Skip to main content

"கரோனாவைப் பரப்பாதீங்க!" - கொந்தளிக்கும் பள்ளி மாணவிகள் ! 

Published on 06/04/2020 | Edited on 06/04/2020

 

கண்ணுக்குத் தெரியாது; காற்றில் பரவாது. ஆனால், வாய் வழியாக, கை வழியாகப் பரவி மூச்சுப் பையை முடக்கி, ஆளைக் கொல்லும் அசுர வேகம் கொண்டது கரோனா வைரஸ்.பேரைக் கேட்டாலே உதறல் எடுக்கும் எனில்,அதன் தற்போதைய பெயர் கரோனா வைரஸ் தான்.கொத்துக் கொத்தாக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் உலகம் முழுவதும் இந்த நிமிடம் வரை மருத்துவப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.  
 

சமூகத் தொற்றாகப் பரவியதால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில், நோய் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. இந்தியாவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு  பாதிப்புகளை ஏற்படுத்தி, பலி எண்ணிக்கை 100 - ஐ தொடும் ஆபத்தான நிலைக்கு சென்று விட்டது . மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளே திணறும் போது, 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியா, கொரோனாவுக்கு எதிராகப் பெரும் போரையே தொடங்கியிருக்கிறது. 
 

கரோனா என்ற எதிரியை , களத்துக்குச் சென்று வீழ்த்தாமல் வீட்டுக்குள் இருந்தே வீழ்த்துவோம் என்ற தாரக மந்திரத்தை மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவைச் செயல்படுத்த அரசு எந்திரம் படாதபாடுபடுகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் அடங்காத எண்ணங் கொண்ட சிலர் பண்ணும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை. 
 

ரோட்டுக்கு சும்மா வந்தவர்களைக் காவல்துறை கெஞ்சி பார்த்தார்கள்,லத்தியால் அடித்துப் பார்த்தார்கள், தோப்புக்கரணம் போட வைத்தார்கள் ,தண்டால் போட வைத்தார்கள், ரோட்டில் நிற்க வைத்து சாவு மேளம் அடித்தார்கள், மரம் ஏற வைத்தார்கள், சாலையைப் பெருக்க வைத்தார்கள், வண்டியைப் பறிமுதல் செய்தார்கள்.ஆனாலும் என்ன, "அடங்குவோம் என்று நினைத்தாயோ?" என்ற கொள்கையில்  ரோடுகளைச் சுத்துற கூட்டம் இன்னும் ஒயவில்லை.  

 

chennai

                                                                நந்திதா காந்தி
         

இது போன்ற காட்சிகளைத் தினமும் பார்த்து வெறுத்துப் போன சென்னைப் பள்ளி (மாநகராட்சி) மாணவிகள் 2 பேர், தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி ஊர் சுற்றுபவர்களுக்கு எதிராக, ஆவேசமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார்கள்.வீட்டில் இருந்தபடியே, தங்களது பெற்றோரின் செல்போனில் பேசி வீடியோ வெளியிட்டார்கள்.அதில் அவர்கள் எழுப்பிய கேள்விகள் 'நறுக் நறுக்' கென்று அமைந்திருந்தது. ஹைலைட்டாக,இப்போது ரோட்டுல சுத்துற சில முட்டாள்கள் தான் உண்மையான கொரோனா வைரஸ் என்று கொந்தளிப்புடன் கூறியிருந்தார் ஒரு மாணவி. 

 

chennai

                                                                    நவ்யஸ்ரீ

அவர்கள் யார் என்று விசாரித்தால், சென்னை பெருநகர மாநகராட்சியால் "மாணவ சுகாதார தூதர்கள்" என்று அங்கீகரிக்கப்பட்டவர்கள்.கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுதலைத் தடுக்க இந்த மாணவிகள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தவர்கள். 
 

'சுத்தமான வீடுகள், சுகாதாரமான வீதிகள் 'என்ற பிரச்சார முழக்கத்தை முன்வைத்தார்கள்.அதிலும், 'என் வீதி என்ன, உன் கழிப்பறையா?' என்ற கேள்வியுடன் இந்த மாணவ சுகாதார தூதர்கள் செய்த டிஜிட்டல் பிரச்சாரமும், போஸ்டர்களும் சென்னையில் பரபரப்பாகப் பேசப்பட்டது. 

 

chennai


 

மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற இந்த மாணவ சுகாதார தூதர்களுக்கு சென்னையில் நடைபெற்ற மாநகராட்சி விழாவில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பரிசும், சான்றிதழும் வழங்கிப் பாராட்டினார். அதே மாணவிகளில் 2 பேர் தான் இப்போது கொரோனாவுக்கு எதிராகக் கொந்தளித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். 
 

நந்திதா காந்தி என்ற மாணவி 7 ம் வகுப்பும், நவ்யஸ்ரீ என்ற மாணவி 8ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.இவர்கள் இருவரும் சென்னை ஷெனாய் நகரில் உள்ள சென்னைப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இருவரும் படிப்பில் மட்டுமல்ல பேச்சுப் போட்டிகளில்  சிறந்து விளங்குபவர்கள். 


 

chennai



சுத்தமான சென்னை, சுகாதாரமான சென்னை என்ற பிரச்சாத்துக்குப் பேசியது போல, கொரோனாவுக்காக ஊரடங்கை ஆதரித்தும், பொதுமக்கள் வீட்டுக்குள் இருப்பதை வலியுறுத்தி முதல்வர்  பேசியதை வழிமொழிந்து வீடியோ வெளியிடுவதற்கும்,உந்துதலாக இருந்தவர் எங்கள் தலைமை ஆசிரியை 'சின்ன வெள்ளத்தாய்' என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அவர்கள் அந்த வீடியோவில் பேசும் வார்த்தைகளும், கேட்கும் கேள்விகளும் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.கரோனாவுக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்து மருத்துவர்கள்,சுகாதாரத் துறையினர்,உள்ளாட்சித் துறை ஊழியர்கள், காவல்துறையினர் பணியாற்றும் போது,இன்னும் பொறுப்பற்று இருப்பவர்களைச் சட்டத்தின் வழியாக அடைப்பது ஒரு புறம் இருந்தாலும், அவர்களின் மனசாட்சியைத் துளைக்கும் கேள்விகளை இந்த மாணவிகள் எழுப்பியதால், அவர்கள் பேசிய வீடியோ தமிழக உள்ளாட்சித் துறையால் விழிப்புணர்வு வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. 
 

இந்த வீடியோவை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர், பேஸ்புக், இண்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் வெளியிட்டார். பின்னர், செய்தி தொலைக்காட்சிகள் மட்டுமின்றி,அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத் தளங்களில் வைரஸை விட வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.