மணிப்பூர் விவகாரம் மற்றும் தற்கால அரசியல் குறித்துப் பல்வேறு கருத்துக்களை நம்மோடு திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி பகிர்ந்துகொள்கிறார்
பாஜகவினர் முழுமையாக ஊழலில் திளைத்தவர்கள். அதற்கான உதாரணமாக கமிஷன் வாங்கிக்கொண்டு கர்நாடகாவில் அவர்கள் கட்டிய பாலங்கள் இருக்கின்றன. மற்ற மாநிலங்களில் இவர்கள் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை. பாசிச பாஜக அரசின் கொடூரமான சுயரூபங்கள் இப்போது வெளிப்படுகின்றன. வட மாநிலங்களில் பாலமே கட்டாமல் கட்டியதாகக் கூறி இவர்கள் கமிஷன் அடிக்கிறார்கள்.
அண்ணாமலை தன்னைப் பெரிய மேதாவி போல் நினைத்துக்கொண்டு உளறுகிறார். 'இந்தியா' என்று எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குப் பெயர் வைத்தது பாஜகவுக்கு உறுத்துகிறது. அதனால்தான் இதை கிழக்கிந்தியக் கம்பெனியோடு மோடி ஒப்பிடுகிறார். தங்களுடைய திட்டங்களுக்கு இந்தியா என்கிற பெயரை வைத்து இதை ஆரம்பித்து வைத்தது பாஜக தான். இந்தியா கூட்டணியைப் பார்த்து மோடி பயத்தில் அங்கு உளறிக் கொண்டிருக்கிறார், அதையே அண்ணாமலை இங்கு செய்கிறார்.
கிழக்கிந்தியக் கம்பெனியோடு தொடர்பு வைத்திருந்தவர்கள் இவர்கள்தான். இரட்டை எஞ்சின் ஆட்சியில்தான் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது என்று அனைத்து ஊர்களுக்கும் சென்று பேசி வந்தார் மோடி. ஆனால் உங்கள் இரட்டை எஞ்சின் ஆட்சியின் லட்சணத்தை மணிப்பூரில் நாங்கள் பார்த்துவிட்டோம். மோடிக்கு மணிப்பூர் மக்களின் பிரச்சனையை விட அமெரிக்கா செல்வதுதான் முக்கியமாக இருக்கிறது என்று பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரே பேட்டி கொடுத்துள்ளார். மோடியின் தாமதத்தால்தான் பல்வேறு கொடூரங்கள் மணிப்பூரில் அரங்கேறின.
மணிப்பூர் பிரச்சனை குறித்து மோடி நாடாளுமன்றத்தில் பேச மறுக்கிறார். அதனால்தான் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீதான விவாதத்தின் போது மோடி நிச்சயம் பாராளுமன்றத்திற்கு வந்தாக வேண்டும். ஏற்கனவே அண்ணாமலை DMK Files என்கிற முதல் பாகத்தை வெளியிட்டார். இப்போது அதன் இரண்டாம் பாகத்தை வெளியிட்டுள்ளார். முதல் பாகத்தில் அவர் என்ன கிழித்தார்? ஊழல் பட்டியல் என்று சொல்லி பொதுவெளியில் இருக்கும் சொத்துப் பட்டியலைத்தான் அவர் வெளியிடுகிறார்.
தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எப்போதும் டெல்லியில் ஒரு மரியாதை உண்டு. அதையெல்லாம் கெடுக்கும் வகையில் அதிமுகவின் சி.வி.சண்முகம், மணிப்பூர் பற்றி எரியும் நிலையில் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்துப் புகார் கொடுக்கிறார். எதையாவது பேச வேண்டும் என்று இவர்கள் பேசுகிறார்கள். முதலமைச்சர் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகிறார். எந்தவிதமான குழப்பமும் இங்கு இல்லை. பாஜக மட்டுமல்லாமல் அதிமுகவினரும் இங்கு மதக்கலவரம் ஏற்பட வேண்டும் என்று நினைக்கின்றனர். இப்போது அதிமுக என்பது அமித்ஷா திமுகவாகத் தான் இருக்கிறது.