Skip to main content

எதிர்க்கட்சிகள் கூட்டத்தை தடுக்க முயன்ற அமித்ஷா- இள. புகழேந்தி விளக்கம்

Published on 26/06/2023 | Edited on 26/06/2023

 

 Ela Pugazhendi Interview

 

பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த அனைத்து எதிர்க்கட்சிக் கூட்டம் தொடர்பாக திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள. புகழேந்தியை சந்தித்து பல கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு.

 

அனைத்து எதிர்க்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் தங்களை பிரதமராக எண்ணித் தான் இருக்கின்றனர். அதனால் இந்த கூட்டத்தால் பின்னால் பிரச்சனை ஏற்படும் என்று ரவிசங்கர் பிரசாத் கூறுகிறாரே?

 

மோடியே மீண்டும் பிரதமர் வேட்பாளராக இருப்பாரா என்ற பிரச்சனையே அவர்களுக்குள் ஏற்பட்டது. அதுபோல எதிர்க்கட்சி தலைவர்கள் நேரம் வரும்போது பிரதமர் வேட்பாளரை அறிவிப்பார்கள். அதைப் பற்றி அவர்களுக்கு கவலை வேண்டாம்.

 

முதல் கூட்டத்திலேயே ஆம் ஆத்மி கட்சி திருப்தி இல்லாமல் வெளியேறினார்கள் என்று குறிப்பிடுகிறார்களே?

 

அந்த கூட்டம் முடிந்த பிறகு உணவருந்துவது மற்றும் பல பணிகள் இருந்ததால் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்று அந்த கட்சியினர் தெளிவாக கூறிவிட்டார்கள். அதனால் இவர்கள் என்ன வேண்டுமானாலும் கேள்வி கேட்பார்கள். அதை கண்டு கொள்ளாமல் இருப்பதே நல்லது.

 

அரசு அதிகாரிகளை ஆளுநர் நியமிக்கக் கூடாது என்று ஆம் ஆத்மி கோரிக்கையை காங்கிரஸ் செவி சாய்க்கவில்லை என்று கூறுகிறார்களே?

 

அதைத் தான் எங்களுக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை கலைத்து விட்டு பாசிச பாஜகவை ஒழிப்பது தான் ஒரே லட்சியம் என்று ராகுல் காந்தி கூறினார். அதையும் ஏற்று அரவிந்த் கெஜ்ரிவாலும் அந்த கூட்டத்தில் பங்கேற்று அவருடைய கருத்துகளை தெரிவித்து தான் சென்றிருக்கிறார்.

 

பாட்னாவில் தமிழக முதல்வருக்கு வரவேற்பு கிடைத்தது என்று நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் பீகாரில் ‘கோ பேக் ஸ்டாலின்’ என்று ட்ரெண்டாகி வருகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும், வானதி சீனிவாசனும் கூறுகிறார்களே?

 

பாட்னாவில் நடந்த கூட்டத்தில் தமிழக முதல்வரை எதிர்க்கட்சியினர் முன்னிலைப்படுத்தியதை தான் பாஜகவினர் ஆள்களை வைத்துக் கொண்டு இப்படி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பீகாரில் இருந்து புலம் பெயர்ந்த பல தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் மிகவும் நன்றாக இருக்கிறோம் என்பதை சொல்லிவிட்டார்கள். எனவே பாஜகவினர் ஸ்டாலினை எப்போது எதிர்க்கிறார்களோ அப்போதே இவர் மிக சக்தியாக இருக்கிறார் என்பதற்கு இதுதான் ஆதாரம்.

 

கோ பேக் ஸ்டாலின் என்ற ட்ரெண்ட் தமிழகத்திலும் வருவதற்கு காலம் வெகு தொலைவில் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகிறாரே?

 

இவர்கள் அமைச்சராக இருந்த காலத்தில் ஊழல் மிகுந்த ஆட்சியாக தான் இருந்தது. அதனால், இவர்கள் மு.க. ஸ்டாலினை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. பீகாரில் கலந்து கொண்ட முதல்வர் கருத்துகளுக்கு மிகப் பெரிய மரியாதை இருந்தது. அதை விட்டு அதிமுகவை போன்றவர்கள் பொய்யை பரப்பி கொண்டிருக்கிறார்கள். மேலும் அந்த கூட்டத்தில் தேர்தல் மட்டுமல்ல சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று முதல்வர் பேசியது இவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

 

கடந்த 5 ஆம் தேதி அன்று மருத்துவமனை திறப்பு விழாவில் ஜனாதிபதியை அழைத்தபோது அவர் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. இதற்கு தமிழக முதல்வரின் நடவடிக்கையை புறக்கணிக்கிறாரா என்ன காரணம் என்று தெரியவில்லை என மக்கள் குழப்பிப் போயிருக்கிறார்கள் என்று ஆர்.பி. உதயகுமார் கூறுகிறாரே?

 

தமிழக ஏழை மக்களுக்காகத் தான் இத்தகைய மருத்துவமனையே. அதனால் அதைப் பற்றியெல்லாம் மக்கள் கவலைப் படவில்லை. ஜனாதிபதியை அழைத்தபோது அவருக்கு வேறு பணி இருப்பதால் வரவில்லை என்று கூறிவிட்டார்கள். அதுமட்டுமல்லாமல் காவி கூட்டம் ஆட்சியில் இருப்பதால் தமிழ்நாட்டிற்கு எந்த வித நல்லதும் நடக்கக் கூடாது என்று இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள். மேலும் வார்த்தைகளை பார்க்காமல் செயல்களை பார்க்க வேண்டும். இந்த மருத்துவமனையை மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். அதனால், இவர்களுக்கு இதுபோன்ற கவலை வேண்டாம்.

 

பாட்னாவில் கலந்து கொள்ளாத கட்சிகள் அடுத்து சிம்லாவில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு இருக்கிறதா?

இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் பாட்னா கூட்டத்தை நடக்கவிடாமல் பல வேலைகளை அமித்ஷா தரப்பினர் செய்து வந்தார்கள். ஆனால் அதையும் மீறி அந்த கூட்டத்தில் 17 கட்சிகள் கலந்து கொண்டு வெற்றியும் அடைந்துவிட்டார்கள். ரெய்டு, அரசை நெருக்கடி செய்வது போன்ற செயல்களின் மூலம் இரண்டு, மூன்று கட்சிகள் இதில் கலந்து கொள்ளாமல் போனது. கலந்து கொள்ளாத கட்சிகள் கூட வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்ப்போம் என்ற ஒற்றை கருத்தை தான் முன் வைத்திருக்கிறார்கள் என்று அந்த கூட்டத்திற்கு தகவல்கள் சென்று விட்டது. அதனால், அடுத்த கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சியினரும்  கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அதிகமாக  இருக்கிறது.