தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த மாதம் 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில வாரங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்நிலையில் மூத்த மருத்துவர் கருணாநிதி இதுதொடர்பான நம்முடைய கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அவை வருமாறு,
சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உடலில் ரத்தக் காயத்தோடு அரசு மருத்துவமனைக்குக் காவல்துறையினர் பென்னிக்ஸ் மற்று ஜெயராஜ் ஆகிய இருவரையும் கொண்டு செல்கிறார்கள். அவர்களைச் சோதித்த அரசு மருத்துவமனை மருத்துவர் அவர்கள் உடலில் காயங்கள் அதிகம் இருப்பதால் அவருக்கு சர்டிபிகேட் கொடுக்க மறுத்துள்ளார். பிறகு அவர்கள் மருத்துவரை மிரட்டி காயம் குறைவாக இருப்பதாக சர்டிபிகேட் வாங்கிச் சென்றுள்ளனர். இந்த விவகாரத்தை எப்படிப் பார்க்க வேண்டும், என்ன நடைமுறையைப் பின்பற்றியிருக்க வேண்டும்?
மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்ட ஒருவர் எவ்வளவு விரைவாகச் செல்கிறார் என்பது மிக முக்கியமான ஒன்று. காவல்துறையினர் அவர்கள் இருவரையும் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றால், போலீஸ் அவர்களை அடித்து அழைத்துச் செல்கிறார்கள் என்று நாம் அனைவரும் சந்தேகப்பட்டிருப்போம். அவர்கள் தனியார் காரில் அவர்களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதுவே சி.பி.ஐ. அவர்களை விசாரிக்க போதுமான காரணமாக உள்ளது. என்ன நடைபெற்றிருக்கும் என்று நம்மால் அதை ஊகிக்க முடியும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளும் அதனைக் கருத்தில் கொள்வார்கள்.
மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் இருந்து நேராக எமர்ஜென்ஸி வார்டுக்குக் கொண்டு வரப்படுவார்கள். அதற்குப் பெயர்தான் ஈஆர். அந்த எமர்ஜென்ஸி வார்டில் இருக்கும் நிமிடங்கள் 'கோல்டன் ஹவர்ஸ்' என்று சொல்வார்கள். நோயாளிகளுக்கு இரத்தம் தேவைப்பட்டால் ஏற்றுவார்கள், காயங்களைக் கண்டறிந்து தையல் போடுவார்கள், அவர்களைக் காப்பாற்ற என்வெல்லாம் செய்ய வேண்டுமோ அது அனைத்தையும் செய்வார்கள். அவசரச் சிகிச்சை பிரிவில் பல்வேறு வேலைகள் மருத்துவர்களுக்கு இருக்கிறது. அங்கு மெடிக்கல் அனுபவம் என்பது அதிகம் தேவைப்படும். கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் அதிகம் தேவைப்படும். அனைவரும் பதட்டமாக இருப்பார்கள். எனவே இந்த விஷயங்கள் அனைத்தும் தேவைப்படும்.
எமர்ஜென்சி வார்டில் மருத்துவர்கள், நர்ஸ், டெக்னீஷியன் இருப்பார்கள். மருத்துவர்களுக்கு தேவையான உதவியை அவர்கள் செய்வார்கள். இந்த எமர்ஜென்ஸி டிபார்மெண்டில்தான் பயிற்சி மருத்துவர்களை அதிகம் பயன்படுத்துவார்கள். அவர்களைக் குட்டி டாக்டர் என்று கூட சொல்லலாம். அவர்கள் அங்கிருந்துதான் அனுபவம் பெறுவார்கள். அங்கு நிறைய கற்றுக்கொள்ளலாம். இந்த மாதிரி ஒரு சம்பவம் அவர்களுக்கு ஏற்படுகிறது என்று வைத்துக்கொண்டால் அவர்கள் பயப்படுவார்கள். என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியாது. அப்போது அவர்களின் மூத்த மருத்துவருக்கு போன் செய்து வரச் சொல்ல வேண்டும். இது அவர்களின் உரிமை. வர வேண்டியது அந்த மருத்துவர்களின் கடமை. எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் இந்த மாதிரியான எமர்ஜென்ஸி கேஸ்களுக்கு ஒரு பிரச்சனை வருகிறது என்றால் மூத்த மருத்துவர்கள் அங்கே வர வேண்டும். எனவே சுயமாக முடிவு எடுக்க பயமாக இருந்தால் இந்த மாதிரியான உதவிகளை அவர்கள் நாடலாம், என்றார்.