எழுத்தாளர் மதிமாறன் ஒரு நிகழ்ச்சியில் உணவில் ஜாதி இருக்கிறது என சில எடுத்துக்காட்டுகளை கூறினார். அதில் தோசை சுடுவதிலேயே சாதிபேதம் இருக்கிறது என கூறினார். இந்த கருத்து நேற்று ட்விட்டரில் விவாதப்பொருளானது. அஞ்சான் பட சமயத்தில் இயக்குநர் லிங்குசாமி ‘கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கியிருக்கேன்’ என கூறியதுமுதல் இன்று மதிமாறன் கூறியது வரை அவ்வப்போது யாராவது ஒருவரின் கூற்று ட்விட்டரில் ட்ரெண்டாகும். மதிமாறன் கூற்றுக்கு ஆதரவாகும், எதிராகவும் பல மீம்ஸ்கள், கருத்துகள் ஆகியவை ட்விட்டரில் வலம் வருகின்றன. மதிமாறன் கூறியது என்ன?
ஒரு உணவை சாப்பிடுவதில் இந்த சாதி கண்ணோட்டம் எல்லாம் சேர்ந்திருக்கிறது. குறிப்பாக காரைக்குடியில் சைவம், அசைவம் இரண்டு வகைகளிலும் இரண்டு பிரிவுகள் உள்ளன, விதவிதமாக சமைப்பதில். சைவ உணவில் விதவிதமாக சமைப்பது பிராமணர்கள் ஐயர் உணவகங்களில் சாப்பிட்டால் சைவ உணவுகளில் விதவிதமாக சாப்பிடமுடியும். தோசையிலும் சாதி உள்ளது. சாதி, வர்க பின்புலம் உயர,உயர அல்லது குறைய, குறைய தோசை அளவும் மாறும். பிராமணர்கள் தோசைகளில் பல விதமாக சுடுவார்கள். ஆதிக்க சாதிக்காரர்களின் வீடுகளில் சுடும் தோசை மெல்லியதாக இருக்கும். அதிலும் அவர்கள் தோசையை திருப்பி போடமாட்டார்கள் அப்போதுதான் தோசை ருசியாக இருக்குமென்று. சாதியும், வர்க்கமும் கீழே இறங்க, இறங்க தோசையின் அளவு அதிகரித்துக்கொண்டே வரும்.
இங்கு சாதி ரீதியாக உணவு பழக்கவழக்கங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன, உணவு தயாரிப்புமுறைகளிலும் கூட. எளிய குடும்பங்களில் உழைக்கும் பெண்களுக்கு நேரம் கிடையாது, வருமானமும் கிடையாது. உபரியான நேரமும், உபரியான வருமானமும் எங்கு அதிகமாக உள்ளதோ அங்குதான் விதவிதமாக சமைத்து சாப்பிடுவார்கள். நிறைய சம்பாதித்து அந்த பணத்தில் என்ன விதவிதமாக சாப்பிடலாம் அப்படினு கணவர் விரும்பினார் என்றால், அந்த வீட்டுப் பெண்ணின் முழுநேர வேலை சமையல் செய்வது மட்டுமே. தாழ்த்தப்பட்ட, உழைக்கும் வர்கத்தை சேர்ந்த பெண்கள் சமுதாயத்தில் அது கிடையாது. காலையில் அவர் வேலைக்கு சென்றார் என்றால் கூடவே இந்த அம்மாவும் செல்வார்கள். திரும்பி வந்தால் சமையல் செய்வதற்கு நேரம் கிடையாது, அதுகுறித்து சிந்தனை கிடையாது. உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று இருக்கும்போது கடையில் எதையோ வாங்கி அவசரத்திற்கு ஒரு ரசம் வைத்து சாப்பிடுவார்கள் அவ்வளவுதான் ஏனென்றால் அவர்களுக்கு நேரம், பணம் கிடையாது சமைப்பதற்கு. உழைத்தது போக ஓய்வு நேரத்தில்தான் அவர்கள் சமையல் செய்வார்கள் அதனால் சமையல் குறித்த சிந்தனை கிடையாது அவர்களிடம்.
உழைப்பு குறையும், உபரி வருமானம் கூடும் இடங்களில்தான் விதவிதமான சமையல் வரும். ஆதிக்க சாதி வீட்டில் இருக்கும் பெண்கள் வேலைக்கு போவதில்லை, வீட்டிலேயேதான் அவர்கள் இருக்கின்றனர். அதனால் அவர்களின் சிந்தனை மொத்தமும் சமைப்பதில்தான் இருக்கும். தினமும் காலையில் எழுந்தவுடன் இன்றைக்கு என்ன சமைக்கலாம் என்றுதான் அவர்கள் சிந்திப்பார்கள். ஐயரோ, ஐயங்காரோ வந்தாரென்றால் அவருக்கு நேற்று வைத்ததையே செய்தால் கோபம் வரும். அதனால் தினமும் விதவிதமாக சமைக்க தொடங்கினர். இதனால் சைவ உணவில், இனிப்பிலிருந்து அனைத்திலும் நிறைய வகைகள் வந்தன. அப்படியேதான் அசைவத்திலும் நிறைய விதங்களும், வகைகளும் இருப்பது நாட்டுகொட்டை செட்டியாளர்களிடம். அவர்களுக்கு என்ன கவலை என்றால் செட்டியார் வரும்போது, அவர் நேற்று கோழி சாப்பிட்டார், இன்றும் அதையே வைக்கக்கூடாது என விதவிதமாக சமைக்கத் தொடங்கினர். இப்படியாகதான் தமிழ்நாட்டில் சைவ வகை என்றால் பிராமணர்களும், அசைவ உணவென்றால் நாட்டுகொட்டை சமூகமும் பிரசித்தி பெற்றனர்...