தினகரன் வெற்றிக்கு காரணம் குக்கர்தான்: விஜயதாரணி எம்.எல்.ஏ.,
பெண்களின் அன்றாட வாழ்வில் இரண்டற கலந்த குக்கர் சின்னத்தை தேர்வு செய்ததால்தான் தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு குறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதாரணி,

செயல்படாத ஆளும் கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தார்கள். ஆளும் கட்சியின் பல்வேறு முறைகேடுகள் குறித்தும், திமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்தோம்.
இதேபோல் டிடிவி தினகரன் அணியினரும் ஆளும் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். ஆனால் அவர்கள் தேர்வு செய்த சின்னம் குக்கராகிவிட்டது. தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் மனதில் குறிப்பாக பெண்களின் அன்றாட வாழ்வில் இரண்டற கலந்த குக்கர் சின்னத்தை தனது அரசியல் சாதூர்யத்தை பயன்படுத்தி தேர்வு செய்துவிட்டார். அந்த பகுதி மக்களுக்கு அந்த சின்னம் ஆழமாக பதிந்துவிட்டது. அவர் வெற்றிபெற எளிதாகிவிட்டது.
தேர்தல் களத்தில் நடந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். போட்டிபோட்டு பணப்பட்டுவாடா நடந்துள்ளது. ஒரே நாளில் 100 கோடிக்கு மேல் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. பணப்பட்டுவாடா புகாரை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. இதில் உண்மையான வெற்றியை திமுக வேட்பாளர் பெற்றுள்ளார். அந்த நேர்மையான வேட்பாளருக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறினார்.
-வே.ராஜவேல்