2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவின் காரணமாக அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு திடுக்கிடும் திருப்பங்களுக்கு பிறகு, பாஜகவின் பகீரத முயற்சியின் விளைவாக பிரிந்திருந்த ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் சேர்த்து வைக்கப்பட்டார்கள். அதற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்னும் இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த அதிமுகவுக்குள் கொஞ்ச காலம் எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல் ஒரு பிம்பம் ஏற்பட்டாலும், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என்ற இருவருக்கும் இடையே நீறு பூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருந்த அதிகாரப் போட்டி கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெரிதாக வெடிக்கத் தொடங்கியது.
எனவே கட்சியை வழிநடத்த ஒற்றைத் தலைமைதான் சரிப்படும் என்ற அதிரடியான முடிவெடுத்தார் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ். அதை செயல்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் பொதுக்குழு நடத்த ஒத்துக்கொண்ட ஓபிஎஸ், பின்னர் அந்த பொதுக்குழுவிற்கு பின்னால் இருக்கும் தனக்கு எதிரான சதித்திட்டத்தை புரிந்துகொண்டு பொதுக்குழுவை அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதலில் தள்ளுபடியான அந்த வழக்கு, பின்னர் ஓபிஎஸ்ஸின் மேல்முறையீட்டின் காரணமாக விசாரிக்கப்பட்டு சில நிபந்தனைகளுடன் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றம் விதித்த அந்த நிபந்தனைகள் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமானது போல் தோன்றியதால், ஓபிஎஸ்சும் அதற்கு சம்மதித்தார். எனவே திட்டமிட்டபடி கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூடியது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மேடையில் அமர்ந்தனர். அப்போது தமிழ்மகன் உசேன் அதிமுக அவைத்தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசுவதற்கு வந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மைக்கை பிடுங்கி, அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக சத்தமாகக் கத்தினார். அதேபோல கே.பி.முனுசாமியும் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். பின்னர் மறைந்த அதிமுகவினருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை செம்மலை வாசித்தார்.
அப்போது 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்துடனான ஒரு கடிதத்தை புதிய அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனிடம் சி.வி.சண்முகம் கொடுத்தார். “இரட்டை தலைமையால் திமுகவை எதிர்த்து வலிமையாகப் போராட முடியவில்லை. அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்பதையே பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர். அந்த கையெழுத்துத்தான் தமிழ்மகன் உசேனிடம் கொடுக்கப்பட்டது” என்றார் சி.வி.சண்முகம். பின்னர் பேசிய அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், ஜூலை 11ந் தேதி அடுத்த பொதுக்குழு நடைபெறும் என அறிவித்தார். அப்போது ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அத்துடன், இந்த பொதுக்குழு சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வருகிறது என குற்றம் சாட்டினர் ஓபிஎஸ் தரப்பின் வைத்திலிங்கம். அப்போது மைக் ஆஃப் செய்யப்பட மேடையில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஓபிஎஸ் மீது கூட்டத்தில் இருந்து தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. ஆனால், அதற்கு எந்த எதிர்வினையும் காட்டாமல் ஓபிஎஸ் தன் ஆதரவாளர்களுடன் வெளியேறிச் சென்றார்.
ஓபிஎஸ் வெளியேறிய கொஞ்ச நேரத்திலேயே அன்றைய பொதுக்குழு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. முதல் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டப்பட்டது. ஜூலை 11 ஆம் தேதி கூடிய அந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பொதுக்குழுவில் பங்கேற்காத ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் ஓபிஎஸ்ஸின் அந்த முயற்சி கலவரத்தில் முடிய பிரச்சனை நீதிமன்றம் சென்றது. அந்த வழக்கிலும் இபிஎஸ் பக்கமே வெற்றி கிடைத்தது. இதனால் கட்சியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த ஓபிஎஸ் ஜூலை 11 ஆம் தேதி அன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணையானது கடந்த ஆறு ஏழு மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா திடீரென மறைந்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த தொகுதியில் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டு தோல்வியை சந்தித்து இருந்த நிலையில், அதிமுகவின் எடப்பாடி தரப்பு தாங்கள்தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்கும் விதமாக தமாகாவிடம் அந்த தொகுதியை கேட்டு பெற்று அதிமுக போட்டியிடும் என்று அறிவித்தது. ஆனால் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று வரிந்து கட்டிய ஓபிஎஸ் தரப்பு, நாங்களும் போட்டியிடுவோம் என்று அறிவித்து வேட்பாளரையும் அறிவித்தது. இதனால் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்பதில் சிக்கல் ஏற்பட, இரட்டை இலையை எங்களுக்கே வழங்கி உத்தரவிட வேண்டும் என்று இபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் கோரினார். அதன் அடிப்படையில் கட்சியின் அவைத்தலைவர் பெரும்பான்மை உறுப்பினர்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளருக்கு சின்னத்தை வழங்கலாம் என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி அதன் மூலம் எடப்பாடி தரப்பு வேட்பாளரே அதிமுக வேட்பாளர் என்று அறிவித்தார். இதனால் அதிமுகவின் எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு இரட்டை இலையில் போட்டியிடும் சூழல் ஏற்பட்டதும், அதிமுகவின் ஓபிஎஸ் தரப்பு தங்களது வேட்பாளரை திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். இந்த சூழ்நிலையில் இன்று வெளியான அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று அறிவித்த உச்சநீதிமன்றம், அந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியின் பதவி செல்லும் என்றும், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் செல்லும் என்றும் பரபரப்பான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. மேலும் பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்கள்.
இதனால் அதிமுகவின் எடப்பாடி தரப்பு மிகுந்த உற்சாகம் அடைந்திருக்கிறது. மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்த 51 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்து உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, “இனிமேல் அதிமுக ஒரே அணியாக செயல்படும். திமுகவின் பி டீமாக செயல்பட்டவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள். நேற்று இரவில் இருந்து நிம்மதியாக தூங்க முடியவில்லை. இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை சந்திக்கும் என்றும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த இடைக்கால வெற்றி அவருக்கு எந்த அளவுக்கு கை கொடுக்க போகிறது, உச்சநீதிமன்றம் குறிப்பிட்டதன் அடிப்படையில் ஒருவேளை ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தால் எடப்பாடியின் இந்த வெற்றி நிலைக்குமா...? அல்லது தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் தோல்வியை சந்தித்தால் ஓபிஎஸ்சின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்..? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியும். என்றாலும், இந்த தீர்ப்புகள் எல்லாம் ஓர் இடைக்கால மாற்றங்கள்தான். அதிமுகவின் லகான் இன்னும் பாஜகவின் கையில்தான் இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் எந்த அளவுக்கு நட்போடு இருக்கப் போகிறார் என்பதை பொறுத்து அதிமுக என்கிற கட்சியின் நிலை எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.