Skip to main content

மருத்துவர்களின் இறப்பு விசயத்தில் மக்கள் மீது பழிபோட்டு தப்பிக்கும் அரசு!

Published on 24/04/2020 | Edited on 24/04/2020


கரோனா நோய்த் தொற்றால் மரணமடைந்த சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்ட சிலரை தாக்கியதாகக்கூறி பொதுமக்கள் இருபதுபேரை கைது செய்துள்ளனர் சென்னை போலீசார். அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், சட்டவிரோதமாகத் தடுப்பில் வைத்து தாக்குதல், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல், ஊரடங்கு மீறல், தொற்றுநோய் தடுப்புச்சட்ட விதிமீறல் உள்ளிட்ட 17 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
 

''மக்களுக்காக சேவையாற்றியவரின் உடலை அடக்கம் செய்வதை எதிர்ப்பது மனிதாபிமானமற்றது'' என பொதுமக்களின் செய்கையைக் கண்டித்திருக்கிறார், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தலைவர் செந்தில்.
 

doctor - chennai


இதற்கு முன்னர், கடந்த ஏப்ரல் 13 அன்று கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி சென்னையில் இறந்துபோன ஆந்திர மருத்துவர் லட்சுமி நாராயணன் சடலத்தை எரிக்க முயன்றபோதும் இதேபோன்று மக்கள் எதிர்ப்பால் நடுரோட்டில் அவரது சடலம் கிடத்தப்பட்ட அவலம் நேர்ந்திருந்தது. 

சென்னை வானகரத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்த மருத்துவர் லட்சுமி நாராயணனின் உடலை, சென்னை அம்பத்தூரில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டுவதற்காக எடுத்துச் சென்றுள்ளனர், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தினர். ஏற்கெனவே, கரோனா அச்சத்தின்பிடியில் இருத்தப்பட்டிருக்கும் நிலையில் விண்வெளி வீரர்களைப் போல முழுக்கவச உடையணிந்து ஆம்புலன்சிலிருந்து மருத்துவரின் சடலம் இறக்கப்பட்டதை கண்ட மயானத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பீதியடைந்து அடக்கம் செய்ய மறுத்து போலீசிடம் முறையிட்டிருக்கின்றனர். 
 

http://onelink.to/nknapp

 

இவை எதுபற்றியும் அக்கறை கொள்ளாத அப்பல்லோ மருத்துவமனையினர், மயானம் வரையில் சடலத்தை எடுத்து வந்ததோடு தமது கடமை முடிந்துவிட்டதென்று மருத்துவர் லட்சுமி நாராயணின் சடலத்தை அங்கேயே இறக்கிவைத்துவிட்டு கிளம்பிவிட்டனர். மருத்துவர் லட்சுமிநாராயணின் சடலத்துடன் அவரது உறவினர் ஒருவர் மட்டுமே உடனிருந்திருக்கிறார். 
 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் உடல் எரியூட்டப்படுவதற்காக எடுத்து வரப்பட்டிருப்பதையறிந்த பகுதி மக்களும் சடலத்தை எரிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேறுவழியின்றி, இரவோடு இரவாக எங்கு கொண்டுபோய் எரிக்கிறோம் என்பதைக்கூடத் தெரிவிக்காமல், போரூர் மின்மயானத்திற்கு எடுத்துச் சென்று போலீசார் எரியூட்டியிருக்கின்றனர்.
 

cccc

 
இவ்விரு சம்பவத்திலும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பது மட்டுமே ஊடகங்களில் செய்தியாக்கப்படுகிறதேயொழிய, கரோனா தொற்றால் மரணமடைந்தவர்களின் சடலங்களை இறுதி அடக்கம் செய்ய உரிய முறையை நடைமுறைப்படுத்த அரசு முயற்சித்ததா என்ற கேள்வி எழுப்பப்படுவதில்லை. மக்கள் மீதே மொத்தப் பழியும் போடப்படுகிறது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் சடலங்களைப் பாதுகாப்பான முறையில் எவ்வாறு அடக்கம் செய்யப்பட வேண்டுமென்று அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பலவிசயங்களைப் பட்டியலிடுகிறது. 
 

''இறந்தவர் உடலை அதற்கென உள்ள பிளாஸ்டிக் பையில் வைத்து முழுமையாகச் சுற்ற வேண்டும். அந்தப் பிளாஸ்டிக் பை மீது ஒரு சதவீதம் சோடியம் ஹைப்போ குளோரைடு கொண்டு தெளிக்க வேண்டும். இறந்தவர்களின் உடலை கையாளுபவர்கள் சர்ஜிகல் முகக்கவசம், கையுறை அணிந்து இருக்க வேண்டும்.
 

பணியாளரைத் தவிர வேறு யாரும் இறந்தவர் உடலைத் தொட அனுமதிக்கக் கூடாது. இறந்தவரின் உடலைக் குளிப்பாட்டுதல், கட்டி அணைத்தல், முத்தம் கொடுத்தல் போன்றவற்றைச் செய்ய அனுமதிக்கக்கூடாது. தகனம், அடக்கம் முடிந்ததும் அந்த இடத்தில் இருந்த பணியாளர்கள், இறந்தவரின் உறவினர்கள் சுகாதார முறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றவேண்டும்.'' என்கிறது அரசின் வழிகாட்டு நெறிமுறைகள். குறிப்பாக, மருத்துவர் லட்சுமிநாராயணன் உடலை எரியூட்டச் சென்ற சம்பவத்தில், சம்பந்தபட்ட மயான ஊழியர்களுக்கு முன்கூட்டியே தகவல்கூடத் தெரிவிக்கப்படவில்லை. அவர்களுக்கான பாதுகாப்பு கவசங்களை வழங்கி, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி எரியூட்டப்படுவதை உத்தரவாதப்படுத்தும் பொறுப்புடைய சுகாதாரத்துறையைச் சேர்ந்த பணியாளர்கள் எவரும் அங்கில்லை. 
 

முகக்கவசம் அணியாமல் செல்வோரை மறித்து அபராதம் வசூலித்தும்; உரிய அனுமதியின்றி ரோட்டில் நடமாடுபவர்களைப் பிடித்து அவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்துப் பேரிடர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைப்பதில் காட்டுகிற முனைப்பில், இம்மியளவைக்கூட இந்த இரு மருத்துவர்களின் இறப்பு விசயத்தில் கடைபிடிக்கத் தவறியிருக்கிறது, எடப்பாடி அரசு.
 

http://onelink.to/nknapp

 

இக்கட்டான தருணத்திலும், மற்றவர்களைக் காட்டிலும் நோய்த்தொற்றும் அபாயம் நிறைந்த பணிச்சூழலிலும் மருத்துவர்கள் அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். மருத்துவர்களின் இத்தகைய சேவையின் பால் அரசு மதிப்பளிப்பது ஒருபுறமிருக்கட்டும்; குறைந்தபட்சம் கரோனா நோய்த்தொற்றால் இறந்துபோன நோயாளி என்ற அளவில்கூட அவர்களது சடலங்களைப் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அக்கறைகூட அரசுக்கு இல்லை என்பதைத்தான் இவ்விரு மருத்துவர்களின் சம்பவங்களும் உணர்த்துகின்றன. இது கரோனாவை எதிர்த்துப் போரிடும் களப்போராளிகளான மருத்துவர்களின் மன உறுதியைக் குலைக்கக் கூடியதுமாகும். 
 

கரோனா அச்சத்தைத் தாண்டி, நாட்டு மக்கள் அனைவரும் தொழில் முடக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்து நிலைகுலைந்து போயிருக்கின்றனர். முப்பது நாட்களைக் கடந்த முடக்கம் ஒருபக்கம் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறதென்றால், வாட்சப் வதந்திகள் உள்ளிட்ட பீதியூட்டும் செய்திகளும் தன்பங்கிற்கு அவர்களை மேலும் பீதியடையச் செய்கின்றன. 

அரசு நிர்வாகம்தான் உரிய முன்னேற்பாடுகளையும் அம்மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையிலான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்க வேண்டும். இவையெதுவும் நடக்கவில்லை.  அரசு தான் வகுத்து வைத்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளைக்கூட கடைப்பிடிக்காமல் மிகவும் அலட்சியமாக நடந்துகொள்வதில் இருந்தும்தான் மக்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். 
 

கையுறைகளும் முகக்கவசங்களுமின்றி பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்கள் தொடங்கி, சுகாதாரப் பணியாளர்கள், போலீசார்கள் வரையிலான தமது ஊழியர்கள் இன்றுவரையில் எந்நேரமும் நோய்த்தொற்றுக்குள்ளாகும் அபாயத்திற்கு மத்தியில்தான் பணியாற்றிவருகின்றனர். அத்தகைய மக்கள் சேவையில் ஈடுபடும்போது நோய்த்தொற்றுக்குள்ளாகி இறக்க நேரிட்டால், கவுரமான முறையில் அடக்கம் செய்யக்கூட அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பதுதான் இந்த அரசின் யோக்கியதை.
 

புள்ளிவிவரங்களோடு, தலைமைச் செயலரும் சுகாதாரத்துறை செயலரும் தினந்தோறும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி ''எல்லாம் சரியாக நடைபெற்றுவருகிறது'' என்று கணக்கு காட்டுவதற்குத்தான் அரசு மெனக்கெடுகிறதேயன்றி, உண்மையில் மக்களைப் பாதுகாப்பதற்கான முறையான எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை என்பதையே இந்த இரு சம்பவங்களும் உணர்த்துகின்றன. 
 

 

- இளங்கதிர்