கு இத்தனை நாட்களுக்கு ஊதியத்தை தங்களால் கொடுக்க முடியாது என்று சொல்கிறார்கள். அவர்களே தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் சாதாரண மனிதராக கொரானா உள்ள நிலையில் சில கேள்விகள் வருகிறது.
சென்னையில் பார்த்தீர்கள் என்றால் தமிழகம் முழுவதிலும் இருந்து படித்து முடித்த இளைஞர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் மேன்சனில் தங்கியிருப்பார்கள், தனியாக அறை எடுத்து நண்பர்களுடன் தங்கியிருப்பார்கள். அவர்கள் வாங்கும் சம்பளத்தில் வீட்டுக்கு அனுப்பணும் என்ற தொகை போக மீதியில் சாப்பிட வேண்டும், வாடகை கொடுக்க வேண்டும். அவர்கள் பெரும்பாலும் சாப்பிடுவது தள்ளுவண்டி கடைகள்தான். அந்த தள்ளு வண்டிகள் தற்போதுஇல்லை. தள்ளுவண்டியில் அவர்கள் சாப்பிட்டால் ஒரு இட்லி 5 ருபாய், கல்தோசை 15 ருபாய், தோசை 20 ருபாய், பொங்கல் 20, 25 ருபாயில் முடித்துவிடுவார்கள். இப்போது அவர்கள் கஸ்டப்படுகிறார்கள். ஒரு நாள், இரண்டு நாள் பெரிய பெரிய கடைகளில் சாப்பிட முடியும். 10 நாள்கள் சாப்பிட்டால் சம்பளம் பத்தாது என புலம்புகிறார்கள்.
இந்த வாடிக்கையாளர்களை வைத்துத்தான் அந்த தள்ளுவண்டிக்காரர்களும் பிழைப்பை நடத்துகிறார்கள். அவர்களும் தங்களுக்கு உதவிக்காக குறைந்தது இரண்டு பேர், 3 பேரை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். அவர்களும் இப்போது பணப்புழக்கம் இல்லாமல் கஸ்டப்படுகிறார்கள்.
வாடகை கார் ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் தற்போது பெரிய சவாரிகள் கிடைக்கவில்லை என்று வருத்தத்தில் உள்ளார்கள். சென்னை விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது, சென்னை சென்ட்ரல், எழும்பூர் வரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வாடகை கார் டிரைவர்கள் சவாரி இல்லாமல் மிகப்பெரிய கவலையில் உள்ளார்கள். 12 மணி நேரம் ஒரு நாளைக்கு ஓட்டினால்தான் தங்களுக்கு கட்டுப்படியாகும் என்று சொல்லும் நிலையில் சவாரியே கிடைக்காத நிலையில் என்ன செய்வதென்று விழிக்கின்றனர்.
ஈரோடு, திருப்பூர் நகரங்களில் உள்ள ஜவுளித் தொழில் முடங்கியிருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் தாங்கள் அனுப்பிய ஜவுளிகள் இன்னும் சென்றடையவில்லை. மீண்டும் ஆர்டர் வருமா என்று தெரியவில்லை என்கிறார்கள். அந்த நகரங்களில் தொழில் முடங்கியிருப்பதால் தினசரி தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.
சமீபகாலமாக இளைஞர்களுக்கு தொழிலாக இருக்கும் டெலிவரி பணிகளில் உள்ளவர்களுக்கும் வேலை குறைந்துள்ளது. உணவு டெலிவரி செய்யும் பணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கின்றனர். இப்போது ஆர்டர்கள் வருவது குறைந்துள்ளது. இப்படி பல்வேறு தொழில்களும் பணிகளும் முடங்கிய நிலையில் அதில் ஈடுபட்டுள்ளவர்களின் வருமானம் பாதிக்கப்படும் சூழ்நிலையில், சாதாரண குடிமகனாக நமக்கும் ஒரு கேள்வி எழுகிறது.
அனைத்துக்கும் விடுப்பு இருந்தாலும் மாதம்தோறும் கொடுக்கும் வீட்டு வாடகைக்கோ, EMIக்கோ, வட்டிக்கோ விடுமுறை இல்லை. ஒரு வேளை மார்ச் தாண்டியும் இப்படிப்பட்ட சூழ்நிலை தொடர்ந்தால் எப்படி எதிர்கொள்வது என சாதாரண மக்கள் கவலையில் உள்ளனர். கொரோனா ஒரு கவலை என்றால் அதற்கு இணையான கவலையாக இதுவும் இருக்கிறது.
சில நாடுகளில் அரசுகள் அடுத்த ஓரிரு மாதங்களுக்கு இது போன்ற விலக்கு அளித்துள்ளன. இத்தாலியில் தண்ணீர், கேஸ், மின்சாரம் போன்றவற்றிற்கு ஏப்ரல் வரை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் வங்கிகளில் கடன் தவணைகளை ஆறு மாதம் வசூலிக்கக்கூடாது என்று உத்தரவு போடப்பட்டுள்ளது. கேரளாவில் முதல்வர் வங்கிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தமிழகத்திலும் கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகளை கருத்தில் கொண்டு அனைத்து வகை வங்கிக் கடன் தவணைகளையும் 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும். இந்த காலத்திற்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இதுதொடர்பாக பொதுத்துறை வங்கி அதிகாரிகளை தமிழக முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பெ.மணியரசன், தமிழ்நாடு அரசு பேரிடர் கால வாழ்வூதியமாக குடும்ப அட்டை உள்ள குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் நாளொன்றுக்கு 500 ரூபாய் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசின் வழியாக ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் இத்தொகை செலுத்தப்பட வேண்டும். வங்கிக் கணக்கு இல்லாத குடும்பங்களுக்கு அவரவர்களுக்குரிய ரேசன் கடைகளின் வழியாக வழங்கப்பட வேண்டும். அதேபோல், அரசி, மண்ணெண்ணெய், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் வழங்கலை அரை மடங்குக் கூடுதலாக்கி, மானிய விலையில் வழங்க வேண்டும்.
விடுமுறை அறிவிக்கப்பட்ட சத்துணவு பெறும் மாணவர்களுக்கு கேரள அரசு செய்வதைப் போல், அம்மாணவர்களுக்குரிய சத்துணவை பாதுகாக்கப்பட்ட பொட்டலங்களில் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும். அம்மா உணவகங்களின் உணவு வழங்கல் அளவை இரட்டிப்பாக்கி, அதற்குரிய கூடுதல் ஊழியர்களையும் இக்காலத்தில் அமர்த்தி மானிய விலை அம்மா உணவகங்களைக் கூடுதலாக அமைப்பதற்கு சிறப்பு நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அரசு இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்து உதவ வேண்டுமென்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.