சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது ஆட்சி குறித்து கடுமையாகப் பேசியிருந்தார். அதிமுகவை ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக திமுகவின் முக்கிய நிர்வாகி விஷ்ணு பிரபு அவர்களிடம் கேள்வியை முன் வைத்தபோது, " எடப்பாடி சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை, அதிமுகவை யாராலும் முடக்க முடியாது, ஏன் என்றால் அதை எடப்பாடி பழனிசாமியே செஞ்சி முடிச்சிடுவாரு. இவர் அடுத்த கட்சியைப் பற்றி குற்றம் சொல்லுகிறார், ஏகடியம் பேசுகிறார். அவர் அரசியலுக்கு வரலாமா? இவர் அரசியலுக்கு வரலாமா? என்று கேள்வி எழுப்புகிறார்.
நன்றாகப் பாருங்கள், எடப்பாடி பழனிசாமி 2021ல் பதவியிலிருந்து கீழே இறங்கிய பிறகு அதிமுகவின் நிலையை நினைத்துப் பாருங்கள். ஒருவர் பின் ஒருவராக அணி அணியாகப் பிரிந்து செல்கிறார்கள். இவரைப் பன்னீர்செல்வமே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். டிடிவி வெளியேறுகிறார், அதிமுக என்ற கட்சியே பிளவுபட்டு இருக்கிறது. ஆனால் எங்களுக்கு வரும் கூட்டத்தைப் பார்த்தீர்களா; நாங்கள் தான் எல்லாம்; உங்களை எல்லாம் ஒன்றும் இல்லாமல் ஆக்குவோம் என்று மேடைகளில் வீண் சவடால் விட்டு வருகிறார். வரும் தேர்தல் வரைக்கும் இந்த காட்சிகள் எல்லாம் தொடர்ந்து நடக்கும். தேர்தல் நடந்து முடிந்தால் அப்புறம் எடப்பாடி வாய்திறக்க எதுவும் இருக்காது. ஓரமாக அமர்ந்துகொள்ள வேண்டிய நிலைதான் அவருக்கு வரப்போகிறது.
எடப்பாடி அதிமுக பிளவுபடவில்லை என்று சொல்கிறாரே என்று கேட்கிறீர்கள். தினமும் எத்தனை பேர் திமுகவில் இணைந்து கொள்கிறார்கள் என்று பாருங்கள். முதல்வர், அமைச்சர்களை சந்தித்துத் தொடர்ந்து அதிமுகவினர் திமுகவில் சேர்ந்து வருகிறார்கள். அதிமுக வேடந்தாங்கல் பறவை என்பதெல்லாம் சொல்வதற்கு நன்றாக இருக்கும்., ஆனால் இவர்கள் இருவரிடமே எந்த செயல்திறனும் இல்லை என்ற நிலையில் இவர்கள் கட்சியை எங்கே காப்பாற்றப் போகிறார்கள். தங்களுக்குள் பதவி சண்டை போட்டுக்கொள்வதற்கும், பங்கு பிரித்துக்கொள்வதற்குமே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்குமே தவிர அவர்கள் இருவருக்குமே கட்சியை வளர்க்க வேண்டும்; ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் அறவே இல்லை. அவர்களால் எப்போதும் முடியாது என்பதும் உண்மை" என்றார்.