Skip to main content

திருடர்களிடம் தப்பிய தீர்த்தங்கரர் சிற்பம்!

Published on 22/10/2018 | Edited on 22/10/2018
Sculpture



புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஆத்தங்கரைவிடுதி ஊராட்சிக்குட்பட்ட  கீழ வாண்டான் விடுதியில், மிகச்சிறிய அளவிலான பத்மபிரபர் சிற்பமும், நம்பிராஜன் குடும்பத்தினரால் சிவனார் என்ற பெயரில் வழிபாட்டிலுள்ள  மகாவீரர்  சிற்பமும், சமணப்பள்ளி கட்டுமானமும் தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன், தலைவர் ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், மரபு நடை ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரி ரங்கன், உறுப்பினர்கள் கண்ணன்  ரமேஷ்குமார்,ஆத்தங்கரைவிடுதி உயர்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர்கள் பழனிசாமி , கண்ணன் ஆகியோரடங்கிய குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன், கந்தர்வகோட்டை பகுதியின் வரலாற்றை தொகுக்கும் பணியின்போது இந்த சமணப்பள்ளி அடையாளம் காணப்பட்டது.
 

அக்னி ஆறும் சமணமும்

அக்கினி ஆறு புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பெரிய குளத்தில் இருந்து 78 கிலோ மீட்டர் வரை பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது , இது  அஞ்ஞான விமோச்சனி என அழைக்கப்பட்டுள்ளது அஞ்ஞானத்திற்குரிய இணையான சொல் அக்கியானி ஆகும். இச்சொல் மருவி அக்னி ஆறாக மாற்றம் பெற்றிருக்கும் என அனுமானிக்க முடிகிறது. 

சமணக்கொள்கையோடு ஆற்றின் பெயர் உள்ளதும்,  இவ்வாற்றுப்படுகையில் உள்ள வாழமங்கலம் , மங்கத்தேவன் பட்டி , மோசகுடி , கோவில் வீரக்குடி , செம்பாட்டூர், புத்தாம்பூர் , உள்ளிட்ட ஊர்களில் சமணத்தடயங்கள்  உள்ளதும் தற்போது கீழ வாண்டான் விடுதியில் சமணப்பள்ளி அடையாளப்படுத்தபட்டிருப்பதும் புதிய வரலாற்று ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் என நம்பலாம். 
 

சமணப்பள்ளி அமைவிடம் 
 

கீழ வாண்டான் விடுதி மற்றும் மேல வாண்டான் விடுதி எல்லையிலுள்ள அக்கினி ஆற்றின் தென் புறமுள்ள சிவனார் திடலில்  சுமார் 97 சென்ட் பரப்பளவில் 200 அடி  நீள அகலத்துடன் இந்த தொல்லியல் மேடு அமைந்துள்ளது. இங்குள்ள செங்கல் 17x  16x 3 செ.மீ , 22 x 13.5x 4 செ.மீ, 24x 12x3  செ.மீ  என்ற அளவுகளில் உள்ளன.   இவை கங்கை கொண்ட சோழபுரத்தின் மாளிகை மேட்டில் இருந்த செங்கல் அளவுகளோடு ஒத்துள்ளது. இது முழுக்க செங்கல் மற்றும் களிமண் கொண்ட கட்டுமானமாக இருந்துள்ளதால் பத்தாம் நூற்றாண்டு கட்டுமானமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. இச்சமணப்பள்ளி  பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்டுள்ளது 
 

கீழ வாண்டான் விடுதி மகாவீரர்
 

சிவனார் என்ற பெயரில்  வழிபாட்டிலுள்ள சிற்பம் ஐந்து அடி உயரம் மூன்று அடி அகலம் கொண்டதாக உள்ளது.  இது சமண சமயத்தின் இருபத்து நான்காவது   தீர்த்தங்கரரான  மகாவீரர் திருமேனி என அடையாளங்காணப்பட்டுள்ளது. இச்சிற்பம் திகம்பரராக, தியான கோலத்துடன்,  சுருள் முடி தலையுடனும், திறந்த கண்கள், நுனியில் சிறிது சேதமடைந்த மூக்கு , நீண்ட துளையுடைய காதுகள் , புன்முறுவலுடன் கூடிய உதடுகள் ,  விரிந்த மார்புடன்  அமர்ந்த நிலையில், தலையின்  பின்புறமாக முக்காலத்தையும் உணர்த்தும் விதமாக ஒளிவீசும் பிரபா வளையமும்,  மேற்பகுதியில் சந்திராதித்தம் , நித்த விநோதம் , சகல பாசானம் எனும்     முக்குடையும் , பின்புலத்தில்  குங்கிலிய மரமும்  சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் இருப்பதாக வடிக்கப்பட்டுள்ளது,    இச்சிற்பத்தின் முக்கிய அடையாளமான  சிங்க முத்திரை கட்டுமானத்தில் மறைந்துள்ளது.
 

மிகச்சிறிய தீர்த்தங்கரர் சிற்பம் 
 

அடையாளங்காணப்பட்ட மிகச்சிறிய அளவிலான மற்றொரு சிற்பம்  17  சென்டிமீட்டர்   உயரம் கொண்டதாகவும் ,  தலை சிதைந்த நிலையில், தாமரை மேல் அமர்ந்த தியான  நிலையிலுள்ளது, இது ஆறாவது தீர்த்தங்கரரான   பத்ம பிரபராக இருக்கலாம். எனினும் பெரும்பாலும் மகாவீரர் மற்றும் ஆதிநாதரின் சிற்ப தொகுதிகளே வழிபாட்டிலிருந்துள்ளதாலும், தென் கயிலையில் தாமரை மீது அமர்ந்த நிலையில் ஆதிநாதர்   தவமிருந்ததாக சொல்லப்படும் சான்றுகள் மூலம் முதலாம் தீர்த்தங்கரரான ஆதிநாதர் சிற்பமாகவும் இருக்கவும்  வாய்ப்புள்ளது. 
 

சிற்பத்தின் வலப்புறம் அமைந்துள்ள இயக்கியர் சிற்பம் 3 சென்டிமீட்டர் அளவில் மிக நுணுக்கமாக  மண்டியிட்டவாறு சாமரத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. இடப்புறம் உள்ள இயக்கியரின் சிற்பம்  சிதைந்துள்ளது. 
 

தாமரை மலரின் காம்பிலிருந்து இரண்டு புறமும்  கீழ்ப்புறமாக சுருண்ட கொடி அமைப்புகள் காட்டப்பட்டுள்ளது. இதில்  மண்டியிட்டு கை கூப்பிய நிலையில் தனித்தனியாக நான்கு  மனித உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 
 

திருடர்களிடம் தப்பிய சிற்பம் 
 

      சிவனார் மேட்டிலிருந்த  சிற்பம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே திருடர்களால் மாட்டு வண்டி மூலம் கடத்திச் சென்றபோது  திடீரென்று வண்டி மாடுகள் மயக்கமடைந்ததாலும்  அவர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவாலும், உயிர் பயத்தால்,  சிற்பத்தை வயல் வெளியில் தூக்கி வீசிவிட்டு வண்டி மாட்டை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட அதனை அவ்வூர் அம்பலக்காரர் தனது பாதுகாப்பில் வைத்திருந்தாகவும் . பிறகு  நம்பிராஜனின் குடும்பத்தினர் கேட்டு பெற்று வந்து அதனை சிறு கோயிலாக எழுப்பி வழிபடுவதாக கூறுகின்றனர்.
 


   இது போன்ற நம்பிக்கை கதைகளே பல சிற்பங்களுக்கு காவலாக இருந்து வருகிறது என்றார்.

 

 

 

 

Next Story

1,200 ஆண்டுகள் பழமையான திருமால், வைஷ்ணவி சிற்பங்கள் கண்டெடுப்பு!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
1,200-year-old Tirumal, Vaishnavite sculptures discovered in virudunagar

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகில் அம்மாபட்டி ஊராட்சி, களத்தூரில் 1,200 ஆண்டுகள் பழமையான முற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் உள்ள திருமால், வைஷ்ணவி, லிங்கம், நந்தி, காளி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. களத்தூர் அர்ச்சுனா ஆற்றின் கரையில், பழமையான திருமால் சிற்பம் இருப்பதாக அம்மாபட்டி வீரையா கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கூறியதாவது, “திருமால், மாயோன் என தொல்காப்பியத்திலும், நெடுமால், நெடியோன், நெடுமுடி என பிற இலக்கியங்களிலும் குறிப்பிடப்படுகிறார். இங்கு பீடத்தின் மீது அமர்ந்த நிலையில், நான்கு கைகளுடன், கர்த்தரி முக முத்திரையில், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளை தொடையில் வைத்து, கிரீட மகுடத்துடனும், காதுகளில் மகர குண்டலங்களுடனும் திருமால் காட்சியளிக்கிறார். முகம் தேய்ந்துள்ளது. சக்கரம் பக்கவாட்டில் திரும்பி பிரயோகச் சக்கரமாக உள்ளது. இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது மார்பில் ஸ்ரீவத்ஸமும், கிரீடமகுடத்தின் பின்பக்கம் சிரச்சக்கரமும் உள்ளன. கைகளின் மேற்பகுதியின் நடுவில் தோள்வளை அணிந்துள்ளார். சிற்பம் 109 செ.மீ உயரமுள்ளது.

இதன் அருகில் 82 செ.மீ உயரமும், 46 செ.மீ அகலமும் உள்ள பலகைக் கல்லில் திருமாலின் பெண் சக்தியான வைஷ்ணவியின் புடைப்புச் சிற்பம் உள்ளது. சப்தகன்னியரில் ஒருவரான இவர், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளை தொடையில் வைத்திருக்கிறார். சிற்பம் சேதமடைந்துள்ளது. இதன் வடக்கில் நந்தியும், ஆவுடை இல்லாத லிங்கமும் உள்ளன. இங்கிருந்து 300மீ தூரத்தில் 2½ அடி உயரமுள்ள எட்டுக்கை காளி சிற்பம் உள்ளது. திருமால் கையிலுள்ள பிரயோகச் சக்கர அமைப்பு மூலம், இச்சிற்பங்கள் கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். அக்காலகட்டத்தில் இவ்வூரில் அருகருகே சிவன், திருமால், காளி கோயில்கள் இருந்துள்ளதை அறிய முடிகிறது. கி.பி.9-ம் நூற்றாண்டு வரை வைணவக் கோயில்களில் சப்தமாதர் வழிபாடு இருந்துள்ளது. 

1,200-year-old Tirumal, Vaishnavi sculptures discovered in virudunagar

அருகிலுள்ள மேட்டில் பெரிய கருங்கற்கள் உள்ளன. இவை இரும்புக்காலத்தைச் சேர்ந்த கல்வட்டம், கல்திட்டையின் கற்களாக இருக்கலாம். இதில் இருந்த கற்களை எடுத்து லிங்கத்தைச் சுற்றி வைத்துள்ளனர். மேலும் நுண்கற்காலக் கருவி, செங்கற்கள், சிவப்பு பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக்கசடுகள், சுடுமண் ஓடுகள் போன்றவையும் அங்கு சிதறிக் கிடக்கின்றன. ஒரு செங்கலின் அளவு, நீளம் 33 செ.மீ, அகலம் 16.5 செ.மீ, உயரம் 7 செ.மீ. ஆகும். இதன் மூலம் இவ்வூரில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புக் காலத்தில் இரும்பு உருக்கு உலையும், மக்கள் குடியிருப்பும் இருந்துள்ளது எனலாம்.  

1,200-year-old Tirumal, Vaishnavi sculptures discovered in virudunagar

இவ்வூருக்கு அருகிலுள்ள நத்தம்பட்டி, மங்கலத்துக்கும் வைணவம், சைவம் சார்ந்த தொடர்புகள் உள்ளன. மங்கலம் சிவன் கோயில் கல்வெட்டில் களத்தூர் குளத்தின் ராஜேந்திர சோழன் மடை குறிப்பிடப்படுகிறது. நத்தம்பட்டியில் 8-ம் நூற்றாண்டு திருமால் சிற்பம் ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அருகருகே உள்ள இம்மூன்று ஊர்களிலும் இரும்புக் காலத்திலும், வரலாற்றின் இடைக்காலத்திலும் மக்கள் வாழ்ந்துள்ளனர். இவ்வூர்கள் சேரநாட்டிலிருந்து மதுரை செல்லும் வணிகப் பெருவழியில் உள்ளன. எனவே வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் இடங்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

10- ம் நாற்றாண்டு முல்லை நிலக் கடவுள் மாயோன் சிற்பம் கண்டெடுப்பு

Published on 31/01/2022 | Edited on 31/01/2022

 

10th Century God Mayon Sculpture Discovery!

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் 1,200 ஆண்டுகள் பழமையான பாண்டியர் காலத்தைச் சேர்ந்த திருமால் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தை அருங்காட்சியகத்தில் பாதுகாக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வடமலைக்குறிச்சி கண்மாய் பகுதியில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சு.சிவகுமார் ஆகியோர் கள ஆய்வு செய்தபோது, நகராட்சி மயானப்பகுதியில் பாதி உடைந்த திருமாலின் கருங்கற் சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சேதமடைந்த நிலையில், இடுப்புப்பகுதிவரை மட்டுமே உள்ள இச்சிற்பம், முற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் அமைந்துள்ளது.

 

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, "முல்லை நிலக் கடவுளாக மாயோன் எனத் தொல்காப்பியத்திலும், நெடுமால், நெடியோன், நெடுமுடி எனப் பிற இலக்கியங்களிலும் திருமால் குறிப்பிடப்படுகிறார். சங்கு சக்கரம் ஏந்தி நின்ற நிலையிலான நெடியோன் சிலப்பதிகாரத்திலும், கிடந்த கோலம் பெரும்பாணாற்றுப்படை, சிலப்பதிகாரத்திலும் சொல்லப்படுகிறது. பக்தி இலக்கிய காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் திருமால் உருவம் வருணிக்கப்படுகிறது.

10th Century God Mayon Sculpture Discovery!

பொதுவாக நான்கு கைகளுடன் சங்கு, சக்கரம் ஏந்தியவாறு திருமால் சிற்பங்கள் காணப்படும். சங்கு, சக்கரம், முப்புரிநூல் ஆகிய அமைப்பைக் கொண்டு சிற்பத்தின் காலம் கணிக்கப்படுகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட சிற்பத்தின் உயரம் 2 அடி, அகலம் 1½ அடி ஆகும். இதில் நான்கு கைகளுடன் கர்த்தரி முக முத்திரையில் வலது பின் கையில் சக்கரத்தையும், இடது பின் கையில் சங்கையும் ஏந்தியவாறு, காதுகளில் மகர குண்டலங்களுடன், கிரீடமகுடம் அணிந்து திருமால் காணப்படுகிறார். இச்சிற்பத்தில் அவரது இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி உடைந்து போயுள்ளது. அதன் உடைந்த பகுதி இங்கு காணப்படவில்லை. முகமும் தேய்ந்துள்ளது. சிற்ப அமைப்பைக் கொண்டு கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தாக இதைக் கருதலாம்.

 

திருவில்லிபுத்தூர் வடபத்திரசாயி பெருமாள் கோயிலில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறன் சடையன், வீரபாண்டியன் ஆகிய முற்காலப் பாண்டியர்களின் இரு வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. இதன்மூலம், இக்கோயில் முற்காலப் பாண்டியர்களால் கி.பி.10-ம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்டதை அறிய முடிகிறது. திருவில்லிபுத்தூர் கோயில் கட்டப்பட்ட அதே காலத்தைச் சேர்ந்ததாக இச்சிற்பம் உள்ளது. இதை அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.